லயமேதை தக்ஷிணாமூர்த்திப் பிள்ளைS
கடம், கஞ்சிரா, மிருதங்கம் மூன்றிலுமே மேதைமை பெற்று விளங்கியவர் "லயமேதை" என்று அழைக்கப்பட்ட தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை. இவர் 1875ல், புதுக்கோட்டையில், ராமசாமிப்பிள்ளை-அமராவதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். பிறந்த சில நாட்களிலேயே தாயை இழந்ததால், நண்பர் வீட்டில் வளர்ந்தார். தக்க வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார், ஆனால் படிப்பு ஏறவில்லை. குளக்கரை, கோயில் என்று ஊர் சுற்றிக் கொண்டிருப்பதும், குதிரை வண்டிகளின் பின்னால் ஓடுவதும் தக்ஷிணாமூர்த்தியின் வழக்கம். அவனது பெரியப்பா உறவுமுறையான யோகானந்தர், புதுக்கோட்டை சமஸ்தான மருத்துவராகவும், ஜோதிட ஆலோசகராகவும் இருந்தார். ஹடயோகத்தில் தேர்ந்த ஆன்மீகவாதியான அவர், இவரை அரண்மனை காவல் படையில் சிப்பாயாகச் சேர்த்துவிட்டார்.

அப்போது புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் பைரவத் தொண்டமான்ர். அவர் சிறந்த மல்யுத்த வீரர். கலை, இலக்கிய ஆர்வம் கொண்டவர். இசைக்கலைஞர்களைப் போற்றி ஊக்குவித்தார். பல சங்கீத வித்வான்கள் புதுக்கோட்டைக்கு வந்து அவர்முன் கச்சேரிகள் நிகழ்த்துவர். அதனைச் சிப்பாய் தக்ஷிணாமூர்த்தி கேட்பார். தாளஞானம் இயல்பாகவே இருந்தது. மேசை, நாற்காலி, சுவர் என எதிலாவது எப்போதும் தாளம் போட்டுக் கொண்டே இருப்பார். கச்சேரிகளைக் கேட்கக் கேட்க அந்த ஆர்வம் வலுப்பட்டது. துப்பாக்கியிலேயே தாளம் போட ஆரம்பித்து விட்டார். இதைப் பார்த்த யோகானந்தர், பிள்ளையை லயமேதையாக்க முடிவு செய்தார்.

ஒருமுறை யோகானந்தருடன் நச்சாந்துபட்டியில் உள்ள ஏகாதச மடத்தில் ஒரு பூஜைக்காகச் சென்றிருந்தார் பிள்ளை. பூஜை முடிந்ததும் அங்குள்ள இசைக்கலைஞர் ஒருவர் கடம் வாசிக்க, அதனைக் கவனித்த பிள்ளை, அந்தக் கடத்தைத் தாம் வாங்கி வாசிக்க ஆரம்பித்தார். சில நிமிடங்களிலேயே தேர்ந்த வித்வானைப் போல அவர் வாசிக்க அங்குள்ளவர்கள் அவரைப் பாராட்டினர். அதுமுதல் தாமாகவே கடம் வாசித்துப் பழக ஆரம்பித்தார். ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர் என்று சுற்றுவட்டாரக் கச்சேரிகளுக்கெல்லாம் செல்வார். ரசிப்பார். இப்படிக் கேள்வி ஞானத்திலேயே சிறந்த கடக் கலைஞராக தம்மை வளர்த்துக் கொண்டார். ஆரம்பத்தில் ராமாயண உபன்யாசத்திற்கு பக்கவாத்தியமாக வாசித்துக் கொண்டிருந்தவர், பின்னர் ராமநாதபுரம் பூச்சி சீனிவாச ஐயங்காரை அணுகி அவர்மூலம் பல இசைக்கலைஞர்களின் அறிமுகம் பெற்று அவர்களுக்கு பக்கம் வாசிக்கத் துவங்கினார். ஒருமுறை ராமநாதபுரம் தாயுமானவர் மடத்தில் பிள்ளை தங்கியிருந்தபோது இவர் வாசிப்பைக் கேட்ட சேதுபதி மன்னர் இவரை சமஸ்தான வித்வானாக நியமித்து கௌரவித்தார். அப்போது தக்ஷிணாமூர்த்திப் பிள்ளைக்கு வயது 26.

குருமுகமாக இசை பயில்வது வித்தைக்குச் சிறப்பைத் தரும் என்று கருதிய பெரியப்பா யோகானந்தர், தக்ஷிணாமூர்த்திப் பிள்ளையை தன் நண்பர் மிருதங்க வித்வான் சீதாபதி ஜோசியரிடம் பயில ஏற்பாடு செய்தார். அவரிடம் மிருதங்கத்தின் ஆரம்பப் பாடங்களை பிள்ளை கற்றுக்கொண்டார். பின்னர் இலுப்பூர் மூக்கையாப்பிள்ளையிடம் அதன் நுணுக்கங்களைப் பயின்று மேலும் வல்லவரானார். அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய 'பாலாமணி' நாடகசபாவின் ஆஸ்தான வித்வானாகச் சிலகாலம் இருந்தார். தஞ்சாவூர் நாராயணசாமி அப்பா அவர்களிடமும் மிருதங்கம் பயின்று அவரது கச்சேரிகளுக்குக் கடம் வாசித்தார்.

