முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 4)
பின்புலம்: சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு உதவுகின்றனர். கிரண் வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்கு வர்த்தகமானாலும் சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்ஃபோர்ட் மருத்துவமனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிபவள். மூவரும் துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

இதுவரை: ஷாலினி தன் தம்பி கிரண் வீட்டிற்கு அம்மா அனுப்பிவைத்த உணவைக் கொடுக்க் வருகிறாள். கிரண் ஒரு முப்பரிமாண ப்ரின்டரை வைத்துத் தயாரித்த போர்ஷா கார் மாடலின் நுணுக்கமான அம்சங்களைப் பார்த்து அது ப்ரின்டரில் தயாரானது என்று நம்ப மறுக்கவே, கிரண் புதிதாகப் பதித்துக் காட்டி வியப்பளிக்கிறான். அப்போது, ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து சூர்யாவின் உதவி கேட்டு மின்னஞ்சல் வரவே இருவரும் சூர்யாவின் வீட்டிற்கு விரைகின்றனர். அங்கு அவர்களை வரவேற்ற பெண்மணியிடம் சூர்யா ஓர் அதிர்வேட்டு யூகத்தை வீசினார். பிறகு...

*****


தங்களைக் குட்டன்பயோர்க் நிறுவனத்தின் முன்கூடத்தில் வரவேற்ற அழகான ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணியான அகஸ்டா க்ளார்க்கைப் பார்த்து கிரண் வாய்பிளந்து ஷாலினியிடம் கிசுகிசுத்தான். "ஷால், பரவாயில்லயே, ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண். விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடம் நடத்துறா பாத்தியா? அதுக்கும் மேல எனக்கென்ன குஷின்னா, பாத்தா விஞ்ஞானி மாதிரி வறக்குன்னு காஞ்சுபோய் இல்ல. சும்மா தளதளன்னு... வயசுகூட என்ன, முப்பதுதான் இருக்கும் போலிருக்கு."

ஷாலினி கிரணை முறைத்துவிட்டுப் பட்டென அவன் கையில் அடித்து, "கொஞ்சநேரம் ஒன் திருவாய மூடிட்டிருக்கயா ப்ளீஸ். ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தறது ஒண்ணும் உலக அதிசயம் இல்லை. எனக்குத் தெரிஞ்சே சில நிறுவனம் இருக்கு. ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் நடத்தறது கொஞ்சம் அதிசயந்தான் ஒத்துக்கறேன். ஆனா, அதுல அவ அழகா இருக்கான்னு கொச்சப்படுத்தாதே. அவங்களோட திறமையையும் சாதனையையும் பாத்து பாராட்டு. அதுக்கும் மேல போய் அவங்ககிட்ட லைனப் போட்டு வாலாட்டி வைக்கப் போறே, சரியா சமர்த்தா, வந்த வேலையைப் பாத்தோமா, நடையைக் கட்டினோமான்னு இருக்கணும், என்ன?" என்றாள்.

கிரண் குனிந்து வணங்கிப் போலிப்பணிவுடன், "அய்யய்யோ, நீ சொல்லிட்டா அப்புறம் அப்பீல் ஏது? நான் சமர்த்தாவே இருக்கேன். ஆனா, அவங்க என்கிட்ட எதாவது சிரிச்சு மயக்கிட்டாங்கன்னா, நான் பொறுப்பில்லப்பா. என் இளவயது ஆண் தர்மத்த்தின்படி நடந்துக்க வேணாமா?"

