புலியும் பூனையும்
ஓர் அடர்ந்த காட்டில் புலி ஒன்று வசித்து வந்தது. ஒருநாள் இரைதேடி குகையிலிருந்து வெளியே வந்தபோது பூனை ஒன்று குறுக்கே வந்தது. புலியைக் கண்டு அஞ்சிய பூனை புதரில் ஒதுங்கியது.

அதைப் பார்த்த புலி, "நண்பா, ஏன் என்னைக் கண்டு அஞ்சுகிறாய். நாமெல்லாம் ஒரே இனம் அல்லவா? பயப்படாமல் முன்னால் வா" என்றது.

"நண்பா" என்று புலி அழைத்ததைக் கண்டு வியந்த பூனை, சற்றே தைரியம் பெற்று புலியின் முன்னால் வந்து நின்றது.

"பூனையாரே, நாம் எல்லாம் ஒரே முன்னோரின் வழிவந்தவர்கள் அல்லவா? அந்த விதத்தில் நாம் உறவினர்கள்! என்னைக் கண்டு பயப்பட வேண்டாம். நாம் இனி நண்பர்கள். சரியா?" என்றது.

"சரி. சரி. என்னையும் உங்கள் நண்பனாக ஏற்றுக் கொண்டதற்கு மிக்க நன்றி. உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். நான் செய்யத் தயாராக இருக்கிறேன்" என்றது பூனை.

"ம்ம்ம்... என்னுடைய குகையில் பெருச்சாளிகளின் தொல்லை மிக அதிகமாக இருக்கிறது. என்னையும் என் குட்டிகளையும் அவை தூங்கவிடாமல் ஏறிக் குதித்துத் தொல்லை செய்கின்றன. நாங்கள் பிடிக்க முனைந்தால் ஓடிப் போய்விடுகின்றன. நீதான் அந்தத் தொல்லையிலிருந்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்."

"நிச்சயமாக. இதோ இப்போதே குகைக்குள் சென்று அவற்றை வேட்டையாடுகிறேன்" என்று கூறியவாறே குகைக்குள் சென்றது பூனை.

புலியின் நட்பும் அன்பும் கிடைத்ததில் பூனைக்கு மிகவும் பெருமை. தினம் ஒரு பெருச்சாளியைக் கொல்வதும், அதைப் புலியிடம் காட்டிப் பெருமைப்படுவதுமாக நாட்கள் கழிந்தன. மற்ற மிருகங்களிடமும் தான் புலியின் நண்பன் என்று கூறி அதிகாரம் செய்ய ஆரம்பித்தது. அது புலியின் கவனத்துக்கும் வந்தது.

சில நாட்கள் சென்றன. வேட்டையாடுவதற்கு இனி பெருச்சாளிகளே இல்லை என்னுமளவுக்கு எல்லாவற்றையும் கொன்று விட்டிருந்தது பூனை. அந்தச் செருக்கோடு அது புலியிடம் வந்து, "நண்பா... உனக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. இந்தக் காட்டில் பெருச்சாளிகளே இல்லை. எல்லாவற்றையும் கொன்று தின்று விட்டேன். இனிமேல் நீயும் உன் குட்டிகளும் நிம்மதியாக உறங்கலாம்" என்றது.

"ஓஹோ. அப்படியா? ரொம்ப நல்லது. இனிமேல் உன் உதவி எனக்குத் தேவையில்லை. நீ என் நண்பனுமில்லை" என்றது புலி.

"இல்லை நண்பா... அது வந்து... " என்று ஏதோ கூற முற்பட்டது பூனை.

"இதோ பார்... புலியுடன் நட்பாகப் பழகியதால் மட்டுமே பூனை, புலியாகிவிட முடியாது. புலி, புலிதான். பூனை, பூனைதான். இங்கிருந்து ஓடிப் போ.. இல்லாவிட்டால்.." என்று கோபமாகக் கர்ஜனை செய்தது புலி.

பயந்துபோன பூனை, காட்டைவிட்டே ஓடிப் போனது.

இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த காகம், மற்றொரு காகத்திடம், "தனக்குச் சமமில்லாதவர்களுடன் கொள்ளும் நட்பு, மேலிடத்தில் இருப்பவர்களுக்குத்தான் சாதகமாகும்" என்று சொல்லிவிட்டுப் பறந்தது.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com