கண்ணா நீ கைதேர்ந்த நடிகன்...
பதினெட்டாம் நாள் யுத்தத்தில் சல்ய வதம் நடந்து, துரியோதனனையும் கொன்ற பிறகு, கிருஷ்ணன், அர்ஜுனனைப் பார்த்து, தேரைவிட்டு இறங்கச் சொல்லி, அர்ஜுனன் இறங்கியதும் தேர் தீப்பற்றி எரிகிறதே, அந்தச் சமயத்தில் தருமபுத்திரர் பேசும்போது பேச்சினிடையில் ஒன்றைக் குறிப்பிடுகிறார்: உபப்லாவ்யத்தில் ஸ்ரீ வியாச மகரிஷி, "எங்கே தர்மமோ அங்கே கிருஷ்ணன்; எங்கே கிருஷ்ணனோ அங்கே ஜயம்" என்று எனக்குச் சொன்னார்." (கும்பகோணம் பதிப்பு, தொகுதி 6, சல்ய பர்வம், அத்: 63, ப: 287). இந்த 'யதோ தர்மா ததா க்ருஷ்ணோ, யதா க்ருஷ்ணா ததா ஜய:'- என்ற அந்த வாக்கியம்தான் மகாபாரதத்தின் மிக முக்கியமான அடிநாதம். இது தொடர்ந்து எங்கெங்கிலும் ஒலித்துக்கொண்டே இருக்கும். பாண்டவர் தரப்பில் அறம் இருந்த ஒரே காரணத்தால், கண்ணன் அவர்கள் பக்கம் நின்றான் என்ற கருத்து இந்த வாக்கியத்தின் மூலமாக அழுத்தமாக வலியுறுத்தப்படுகிறது. பாண்டவர்கள் தரப்பு நியாயத்தைச் சற்றுப் பொறுத்துப் பார்க்கலாம். இப்போது இதிகாசத்தில் கண்ணனுடைய இரட்டைத் தன்மையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம் அல்லவா, அதற்குத் திரும்புவோம். ஒன்பதாம் நாள் போரின் இறுதியில் "பீஷ்மரை எதிர்த்துப் போரிட நானே ஒற்றை ஆளாய்ப் போகத் தயார். ஏனென்றால், 'தவ ப்ராதா மம ஸகா ஸம்பந்தி சிஷ்யஸ்யேவச' உன் சகோதரனான அர்ஜுனன் என்னுடைய தோழன்; சம்பந்தி; சீடன் எனப் பலவகையிலும் எனக்கு நெருக்கமானவன்" என்றெல்லாம் பேசியவன் ஒருகணம் நிறுத்துகிறான். நிறுத்திவிட்டு, "இந்தக் காரியத்தை நான் வேண்டுமானாலும் செய்கிறேன். இல்லை, உபப்லாவியத்தில் எல்லோருக்கும் எதிரில் சபதமிட்டானே, இதோ இந்தப் பார்த்தன், அவன் தன்னுடைய சபதத்தை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என நினைப்பானேயாகில், அவனே வேண்டுமானாலும் போரிடட்டும்" என்று தன் பேச்சுக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறான் கண்ணன். அவன் புன்னகையிலும் கண்களிலும் குறும்பு கொப்புளித்துக் கொண்டிருந்திருக்கும் என்பது, இந்த வாசகங்களைப் படிக்கும்போதே, காட்சியாக நம் கண்முன்னே விரிகிறது.

பீஷ்மரை ஒருமுறை சக்ராயுதத்தை எடுத்துக் கொண்டும், மறுமுறை வெறுங்கைகளால் வீழ்த்துவதற்காக ஒன்பதாவது நாள் போரில் பாய்ந்ததும், அர்ஜுனனுடைய மனத்தை பீஷ்மரைக் கொல்லும் அளவுக்குத் தயார்ப்படுத்தத்தான் இப்போது பேசுவதும், இதுவும் அவனை உசுப்பிவிடத்தான் என்பது தொனிப்பொருளாக வெளிப்படுகிறது.

அர்ஜுனன் பதறினான். "கிருஷ்ணா! ஆயுதமேந்த மாட்டேன் என்று நீ சொன்ன வார்த்தையை எனக்காகப் பொய்யாக்குவதா! வேண்டாம் வேண்டாம்! இதோ, அந்தக் காரியத்துக்கு நானே தயாராகிவிட்டேன்" என்று அவன் திடப்படுவதும் (இதைத்தானே கண்ணன் குறிவைத்தான்!), பிறகு அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, 'போய் பீஷ்மரிடமே அவரை எவ்வாறு வெல்வது என்று கேட்போம்' என்று தீர்மானிப்பதும் இதைத் தொடர்ந்துதான் நடக்கின்றன. 'பீஷ்மரை எவ்வாறு கொல்வது என்று அவரிடமே போய் ஆலோசனை கேட்பது எவ்வளவு பெரிய அக்கிரமம்!' என்று கேட்கத் தோன்றலாம். இந்தக் கேள்வி பலகாலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. உரிய இடத்தோடு பொருத்திப் பார்த்து, 'இது எவ்வாறு சாத்தியப்பட்டது' என்பதை பீஷ்மருடைய குணாம்சங்களைப் பார்க்கும்போது காண்போம்.