ஷாலினி ஆள்காட்டி விரலை ஆட்டிக் கிரணைஎச்சரித்துக் கொண்டிருக்கையில்தான் சூர்யா யூகத்தை எடுத்து வீசி அகஸ்டா க்ளார்ர்கை அதிரச் செய்தார். "ஒ மிஸஸ். க்ளார்க்! உங்களைச் சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம். நீங்க ஜமெய்க்கால பிறந்தீங்க போலிருக்கு. எனக்கு ரொம்பப் பிடிச்ச உல்லாசப் பிரதேசம் அது. ரொம்ப நல்ல ஜனங்க. ஆனா சின்ன வயசுலேந்து ஆழ்ந்த அமெரிக்கத் தெற்குப்பகுதியில், அதுவும் அலபாமாவில இனக்கலப்புச் சிறுமியா வளர்ந்தது கஷ்டமாத்தான் இருந்திருக்கும். ஒருவேளை உங்க அப்பா அம்மா ரெண்டுபேரும் பல்கலைக் கழகத்துல விஞ்ஞான ஆராய்ச்சிப் பேராசிரியர்களா இருந்ததுனால கொஞ்சம் பாதுகாப்பா நல்ல சூழ்நிலையில வளர்ந்திருப்பீங்க. ஒரு பிரபல ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் விஞ்ஞானியோட பேரையே உங்களுக்கு ஒரு தூண்டுதலா வச்சிருக்காங்க, சபாஷ்! அப்புறந்தான் MITக்குப் போய் முனைவர் படிப்பு படிச்சு ஒரு அன்புக் கணவரையும் அங்கயே அடைஞ்சிட்டீங்களே. இப்ப மூணு வருஷமா குட்டன்பயோர்க் ஸ்தாபிச்சு நடத்தறீங்க; உங்க சாதனைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!"

சூர்யாவின் யூக வேட்டுச் சரவெடியில், அகஸ்டா க்ளார்க் அதிர்ந்தே போனாள். பேச முயன்ற அவளது வாய், வார்த்தை வெளிவிட முடியாமல் திறந்து திறந்து மூடியது. "எது... எப்படி... யார்...?" என்று திணறியவள் திடீரென சினத்துடன் சிலிர்த்துக் கொண்டாள்.

"என்ன இது? நான் என் தொழில்ரீதியான பிரச்னையைப் பத்தி விசாரிச்சு நிவர்த்திக்கத்தானே உதவி கேட்டேன். என் சொந்த பூர்வீகத்தைப் பத்தி ஆதியோட அந்தமா விசாரிச்சிருக்கீங்க. எவ்வளவு காலமா என் வாழ்வைக் குடாய்ஞ்சீங்க?"

ஷாலினி குறுக்கிட்டாள், "சே, சே, அகஸ்டா, அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. எனக்கே ஒரு மணிநேரம் முன்னாடிதான் என் லேப்லேந்து உங்க கோரிக்கைச் செய்தி கிடைச்சது. அரைமணி நேரம் முன்னாடிதான் போய் சூர்யாவை அழைச்சிக்கிட்டு வந்தேன். இங்க இருக்கற தடயங்களை வச்சு மட்டுமே சூர்யா எல்லாத்தையும் யூகிச்சிருக்கணும்... விளக்குங்க சூர்யா, எப்படி அவ்வளவு விஷயங்களைக் கணிச்சீங்க?"

அகஸ்டா நம்பிக்கையின்றி "ஹூம்!" என்றாள். "நீங்க இங்க வந்தே சில நிமிஷங்கள் கூட ஆகலை. அதுக்குள்ள என்ன தடயங்களைக் கவனிச்சிருக்க முடியும். சரி சொல்லுங்க, பாக்கலாம் – அப்படியே இருந்தா பரம அதிசயந்தான்."

கிரண் இடைபுகுந்து குழைந்தான். "ஆஹா, அகஸ்டா, என்ன இப்படி சொல்லிட்டீங்க. நாங்க எடுக்கற ஒவ்வொரு கேஸ்லயும் இதே கதைதான். ஆனா நீங்க மத்தவங்களைவிட எவ்வளவு அழகா... ஹுஹூம், அதாவது என்ன சொல்ல வரேன்னா, எவ்வளவு புத்திசாலியா இருக்கீங்க, உங்களுக்கு சூர்யா எப்படி யூகத்தால கண்டுபிடிச்சார்னு தெரியலங்கறதுதான் பரம அதிசயமா இருக்கு. சூர்யா இப்ப சொல்லிடுவார் பாருங்க, நிச்சயமா ஆச்சர்யப் படத்தான் போறீங்க."

ஷாலினி மீண்டும் கிரணை முறைத்து, அடக்கினாள்!

