சதுரங்கச் சக்கரவர்த்திகள்
“குவீன்ஸ் காம்பிட், ரை லோபே, என் பஸண்ட்”

உணவகத்திற்குள் அவசரமாக நுழைந்த நண்பர், என் கையிலிருந்த தாளை வாங்கிப் படித்துவிட்டு “அய்ய! அசைவமெல்லாம் சாப்பிடறதில்லை!” என்று திருப்பிக் கொடுத்தார். பாவம் பசி மயக்கத்தில் நான் சதுரங்கத்தைப் பற்றி எழுதி வைத்திருந்த குறிப்புகளை உணவு விலைப் பட்டியல் என்று தவறுதலாக எண்ணி விட்டார் போலும்!

நண்பருக்குப் பசி மயக்கம் என்றால், நடந்து முடிந்த உலக சாம்பியன்ஷிப் போட்டி மயக்கத்திலிருந்து நான் இன்னும் மீள வில்லை. அர்ஜெண்டினாவின் சான் லூயி நகரில் 2005-ம் ஆண்டு உலக சதுரங்க சாம்பியன் போட்டித் தொடர் நடந்து முடிந்தது. வெற்றி வாகை சூடியவர் பல்கேரியாவைச் சேர்ந்த வெசெலின் டொபலொவ். இரண்டாவது இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாதன் 'விஷி' ஆனந்த் - 2000, மற்றும் 2002 உலக சாம்பியன். இந்த ஆண்டு டொபலொவின் ஆண்டு - இரட்டைச் சுழற் சுற்றாக (double roundrobin) நடந்த 14 ஆட்டங்களில் ஒன்றில்கூடத் தோற்காமல் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருக்கிறார். பாராட்டுக்கள்.

சதுரங்கத்தின் முடிசூடா மன்னனாக வலம்வந்த காரி காஸ்பரோவ் இம்முறை விளையாடவில்லை. என்பது குறிப்பிடத் தக்கது. அதனால் டொபலொவின் வெற்றியை எந்த விதத்திலும் குறைவாக மதிப்பிட வேண்டாம். காஸ்பரோவ் சதுரங்கப் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு எடுத்துக் கொள்வதாக ஜனவரி மாதத்தில் அறிவித்தார். அந்த முடிவைக் கேட்டு “அப்பாடா” என்று பெருமூச்சு விட்டவர்கள் மற்ற சதுரங்க ஆட்டக்காரர்கள் மட்டுமல்ல - இந்தப் போட்டியை 1940-களிலிருந்து நடத்தி வரும் FIDE (Federation Internationale des Echecs) என்ற பிரெஞ்சுப் பெயர் கொண்ட உலக அமைப்பும் தான்! காஸ்பரோவ் முழு மூச்சாக அரசியலில் ஈடுபடப் போவதாகக் கூறி வருகிறார்.

கடந்த பத்தாண்டுகளாக உலக சாம்பியன் ஷிப் தொடரை யார் நடத்துவது என்பதில் பெரிய குழப்பம். 1993-ல் FIDE-ன் மேல் அதிருப்தி கொண்ட காஸ்பரோவ், Professional Chess Association (PCA) என்ற போட்டி அமைப்பைத் துவக்கினார். அதிலிருந்து எப்போதுமே இரண்டு உலக செஸ் சாம்பியன்கள்! PCA-விற்குக் கொடுத்து வந்த ஆதரவை 1995-ல் Intel நிறுவனம் விலக்கிக் கொண்டது. காஸ்பரோவிற்கு உலக சாம்பியன்ஷிப் நடத்துவதற்கான பண நெருக்கடி ஏற்பட்டது. BrainGames.com என்ற நிறுவனத்தின் உதவியுடன் 2000-த்தில் ஒரு போட்டியை நடத்தினார். அதில் விளாடிமிர் கிராம்னிக்கிடம் காஸ்பரோவ் தோற்றார்.

ஆட்டம் நடக்கும் போது சதுரங்க ரசிகர்கள் கிரிக்கெட் ரசிகர்கள் போல் குதித்துக் கும்மாளமிட முடியாது என்றாலும், ஆட்டத்திற்கு வெளியே அதற்குச் சமமான பரபரப்பை சதுரங்க வீரர்கள் எப்போதுமே கொடுத்து வந்திருக்கின்றனர். இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல! விளாடிமிர் கிராம்னிக் இந்த வருடப் போட்டியில் கலந்து கொள்ள FIDE விடுத்த அழைப்பை ஏற்க மறுத்து விட்டார். இந்த விளையாட்டில் வெற்றி பெரும் வீரரோடு தனியாக ஒரு போட்டி நடத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதை FIDE நிராகரித்து விட்டது. அதனால் டொபலொவ் உலக சாம்பியன் ஆனாலும், சிலர் கிராம்னிக்தான் இன்னும் உலக சாம்பியன் என்று கருதுகின்றனர்!