ஆக, இருமுறை பீஷ்மரை நோக்கிப் பாய்ந்ததும், இதோ இப்போது, 'நானே பீஷ்மரைக் கொல்வேன்' என்று கிளம்பியதும், உள்ளத்தின் அடியாழத்திலிருந்து கிளம்பிவந்த சத்தியமான வார்த்தைகள்தாம். கண்ணனை இந்த விஷயத்தில் பொய்யனாக்க முடியாது. இருந்தபோதிலும், இந்த வார்த்தைகள் அர்ஜுனனைச் செயலுக்குள் செலுத்துவதற்காகப் பேசப்பட்டவை என்பதில் ஐயமிருக்க முடியாது.

நம் அன்றாட வாழ்வில் இதைப்போல எத்தனையோ சந்தர்ப்பங்களைப் பார்க்கிறோம். மேலதிகாரி ஒரு முக்கியமான வேலையை முடித்துவிட்டுப் போகச் சொல்வார். அவருடைய உதவியாளருக்கோ அன்றைக்கென்று ஏதேனும் அவசரமான காரியம் கிளம்பிவிடும். "நாளைக்கு வந்து முடிக்கிறேனே..." என்று தயங்கித் தயங்கிச் சொல்கிறார் என வைத்துக் கொள்வோம். "அவ்வளவுதானே! சரி கிளம்பு. அந்தக் கோப்பைக் கொண்டுவந்து என்னுடைய மேசைமேல் வைத்துவிடு. நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று அவர் சொல்வாரானால், உதவியாளர் என்ன புரிந்துகொள்வார், என்ன செய்வார்! அதற்கு மேலே தன்னுடைய தனிப்பட்ட வேலை அவருக்குப் பெரிதாகவா தோன்றும்! அன்று இரவு முழுக்க அமர்ந்து அந்தப் பணியை முடித்துவிட்டல்லவா கிளம்புவார்! அதே உத்திதான் இங்கே கண்ணன் கையாள்வதும்.

கண்ணா! நீ கைதேர்ந்த நடிகன்
காலம் ஓ! அது உன்கைப் பிடிமண்


என்று கவிமாமணி வவேசு (வ.வே.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர், விவேகானந்தா கல்லூரி, சென்னை) ஒரு கவிதை இயற்றினார். கவிதையின் இடையில் 'நடிப்பில் தேர்ந்தவனே! உன்னைத் தூதனாய் அனுப்பிய காரணத்தால் அல்லவா அன்று போர்க்களம் சிவந்தது' என்ற கச்சிதமான வார்த்தைகளில் கண்ணனுடைய பாத்திரத்தின் மையக்கருவை லாகவமாகத் தீட்டுகிறார் வவேசு.

பலகணம் தேவனாகவும் சிலநேரங்களில் 'நாளை என்ன நடக்கப் போகிறது' என்பதையே அறிந்திராத சாதாரண மனிதனைப் போலவும்-ஜயத்ரதன் வதைக்காக தாருகனை அழைத்து, அர்ஜுனன் அறியாவண்ணமாக திட்டத்தைத் தீட்டியது உள்ளிட்ட-'சகலமும் அறிந்த அப்பாவித்தனமான' செயல்களை மேற்கொண்டாலும், யுத்த்ததின் பெரும்பகுதியில் பாண்டவர்களை வழிநடத்தியது கண்ணன். அதுமட்டுமல்ல, யுத்தத்துக்கு மூலகாரணனே கண்ணன்தான் என்று கவிஞர் வவேசு சொல்வதைப் போலவே வில்லிபுத்தூராரும் சொல்கிறார்.

யுத்தத்துக்கு மூலகாரணம் எது என்று பார்கப் புகுமுன், யுத்தத்துக்கு மூலகாரணர்களில் மகாமுக்கியன் யார் என்பதையும் பார்க்க வேண்டுமல்லவா? வில்லி தீட்டும் சித்திரத்தைப் பார்ப்போம்.

பாராளக் கன்னன்இகல் பார்த்தனைமுன் கொன்றுஅணங்கின்
காரார் குழல்களைந்து காலில் தளைபூட்டி
நேராகக் கைப்பிடித்து நின்னையும் நான் கட்டுவேனால்
வாராமல் காக்கலாம் மாபாரதம் என்றான்.


என்பது இந்தச் சித்திரம். 'போர் எழாமலிருக்க வேண்டுமானால் என்ன செய்யலாம்' என்று தூதுக்குக் கிளம்பும் முன்னர் கண்ணன் ஒவ்வொருவரையாக 'ஆலோசனை' கேட்க, சகதேவனுடைய மறுமொழி இது. பொருளையும் அதில் தெறிக்கும் நையாண்டியையும் அடுத்த முறை காணலாம். போரின் சூத்திரதாரி என்று வியாசர் மட்டுமல்லாமல், வில்லியும் சேர்த்துச் சுட்டுகின்றவனுடைய தன்மையை வில்லிபுத்தூரார் வாய்மொழியாகவும்தான் பார்ப்போமே.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com