ஒருமுறை பழனி கடம் கிருஷ்ணய்யருடன் போட்டியாக பிள்ளை கடம் வாசிக்க நேர்ந்தது. யாருக்கு வெற்றி என்று கூறமுடியாமல் இருவரும் சளைக்காமல் கடம் வாசித்தனர். சிறந்த இசை ரசிகரான பிள்ளை, கடம் கிருஷ்ணய்யரின் வாசிப்பை மிகவும் ரசித்தார். சிறந்த மேதையாகிய அவருடன் தான் சரிக்குச்சரி போட்டியிட்டது போதும் என நினைத்த அவர், திடீரென தன் வாசிப்பை நிறுத்திவிட்டு எழுந்து, "நீங்களே சிறந்த வித்வான். இதை நான் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறேன்" என்று சொல்லி வணங்கினார். பின் மேலும், "இதை ஒப்புக்கொண்டதற்கு அடையாளமாக இனிமேல் நான் இந்த வாத்தியத்தை வாசிக்கமாட்டேன் என்று இந்தச் சபையினர்முன் உறுதி கூறுகிறேன்" என்றார். அதுமுதல் அவர் கடம் வாசிப்பதை நிறுத்தினார்.

இந்நிலையில் தஞ்சாவூர் ஸ்ரீ நாராயணசாமி அப்பா தன் மிருதங்கத்தை தக்ஷிணாமூர்த்திப் பிள்ளையிடம் அளித்து "இனிமேல் கடத்துக்கு பதிலாக மிருதங்கம் வாசியுங்கள்" என்று ஊக்குவித்தார். அதற்கு பிள்ளை, "பானையில் அடித்து அடித்து என் கை விரல்கள் உறுதியாகியிருக்குமே, என்னால் மென்மையான வாத்தியமாகிய மிருதங்கத்தை வாசிக்க முடியுமா?" என்று சந்தேகம் எழுப்பினார். "ஆண்டவன்மீது பாரத்தைப் போட்டு வாசியுங்கள். எல்லாம் நல்லதே நடக்கும்" என்று சொல்லி ஆசிர்வதித்தார் நாராயணசாமி அப்பா. அதுமுதல் மிருதங்கம் வாசிக்கத் துவங்கினார் பிள்ளை. என்றாலும் மேலும் கற்கும் என்ற ஆவல் அவருக்கு இருந்தது. அதற்காக புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளையிடம் சீடராகச் சேர்ந்தார். மான்பூண்டியா பிள்ளை சிறந்த லயமேதை. கஞ்சிரா என்ற வாத்தியத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்ததும், அதற்கு புத்துயிர் கொடுத்ததும் அவர்தான். அவரிடம் குருகுலவாசமாக இருந்து நிறையக் கற்றுக்கொண்டார் தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை. அவருக்கிருந்த வாசிப்பு அனுபவமும், லயஞானமும் விரைவிலேயே பிள்ளையைத் தேர்ந்த மிருதங்கக்காரர் ஆக்கின. மான்பூண்டியா பிள்ளை தான் கற்றறிந்த அனைத்தையும் தம் சீடருக்குச் சொல்லிக் கொடுத்தார். தான் கச்சேரி செய்யும் இடங்களுக்கெல்லாம் சீடரையும் அழைத்துக்கொண்டு போனார். மான்பூண்டியா பிள்ளை கஞ்சிரா வாசிக்க, சீடர் தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை மிருதங்கம் வாசிக்க, அவ்வகைக் கச்சேரிகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

