அபிநயா: 'அர்ஜுனா'
2014 நவம்பர் 15, 16 தேதிகளில் அபிநயா டான்ஸ் கம்பனி ஆண்டின் நிறைவு நிகழ்ச்சியாக 'அர்ஜுனா' என்ற கருத்திலான நாட்டிய நிகழ்ச்சியை சான் ஹோசேவில் உள்ள மெக்சிகன் ஹெரிடேஜ் ப்ளாசாவில் வழங்கினர். இது மகாபாரதத்தில் பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. அர்ஜுனனின் இளம்பருவத்தில் அவனுடைய சகோதர்களிடம் அன்பு, ஏகலவ்யனின் திறமை கண்டு வியப்பு, கர்ணனோடு விரோதம், திரௌபதி சுயம்வரத்தில் வென்ற மகிழ்ச்சி, அவளுடைய வஸ்திராபரஹரணத்தில் ஏற்படும் ஆக்கிரோஷம், தன் மூதாதயருடன் போர் புரியத் தயக்கம், கிருஷ்ண பகவானுடைய கீதோபதேசத்தினால் பிறக்கும் தெளிவு, சூழ்ச்சியால் அமைக்கப்பட்ட சக்கர வியூகத்தில் மகன் அபிமன்யுவின் மரணம் கண்டு ஏற்பட்ட துயரம், இறுதியில் கர்ண வதம் என்று உணர்ச்சி கொப்பளிக்கும் சம்பவங்களின் தொகுப்பாக அமைந்திருந்தது.

நாட்டியப் பள்ளி முதல்வர் மைதிலி குமார், துணைமுதல்வர் ரசிகா குமார் மற்றும் மாளவிகா குமார், பள்ளியில் பயின்று ஆசிரியைகளாகப் பணி புரியும் சிந்து, அஞ்சனா, லக்ஷ்மி, காயத்ரி மற்றும் பள்ளியின் மூத்த மாணவியரின் அபார நடனம், ஆஷா ரமேஷ் அவர்களின் இசையாக்கம், கதையை எளிதில் புரியவைக்க முற்பட்ட விரிவுரை, ஒப்பனை, சிறந்த ஒலி, ஒளி ஆகியவை நிகழ்ச்சியைக் கலை விருந்தாக்கின. "நிகழ்ச்சியின் பல காட்சிகள் நெஞ்சை உருக்கிக் கண்களில் கண்ணீர் வரச் செய்தன" என்று பலரும் பாராட்டிப் புகழ்ந்தனர் பார்வையாளர்கள். பெற்றோர்களோ தம் குழந்தைகளும் ஒரு நாள் இதுபோன்ற நிகழ்ச்சியை வழங்குவார்கள் என்ற நிறைவோடு திரும்பினர்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com