கல்விக்கான உயரிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (AdvancEd) மினசோட்டா, மிசெளரி தமிழ்ப்பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முழுப் பரிந்துரையை அக்டோபர் மாதத்தில் வழங்கியிருக்கிறது. மே 2014ல் ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளி AdvancEd வாயிலாக அங்கீகாரம் பெறும் முதல் தமிழ்ப்பள்ளி ஆனது.
அட்வான்செட் (AdvancEd) நிறுவனம் கல்வி நிலையங்களின் ஆற்றலைப் பல பரிமாணங்களில் ஆய்வுசெய்து தரச்சான்றிதழ் வழங்கும் உலகளாவிய நிறுவனம். அமெரிக்க நாட்டின் 50 மாநிலங்களிலும் ஏற்கத்தக்க கல்வி மதிப்பீட்டு நிறுவனம் அட்வான்செட் ஒன்றுதான். அது வரையறுக்கும் பள்ளி மதிப்பீடுகளை மீறியதொரு தரம் இன்றுவரை எதுவுமில்லை.
அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகம் (அ.த.க. - American Tamil Academy) ஒரு லாபநோக்கற்ற வரிவிலக்குப் பெற்ற கல்வியமைப்பு. இது 4 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டது. முதற்கட்டமாக இது அறிமுகப்படுத்திய ஒருங்கிணைந்த பாடத்திட்டம் தற்பொழுது 62 பள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் அமெரிக்கா மட்டுமின்றி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் இயங்கும் பல பள்ளிகளும் அடங்கும்.
இதுவரை 8 நிலைகள் உருவாக்கப்பட்டு 3500க்கும் மேற்பட்ட மாணாக்கர் தமிழ் பயின்று வருகிறார்கள். தமிழ்ப்பள்ளிகளும் மாணாக்கரும் பயன்படுத்தும் கல்வி மேலாண்மை மென்பொருளை நிறுவி உதவியுள்ளது அ.த.க. மேலும், மின்கற்றலுக்கான பாடங்களையும் உருவாக்கி வருகிறது, இவற்றின் மூலம் வகுப்பறைக்கப்பால், மேனிலை மாணாக்கர் பழகுதமிழ் இலக்கணம் பயிலவும், அறிமுகநிலை மாணாக்கர் ஊடாட்டுக் கருவிகள் வாயிலாக அடிப்படைத் தமிழ் கற்கவும் வகை செய்துள்ளது.
அட்வான்செட் நிறுவனத்தைச் சார்ந்த வெவ்வேறு தனிநபர் குழுக்கள் மினசோட்டா, மிசௌரி, ஹூஸ்டன் பள்ளிகளை ஆய்வு செய்தன. இருப்பினும் ஆய்வின் முடிவுரையாக அவர்கள் குறிப்பிட்டது, "எங்களின் 30 ஆண்டு கல்வித்துறை அனுபவத்தில் இத்தமிழ்ப்பள்ளி அமைப்புகள் போன்றதொரு தன்னார்வக் கல்வி நிறுவனத்தைக் கண்டதில்லை" என்பதுதான். இந்த அங்கீகாரம் முதற்படிதான். இது மற்ற மாநிலங்களுக்கும் பரவ உதவும்.
மினசோட்டா, மிசௌரி, ஹூஸ்டன் ஆகிய 3 தமிழ்ப் பள்ளிகளும் அரசு நடத்தும் பொதுப்பள்ளிகள் பெற்ற சராசரிப் புள்ளிகளை விட, அதிகப் புள்ளிகள் பெற்று சீர்மிகு தரத்துடன் நடப்பதாக, அட்வான்செட் தனது இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
மா. சிவானந்தம், அ.த.க. அங்கீகாரக் குழு சார்பில் |