எண்பதுகளில் சாம்பியனாகத் திகழ்ந்த அனாடோலி கார்ப்போவும், காரி காஸ்ப ரோவும் ஐந்து முறை உலக சாம்பியன்ஷிப் ஆட்டத்தில் மோதியிருக்கின்றனர். அதில் 1984-ல் இருவருக்கும் நடந்த ஆட்டம் ஒரு பெரிய போராட்டமாகவே மாறியது. கார்ப்பாவ் முதல் 4 ஆட்டங்களை வென்றார். ஆனால் தொடர்ந்து ஆட்டங்கள் வெற்றி தோல்வியில்லாமல் முடிந்தன. 47, 48 வது ஆட்டங்களை காஸ்பரோவ் வென்றார். நான்கு மாதங்கள் போட்டி தொடர்ந்தது. கார்ப்போவின் உடல் நிலை பாதிக்கப் பட்டது. அவர் 20 பவுண்டுகளுக்கும் மேல் எடை இழந்தார். மருத்துவமனையிலிருந்து விளையாட்டைத் தொடர விருப்பம் தெரிவித்தார். கார்ப்போவைவிட 12 வயது இளையவரான காஸ்பரோவும் ஆட்டத்தை நிறுத்தக்கூடாது என்று ஆட்சேபித்தார். அறிவுத்திடம், மனத்திடம், உடல்திடம் எல்லாமே சேர்ந்துதான் வெற்றியை நிர்ணயிக்கிறது என்று வாதிட்டார். ஆனால் இருவர் விருப்பத்திற்கும் எதிராக FIDE ஆட்டத்தை நிறுத்த முடிவு செய்தது. ஒரு வருடம் கழித்து புதிதாகத் தொடங்கிய தொடரில் காஸ்பரோவ் கார்ப்போவைத் தோற்கடித்தார். இது போன்ற நிகழ்ச்சிகளும் காஸ்பரோவிற்கும், FIDE-க்கும் இடையே விரிசலை அதிகப்படுத்தின.

கார்ப்பாவிற்கும், ரஷ்யாவிலிருந்து வெளி யேறிய விக்டர் கொர்ச்சினொய்க்கும் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் ஆட்டங்கள் (1978, 1981) பல சுவாரசியமான நிகழ்ச்சி களைக் கொண்டவை. கார்ப்பாவிற்குக் கொடுக்கும் தயிர் (yoghurt) மூலம் ஆட்டத்தைப் பற்றிய குறிப்புகளை அனுப்புவ தாக கொர்ச்சினொய் குற்றம் சாட்டியது, தன்னை மனவியல் மூலமாகத் தளர்ச்சி அடையச் செய்வதாகக் கூறிப் பிறர் பார்வையைப் பிரதிபலிக்கும் வகையில் கொர்ச்சினொய் கண்ணாடி அணிந்து வந்தது எல்லாம் சதுரங்கத்தில் ஈடுபாடு இல்லாதவரையும் அந்த ஆட்டங்களைத் தொடர்ந்து கவனிக்க வைத்தன!

அனைவருக்கும் நினைவில் நின்ற ஆட்டம் அமெரிக்கச் சாம்பியன் பாபி ·பிஷருக்கும், ரஷ்ய சாம்பியன் போரிஸ் ஸ்பாஸ்கிக்கும் 1972-ல் நடந்த போட்டி. இரண்டாவது உலகப் போருக்குப் பின் முதன் முறையாக ரஷ்யர் அல்லாதவர் ஒருவர் உலக சாம்பியன் ஷிப் ஆட்டத்தின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்ததார். அதுவே 'நூற்றாண்டின் ஆட்டம் (Match of the century)' என்று கருதப்படுகிறது. அமெரிக்க மக்கார்த்தியர் களோ அதை முதலாளித்துவத்திற்கும், கம்யூனிஸத்திற்கும் நடந்த போட்டியாகவே கருதினர். மோசமாக ஆட ரம்பித்த ·பிஷர் பல காரணங்களைக் காட்டி ஆட்டத்தை நிறுத்தப் பார்த்தார். வெற்றிப் பணத்தை இரட்டிப்பாக்கியது முதல், ஹென்றி கிஸிஞ்சர் தொலைபேசியில் அழைத்து தொடர்ந்து ஆடுமாறு வேண்டிக் கொண்டது வரை பல முயற்சிகள் செய்து அவரை விளையாட வைத்தனர். இறுதியில் 12.5 - 8.5 என்ற கணக்கில் ·பிஷர் வென்றார்.