குருநாதரிடமிருந்து கஞ்சிரா வாசிக்கவும் கற்றார் தக்ஷிணாமூர்த்தி. அவரது கஞ்சிரா அரங்கேற்றம் ராமநாதபுரம் மன்னர் அரண்மனையில் நிகழ்ந்தது. கடம், மிருதங்கம், கஞ்சிரா இவற்றோடு வாய்ப்பாட்டிலும் அவர் வல்லவராக இருந்தார். குருநாதருடன் இணைந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று கச்சேரி செய்தார். வயதானதால் மான்பூண்டியா பிள்ளை கச்சேரிகளுக்குச் செல்வதை நிறுத்திவிடவே தனியாகவே நாடெங்கும் சென்று கச்சேரி செய்தார் பிள்ளை. படித்தவர் முதல் பாமரர்வரை அவரை ரசித்தனர். புதுக்கோட்டை என்றாலே மிருதங்கம்; மிருதங்கம் என்றாலே தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை என்னுமளவுக்கு அவர் ஊருக்குப் பெருமை சேர்த்தார். பிரபல கலைஞர்கள் பலரும் அவர் பக்கம் வாசிப்பதை விரும்பினர். மதுரை புஷ்பவனம், கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், திருக்கோடிகாவல் கிருஷ்ணையர், பாலக்காடு அனந்தராம பாகவதர், புதுக்கோட்டை பொன்னுசாமிப் பிள்ளை, மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை, ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், வீணை சஞ்சீவராவ், நாகராஜராவ் என பலருக்கு வாசித்துப் புகழ் சேர்த்தார். ஆலத்தூர் சகோதரர்கள், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, காஞ்சிபுரம் நயினாபிள்ளை, செம்பை வைத்தியநாத பாகவதர், பழனி சுப்பிரமணியப் பிள்ளை போன்றோரின் முன்னேற்றத்திற்கு பிள்ளை உதவினார். அவர்களை ஊக்குவித்தார். குறிப்பாக எம்.எஸ். சுப்புலட்சுமியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களுள் பிள்ளை மிக முக்கியமானவர். 1935ல் பிள்ளையின் மணிவிழாவில் சுப்புலட்சுமியின் கச்சேரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிதான் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. எம்.எஸ்.ஸூக்கு தொடர்ந்து பல்வேறு கச்சேரி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. அதுபோல இளைஞராக இருந்த பாலக்காடு மணியையும் வயது வித்தியாசம் பாராமல் தம்மோடு அமர வைத்து ஊக்குவித்தார் பிள்ளை.

தமது வாசிப்பில் ஈட்டிய பணத்தில் தனக்கென்று சொந்தமாக ஒரு வீடுமட்டுமே கட்டிக் கொண்ட பிள்ளை, மற்ற தொகைகளை ஆலயப் பணிக்கும், தர்ம காரியங்களுக்கும் செலவிட்டார். காந்தியக் கொள்கைகளின் மீது ஈடுபாடு கொண்டிருந்த அவர் தம் வாழ்நாள் முழுதும் கதரே அணிந்தார். அவருக்கு ஆன்மீகத்தில் அளவற்ற ஈடுபாடு இருந்தது. அது நாளுக்கு நாள் வளர்ந்தது. கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் ஆகியோரைச் சந்தித்தார். அவை வாழ்வின் திருப்புமுனை ஆயின. கச்சேரிகள் செய்வதை முழுதாகக் குறைத்துக்கொண்ட பிள்ளை ஆன்மீகத்தின்பால் கவனத்தைத் திருப்பினார். பெரியப்பா யோகானந்தர் ஹடயோகம் செய்துவந்த இடத்தை விலைக்கு வாங்கி அங்கே தண்டபாணிக்கு ஓர் ஆலயம் எழுப்பினார். அதில் நித்யபூஜை நடக்க ஏற்பாடு செய்தார். பல யோகிகளுடன் ஏற்பட்ட நட்பும், தொடர்பும், ஆசிகளும் இவரையும் ஒரு யோகியாக உயர்த்தியது. பல நாட்கள் உண்ணாநோன்பும், மௌன விரதமும் இருப்பது வழக்கமானது. தன் இறப்பிற்கான நாளை தேர்ந்தெடுத்து அதனைத் தானே முன்னறிவித்த பிள்ளை, அதன்படி தாது வருடம், வைகாசி மாதம் 13ம் தேதி (05/26/1939) மாலை 6.30க்கு, தமது 61ம் வயதில் இயற்கையுடன் கலந்தார்.

தக்ஷிணாமூர்த்திப் பிள்ளைக்கு ஒரு மகன், ஒரு மகள். மகள் வேலம்மாள். மகன் சாமிநாதப் பிள்ளை புகழ்பெற்ற மிருதங்கம், கஞ்சிரா வித்வான். பாலக்காடு மணி உள்ளிட்ட இசைக்கலைஞர்களுக்கு பக்கம் வாசித்திருக்கும் அவர், சில வருடங்களுக்கு முன் காலமானார். அவரது வாரிசுகள் இன்று இசைத்துறையில் ஈடுபட்டுள்ளனர். பிரபல மிருதங்க வித்வான் திருச்சி தாயுமானவன், தக்ஷிணாமூர்த்திப் பிள்ளையின் சீடருக்குச் சீடர். இவர் புதுக்கோட்டையில் தக்ஷிணாமூர்த்திப் பிள்ளைக்கு ஓர் ஆலயம் எழுப்பியதுடன் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றையும் நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார். ஒவ்வோர் ஆண்டும் வைகாசி மாத சஷ்டி திதி அன்று க்ஷிணாமூர்த்திப் பிள்ளையின் குருபூஜையை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்.

இசைத் துறையின் மறக்கக்கூடாத மூத்த முன்னோடிகளுள் ஒருவர் புதுக்கோட்டை தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை.

(தகவல் உதவி: கே.என். ஆகாஷ் எழுதிய "இந்திய இசை மேதைகள்")

பா.சு.ரமணன்

© TamilOnline.com