சூர்யா முறுவலுடன் விளக்கினார். "அதிசயம் ஆச்சர்யம் எல்லாம் ஒண்ணுமில்ல, மிஸஸ் க்ளார்க். நான் சுட்டிக் காட்டினதும் அவ்வளவுதானாங்கப் போறிங்க. பரவாயில்ல சொல்றேன். முதலாவது நீங்க ஜமெய்க்கால பிறந்த கலப்பினப் பெண்ங்கறது உங்க தோற்றத்துலெந்தும், இதோ இந்த மூலையில இருக்கற ஜமெய்க்கக் கொடியுடன் அமைக்கப் பட்டுள்ள ஜமெய்க்கப் பண்பாட்டுச் சின்னங்கள் நடுவுல இருக்கற ரெண்டு படங்களிலேந்தே தெரிஞ்சுடுச்சு. முதல் படத்துல உங்க அம்மா கையில குழந்தையா நீங்க, பக்கத்துல அப்பா. ரெண்டாவது படம் பீச்ல எடுத்தது. நீங்க ஒரு நாலு வயசு இருக்கச்சே எடுத்தது போலிருக்கு, இப்பவும் அந்தச் சாயல் கொஞ்சம் இருக்கு. அந்தப் படத்தோட ஓரத்துல ஜமெய்க்கக் கொடி ஒரு கடையில சொருகியிருக்கறது கூடத் தெரியுது. அதான் ஒருமாதிரி ஜமெய்க்காவில பிறந்திருக்கணும்னு யூகிச்சேன்."

அகஸ்டாவின் முகத்தில் சற்று சந்தேகம் குறைந்தது. சிறிதாக மலர்ந்த வியப்புடன், "ஓ! அது சரிதான். அப்புறம் மீதி விவரமெல்லாம்?"

சூர்யா புன்னகைத்தார். "மீதியெல்லாமும் கிட்டத்தட்ட அதே மாதிரிதான். இதோ பாருங்க தெற்கு அலபாமா பல்கலைக் கழகம் முன்னாடி எடுக்கப்பட்ட படம் இந்த மூலையில். அந்த மூலை பூரா அந்த இடம் பத்தியப் படங்கள்தான். அதுவும் நீங்க பட்டதாரியானப்போ மூணு பேரும் சேர்ந்து எடுத்துக்கிட்ட படம். அதுல உங்க அம்மா அப்பா ரெண்டு பேரும் விஞ்ஞான ப்ரொஃபெஸர்களுக்கே உரித்தான அங்கிகளை அணிஞ்சிருக்காங்க. அதோட அகஸ்டாங்கற ஒரு பெண் விஞ்ஞானியோட படமும் அதுல அவரது சாதனைகளைப் பத்தியும் இருக்கு. நானும் கடந்த ப்ளாக் ஹிஸ்டரி மாதத்துல பத்திரிகைகளில்வந்த கட்டுரைகளில் ஒண்ணுல அலிஸ் அகஸ்டா பால் என்கிற ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி ஹவாய் பல்கலைக் கழகத்துல செய்த சாதனைகளைப் பத்தி படிச்சேன். அதெல்லாம் வச்சு அலபாமா பத்தி சில யூகங்கள்..."

இம்முறை அகஸ்டா முகம் மலர்ந்து கலகலவென நகைத்தே விட்டாள். "வெரி க்ளெவர்! அக்சுவல்லி, அலிஸ் அகஸ்டா எனக்கு அம்மா வழியில சொந்தந்தான். அதுனாலதான் எங்க அம்மா, எனக்கு அவங்க பேரை வச்சு, நானும் ஒரு விஞ்ஞானியா சாதிக்கணும்னு விருப்பப் பட்டாங்க? சரி MIT பத்திய மீதி யூகங்கள் எப்படி?"

சூர்யாவும் சிரித்துக்கொண்டே தொடர்ந்தார். "அவையும், அதே வழிமுறைதான். மிஸஸ் க்ளார்க்குன்னு சொன்னது ஏன்னா, கல்யாணமானவங்கன்னு கைவிரல் மோதிரத்துலேந்தே தெரியுது. மேலும் அந்த மூணாவது மூலையில பார்த்தா ஒரே MIT சம்பந்தப்பட்ட படங்கள், அலங்காரங்கள். அதுலதான் உங்க கணவரோட MIT முன்னாடியும் மற்ற சில இடங்களிலயும் எடுத்துக்கிட்ட படங்கள், மற்றும் ரெண்டு பேரும் உங்க அப்பா அம்மாக்களோடு சேர்ந்தெடுத்த பட்டதாரிப் படங்கள் ... இதெல்லாம் மூட்டையாக் கட்டி கடைசி யூகம் – அவ்வளவுதான். பெரிசா ஒண்ணுமில்லை!"