ஆனால் 1975-ல் கார்ப்பாவுடன் விளையாடப் பல நிபந்தனைகள் விதித்தார். எல்லா நிபந்தனைகளையும் FIDE ஏற்றுக்கொள்ள மறுத்தது. அதனால் ·பிஷருடன் விளையா டாமலேயே கார்ப்பாவ் புதிய சாம்பியன் ஆனார். அதன் பிறகு ·பிஷர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடவில்லை. தான் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் யாரிடமும் தோற்காததால் தன்னை இன்னமும் உலக சாம்பியன் என்று கருதியே பேசி வருகிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டு களுக்குப் பின் 1992-ல் ·பிஷருக்கும், ஸ்பாஸ்கிக்கும் மறுபடியும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. யுகோஸ்லாவியாவில் நடந்த போட்டியில் ஐ.நா. விதித்திருந்த தடையை மீறி ·பிஷர் பங்கெடுத்துக் கொண்டார். அமெரிக்க அரசு அவரைக் கைது செய்ய உத்தரவிட்டது. 10 வருடங்களுக்கு மேலாக அமெரிக்க அரசிடம் இருந்து தப்பி ஒளிந்து வசித்து வருகிறார்.

கடந்த ஆண்டு (2004-ல்) காலாவதியான அமெரிக்க பாஸ்போர்ட்டுடன் பயணம் செய்ததற்காக ஜப்பானில் கைது செய்யப் பட்டார். அங்கிருந்து ஐஸ்லாந்திற்கு அடைக்கலம் கேட்டு மனுச் செய்தார். முதலில் மறுத்தாலும், மனம் மாறி ஐஸ்லாந்து அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. அவரது குணாதிசயங்களைப் பார்த்து ·பிஷர் வெறும் பேச்சுதான் - ஆக்க பூர்வமற்றவர் என்று எண்ணிவிட வேண்டாம். சதுரங்கத்தில் தொடக்க நிலை ஆட்டங் களில் பல புதிய மாற்றங்கள் செய்தது மட்டுமன்றி, ·பிஷர் தான் கண்டுபிடித்த செஸ் கடிகாரம் ஒன்றிற்கும் U.S. Patent வைத்திருக்கிறார்.

சதுரங்க உலக சாம்பியன்ஷிப் விதிகளில் பல மாற்றங்களை இந்த வருடம் FIDE கொண்டு வந்திருக்கிறது. இந்த ஆண்டு முதல் உலக சாம்பியன்ஷிப் தவிர உலகக் கோப்பை ஆட்டமும் அறிவித்திருக்கிறது. விதிமுறைகளில் பலரும் சுட்டிக்காட்டும் குறைகளை இம்மாற்றங்கள் சரி செய்யும் என்று எதிர்பார்க்கிறது. அதில் குறிப்பிடத் தக்க மாற்றம் முதல் முறையாக பெண் களையும் உலக சாம்பியன்ஷிப் ஆட்டத்தில் பங்கேற்க அனுமதிப்பது. அந்தப் புதிய விதிமுறைப்படி ஹங்கேரியைச் சேர்ந்த ஜூடித் போல்கார் இந்த ஆண்டு பங்கேற்றார். பெண் ஆட்டக்காரர்களில் முதலாவதாகவும், உலகத்தில் எட்டாவது இடத்திலும் இருக்கும் இவரது வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. இந்த ஆண்டுப் போட்டியில் கடைசியாக வந்தாலும் இவரது பங்கேற்பு சதுரங்க உலகில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.

சரித்திரத்தைப் பற்றி பேசும் போது, கடந்த 30 ஆண்டுகளில் சதுரங்க ஆட்டத்தில் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங் களைக் குறிப்பிட வேண்டும். இம் முன்னேற்றங்களுக்கு மானுவல் ஆரான் போன்ற முன்னோடிகளும் காரணம். ஒன்பது முறை இந்தியாவின் தேசிய சாம்பியனாக வெற்றி பெற்ற ஆரான் ஆட்டத்திலிருந்து விலகி சதுரங்கத்தைப் பரப்புவதில் கவனம் செலுத்தினார். அவரது சிறப்புப் பேட்டியைத் தென்றல் (அக்டோபர் 2003) இதழில் காணலாம்.

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் என் அமெரிக்க நண்பர்களிடம் பூஜ்ஜியமும், சதுரங்கமும் இந்தியாவின் கண்டு பிடிப்புக்கள் என்று நான் பெருமை அடித்துக் கொள்வ துண்டு. ஆனால் இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர்களே இல்லாமலிருந்தது ஒரு பெரிய குறையாகவே இருந்தது. அந்தக் குறையை 1988-ல் தனது 18-வது வயதில் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனதன் மூலம் தீர்த்து வைத்தார். அவருக்குக் கிடைத்த புகழால் ஈர்க்கப்பட்டு பல இளைஞர்கள் சதுரங்கத்தில் ஈடுபாடு கொண்டனர். FIDE-ன் கணக்குப்படி இப்போது இந்தியாவில் மொத்தம் 11 கிராண்ட் மாஸ்டர்கள், 6 பெண் கிராண்ட் மாஸ்டர்கள், 41 இண்டர்நேஷனல் மாஸ்டர்கள், மற்றும் 9 பெண் இண்டர்நேஷனல் மாஸ்டர் கள்! புலம் பெயர்ந்து வாழும் இந்த அமெரிக்க மண்ணிலும் அமெரிக்க இந்திய இளைஞர்கள் சதுரங்கத்தில் வெற்றி வாகை சூட வேண்டும்.

சேசி

© TamilOnline.com