ஆண்டுதோறும் சென்னையில் மார்கழி மாதம் நடைபெறும் மிகப்பெரும் கலைவிழாவான 'சென்னையில் திருவையாறு' இந்த ஆண்டு டிசம்பர் 18 முதல் 25 வரை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெறும். திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாவில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கென இந்த பிரம்மாண்டமான இசை விழா சென்னையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
மூத்த கர்நாடக சங்கீதக் கலைஞர் பத்மபூஷண் பி.எஸ். நாராயணசாமி அவர்கள் தலைமையில் அனைத்து சங்கீதக் கலைஞர்களும் ஒன்றிணைந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடுவது இவ்விழாவின் சிறப்பம்சம்.
துவக்க நாளான டிசம்பர் 18ம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு திருவிழா ஜெய்சங்கர் அவர்களின் நாதஸ்வரத்துடன் விழா ஆரம்பமாகும். அதைத் தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஐநூறுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இசைப்பர். துவக்க விழா நிகழ்விற்கு அனுமதி இலவசம். இதனைத் தொடர்ந்து மரியாதைக்குரிய முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் பத்தாம் ஆண்டு விழாவினைக் குத்துவிளக்கேற்றித் துவக்கி வைப்பார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இசையுலகின் மூத்த கலைஞர் ஒருவர், நிகழ்ச்சியை வழங்கும் கலைஞர்களைக் கௌரவிப்பார்.
இந்த எட்டு நாட்களிலும் வளரும் கலைஞர்களில் தொடங்கி மூத்த புகழ்பெற்ற வித்வான்கள் வரை கர்நாடக இசை, ஹரிகதை, பரதநாட்டியம் எனச் சங்கீதத்தோடு தொடர்புடைய அனைத்துக் கலைகளையும் ரசிகர்களுக்கு வழங்கி ஆனந்தப்படுத்துவார்கள். அரங்கின் வெளிமண்டபத்தில் இசைத்துறை பற்றிய கண்காட்சி, விற்பனை அரங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உணவுத் திருவிழா இதில் உணவகங்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தின் தலைசிறந்த வல்லுநர்கள் சமைக்கும் உணவுகளைச் சுவைக்கவும், பார்வையாளர்களுக்குச் சமையல் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏராளமான பரிசுகளும் உண்டு.
முதியவர்களுக்கு மரியாதை சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள முதியோர் இல்லங்களில் இருப்போர் 500 பேரைத் தினமும் தனிப்பேருந்துகளில் அழைத்து வந்து, காலை உணவு வழங்கி, காலை 7.00 மணிக்கு நடைபெறும் நாமசங்கீர்த்தனம், உபன்யாசம், பக்திப் பிரசங்கம் போன்ற நிகழ்ச்சிகளை இலவசமாகக் கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நிறைவுற்றதும் பிரசாதம் மற்றும் காஃபி வழங்குவதுடன், அவர்களுக்குத் தேவைப்படும் பொருட்கள், அத்தியாவசிய மருந்துகள், சமயப் புத்தகங்கள், குறிப்பேடு, பேனா, முதலுதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய கைப்பை ஒன்றும் வழங்கப்படும்.
எட்டு நாள் நிகழ்ச்சிகளையும் காண சீசன் டிக்கெட்டும், தனி நிகழ்ச்சிகளைக் காண நுழைவுச் சீட்டும் பெறமுடியும்.
நுழைவுச் சீட்டுகள் முன்பதிவு செய்ய: www.lakshmansruthi.com, www.ticketnew.com
மேலும் விபரங்களுக்கு: www.lakshmansruthi.com, www.lakshmansruthi.com/Food-Festival/index.asp
தொடர்புகள் மற்றும் ஆலோசனைக்கு: மின்னஞ்சல் - ct@lakshmansruthi.com தொலைபேசி (சென்னை எண்கள்) - 091 44 44412345, 9941922322, 9841907711, 8807044521
செய்திக்குறிப்பிலிருந்து |