அகஸ்டா தலையைப் பின்னால் சாய்த்துவீசி 'ஹா ஹா ஹா'வெனப் பெரிதாக நகைத்துக் கொண்டு சூர்யாவின் கையைப் பிடித்துக் குலுக்கினாள். "பிரமாதம் சூர்யா, பிரமாதம். இங்க வந்து ரெண்டு மூணு நிமிஷத்துக்குள்ள எல்லா மூலை அலங்காரங்களையும் கவனிச்சு எல்லாம் சரியாக் கணிச்சு, ஒரு யூக மாலையையே கோத்து அர்ப்பணிச்சீட்டீங்களே! ஒரு சரியான நிபுணரைத்தான் ஷாலினிகூட சேர்ந்து வேலை செய்யற என் தோழி பரிந்துரைச்சிருக்கா. என் பிரச்சனையை ஆராய ஒத்துகிட்டதுக்கு நன்றி" என்றாள்.

ஷாலினி தன் சூர்யாவை அகஸ்டா பாராட்டியதைக் கேட்டு பூரிப்புடன் முறுவலித்தாள். கிரணும் சந்தடி சாக்கில் ஆர்வத்துடன் புகுந்து, "ஓ! அகஸ்டா, கவலைப் படாதீங்க, உங்கப் பிரச்சனையை நாங்க நிவர்த்திப்போம். இந்த மாதிரி எவ்வளவு பாத்தாச்சு" என்று அகஸ்டாவின் கையைப் பிடித்துப் புன்னகை மலர்ந்தான். அவன் வழிவதைக் கவனித்த ஷாலினி, அகஸ்டாவுக்குத் தெரியாமல் அவன் கையில் சுண்டவும், கிரண் படாலென அகஸ்டாவின் கையை விட்டுவிட்டு ஒதுங்கினான்.

சூர்யா தலையை லேசாகச் சாய்த்து பாராட்டுக்களை ஏற்றுக்கொண்டு, "என்னாலானதை செய்யறேன். சரி உள்ள போய் உங்க ஆராய்ச்சி சாலை விவரங்களையும் என்ன பிரச்சனைங்கறதையும் மேற்கொண்டு பார்ப்போமா?" என வினவினார்.

அதைக் கேட்டதும், அகஸ்டாவின் முகம் இருண்டுவிட்டது. தனக்கும் தன் ஆராய்ச்சி சாலைக்கும் ஏற்பட்டிருந்த பிரச்சனையைப் பற்றிய கவலையில் மீண்டும் ஆழ்ந்தாள். "ஓ யெஸ்! ப்ளீஸ் உள்ள வாங்க, ஸாரி, உங்களுக்கு காஃபி, டீ எதுவும் வேணூமான்னு கூடக் கேட்காம வாசல் கூடத்துலயே வச்சு ரொம்பப் பேசிட்டேன். வாங்க வாங்க, ப்ரேக் ரூமுக்குப போய் எதாவது எடுத்துக்கிட்டு ஆராய்ச்சிக் கூடத்துக்குப் போகலாம்" என்று கூறி தன் பேட்ஜையும் கைவிரல் ரேகையையும் ஒரு சிறு கருப்புப் பலகையில் காட்டி உள் செல்லும் வாயில் கதவைத் திறந்து சென்றாள். மூவருடனும் வேண்டிய பானங்களை எடுத்துக் கொண்டு ஆராய்ச்சிக் கூடத்துக்கு அழைத்துச் சென்றாள்.

அஙகு அவர்கள் கண்ட புதுமைக் காட்சிகளும், உயிரியல் பதிப்பு விவரங்களும், மிகவும் வியப்பளித்தன.

குட்டன்பயோர்கின் பிரச்சனையின் விவரங்களையும், முப்பரிமாண மெய்ப்பதிவு முடிச்சின் சிக்கல்களையும், சூர்யா அதனை எவ்வாறு அவிழ்த்தார் என்பதை இனி வரும் பகுதிகளில் காண்போம்!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com