2014 நவம்பர் 15, 16 தேதிகளில் இரண்டு நாள் சங்க இலக்கியப் பயிலரங்கம் Indian Association of North Texas அரங்கத்தில் நடைபெற்றது. புரவலர் பால் பாண்டியன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் திருமதி. வைதேகி ஹெர்பர்ட் இந்தப் பயிலரங்கத்தை நடத்தினார். பதினெட்டு சங்க நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முதல் நபரான இவர், சாமானியத் தமிழர்கள் சங்க இலக்கியத்தை எப்படி அணுகுவது என்பதற்கான பயிலரங்கங்களை நடத்துவதாகக் குறிப்பிட்டார்.
முப்பதுக்கும் மேற்பட்ட சங்கப் பாடல்களை தமிழ்–ஆங்கில விளக்கத்துடன் படித்து எளிதாக விவரித்தார். முல்லைப்பாட்டு முழுவதையும் பங்கேற்பாளர்கள் அவருடன் இணைந்து படித்து அறிந்தனர். கிரேக்கர்கள் 'பொன்' (தங்கம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை) கொண்டுவந்து, 'மிளகு' வாங்கிச் சென்றனர் என்பது போன்ற பல அரிய தகவல்கள் இங்கே அறிய முடிந்தது. குறிஞ்சிப் பாட்டில் மட்டுமே 99 வகையான பூக்கள் இடம்பெற்றுள்ளன. வைதேகியைத் தொடர்பு கொண்ட தமிழகத்தின் ஒரு கட்டிட நிறுவனம், அவரது வழிகாட்டுதலுடன், சங்ககால மரம், செடிகளைக் கொண்ட குடியிருப்புப் பகுதியை உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
18 நூல்களையும் உள்ளடக்கிய வைதேகியின் ஆங்கில மொழிபெயர்ப்பை 10 தொகுதிகளாக அமெரிக்காவில் உள்ள Digitalmaxim பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். தமிழ் ஆர்வலர், பதிப்பாளர் திருமூர்த்தி இந்த நூல்களை அடக்க விலைக்கே வழங்கி வருகிறார். டாலஸ் பயிலரங்கத்தில் புத்தகங்கள் அடக்க விலையை விட குறைவாக கிடைக்க புரவலர் பால் பாண்டியன் ஏற்பாடுகள் செய்து இருந்தார். பதிப்பாளர் திருமூர்த்தியும், வைதேகியும் தமிழகத்தின் கல்லூரிகள், நூலகங்கள் போன்றவைகளுக்கு இதுவரையிலும் இருநூறு பிரதிகள் வரை இலவசமாக வழங்கியுள்ளனர், டிஜிடல் வடிவத்தில் வெளியிடுவதற்கும் திருமூர்த்தி முயற்சி எடுத்துவருகிறார்.
இத்தகைய பயிலரங்களை உலகமுழுவதும் நடத்தத் தயாராக இருப்பதாக வைதேகி தெரிவித்தார். www.learnsangamtamil.com என்ற வலைத்தளத்தில் அவருடைய புத்தகங்கள் இலவசமாக கிடைக்கின்றன. நிகழ்ச்சியை மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம், சாஸ்தா தமிழ் அறக்கட்டளை, அவ்வை தமிழ் மையம் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து நடத்தின.
சின்னமணி, டாலஸ் |