மரியாதை
மரியாதை மனதிலிருந்துதான் வரவேண்டும். யார் மனதிலிருந்து?
இன்று முகநூலில் பலர் மரியாதையின்றி சர்வசாதாரணமாய் அடுத்தவர் மனம் புண்படப் பேசுவதைப் பார்க்கும்பொழுது இந்தப் பழமொழியில் ஐயம் தோன்றுகின்றது.

மரியாதை என்றால் என்னவென்று புரிய வைத்த சில சம்பவங்கள் இதோ...

என் அப்பா அம்மா அமெரிக்கா வந்திருந்த பொழுது மெழுகு பொம்மைக் காட்சிக்கு (Wax Museum) அழைத்துச் சென்றோம் அங்கே அமெரிக்க அதிபர் ஒபாமா கைகட்டிக் குனிந்து நிற்பது போன்ற ஒரு மெழுகுச்சிலை. அதனருகில் மேஜை, நாற்காலி. அதில் உட்கார்ந்து ஒபாமா தனக்குச் சேவகம் செய்வது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். விளையாட்டான புகைப்படம்தான்.

நாங்கள் எவ்வளவோ சொல்லியும் என் அப்பா அப்படிப் புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. "அவர் இந்த நாட்டோட அதிபர். நான் ஒரு சாதாரண மனுஷன். அவர் எனக்குக் கைகட்டிச் சேவகம் பண்றதா! விளையாட்டானாலும் வேண்டாம்... அதெல்லாம் தப்பும்மா" என்று சொல்லிவிட்டார்

சில நாட்களுக்கு பின் என் மாமனார் மாமியார் அமெரிக்கா வந்தனர். ஆச்சரியம் என்னவென்றால், மாமனாரும் அதே பதிலைக் கூறி அந்தப் புகைப்படத்தை எடுத்துக்கொள்ள மறுத்ததுதான்.

மற்றுமொரு சம்பவம்:
என்னுடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் விடுமுறைக்கு இந்தியா செல்லவிருந்தார் அவரிடம் ஒரு பொருளைக் கொடுத்தனுப்பும்படி என் அப்பாவிடம் சொன்னேன்.

"அப்பா, இதான்பா அவனோட ஃபோன் நம்பர். ஒரு மணிக்கு ஃப்ளைட் லேண்ட் ஆகும். காலைல ஃபோன் பண்ணினா அவன்கிட்ட பேசலாம்"

"சரிம்மா அவர்கிட்ட என் ஃபோன் நம்பர் குடுத்து இருக்கியாம்மா? அவர் சென்னையில எங்க இருக்காரு. அவருக்கு ஏர்போர்ட்ல சிரமமா இருக்கும்னா நான் மறுநாள் அவர் வீட்டுக்கு வேணும்னாலும் போறேன்மா."

நான் இடைமறித்தேன். "அப்பா அவன் என் டீம்லதான் வேல பாக்கறான். என்ன விடவும் 4-5 வயசு சின்னப் பையன். அவன் இவன்னே சொல்லலாம்."

"அதெப்படிம்மா நான் அவர இதுவரைக்கும் பார்த்ததே இல்ல, எனக்கு அவர் யாருன்னே தெரியாது. உன்கூட வேல பார்க்கறதால நட்புரீதியா நீ வேணும்னா நீ, வா, போ, அப்டின்னு பேசலாம். அதுக்காக நானும் அப்படிப் பேசறது தப்பு இல்லையா? அதுவும் இல்லாம உன்கூட வேல பார்க்கராருன்னு சொல்ற அப்போ நல்லா படிச்ச்சவராதான் இருக்கணும். பெரிய கம்பெனில நல்ல வேலைல இருக்காரு. அவர் படிப்பு வேலைக்கெல்லாம் நான் மரியாதை குடுக்கணும் இல்லையா? வயசுல பெரியவன்னு நான்பாட்டுக்கு மரியாதை இல்லாம பேசறதெல்லாம் தப்பும்மா" என்றார் .

இதோ என் புதுமொழி: "மரியாதை என்பது பெற்றோர் மனதில் இருந்துதான் பிள்ளைகளுக்கு வரும்". சரிதானே?

ஸ்ரீவித்யா,
ரிச்மண்ட், வர்ஜீனியா

© TamilOnline.com