எங்கள் வீட்டு நவராத்திரி
நான் ப்ரிட்ஜ்வாட்டர் பகுதியில் நியூ ஜெர்ஸியில் வசிக்கிறேன். எனது மாமியாருக் குக் கைத்தொழில் மற்றும் கொலு வைப்பதில் மிக்க ஆர்வம். எனவேதான் நானும் கொலு வைக்கத் துவங்கினேன். எங்கள் வீட்டில் கடந்த சில வருடங்களாக கொலு வைத்து வருகிறோம். அதை வைக்கும் முறையில் பல புதுமைகளை 2001-ம் ஆண்டிலிருந்து செய்ய ஆரம்பித்து இருக்கிறோம்.

ஆரம்பத்தில் இங்கு கிடைக்கும் சில பொருட்களை வைத்துக் கொண்டு படிகளும், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை வைத்துக் கொண்டு மிருகக் காட்சி சாலையும் வைத்தோம்.

ப்ரிட்ஜ்வாட்டரிலும் அதன் அண்மையிலு மாகச் சேர்ந்து ஒரு பெரிய இந்தியர் கூட்டம் உள்ளது. எங்கள் கொலுவில் பொம்மைகள் மட்டுமின்றி நாம் அன்றாடம் தூக்கி எறியும் தேவையற்ற பொருட்களான ஸ்டைரோ ·போம், பல்குத்தும் குச்சி, பெட்டிகள், அவற்றைச் சுற்றிவரும் பொருட்கள் போன்றவறையும் வைத்துக்கொண்டு கொலுவுக்குத் தேவையானவற்றை உருவாக்குகிறோம்.

முதல் வருடம் கார்ட்போர்டினால் ஒரு தெப்பக்குளம் செய்தோம். அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக ஏதாவது உருவாக்கி வருகிறோம். சாரதா பீடத்தை நானும் என் மாமியாருமாக (பார்வதி விஸ்வநாதன்) ஸ்டைரோ·போம், கிருஸ்துமஸ் அலங்காரப் பொருட்கள் கொண்டு உருவாக்கினோம். இதன் பின்னர், மரச்சாமான் கடை, மருத்துவ மனை, துணிக்கடை, செட்டியார் மளிகை, பூங்கா என்று பலவற்றை உருவாக்கி உள்ளோம்.

2003-ம் ஆண்டிலிருந்து நான் அழகிய பெரிய ரங்கோலிகளையும் போட ஆரம்பித்து உள்ளேன். சாரதாம்பாள், ஷீரடி சாய் பாபாவும், கிருஷ்ணபகவான் ஆகியோரை ரங்கோலியாக வரைந்துள்ளேன். என்னுடைய ரங்கோலியில் சம்கி, பலநிறக் கற்கள், மணிகள் (beads) ஆகியவற்றை வண்ணப் பொடிகளுடன் சேர்த்து உபயோகிக்கிறேன். எங்கள் வீட்டு கொலுவுக்குக் கிட்டத்தட்ட நூறு பேர் பார்க்க வருவர். கொலுவைப் பார்த்துச் சென்ற பின்னர் தமது உறவினரையும் நண்பர்களையும் காண அழைத்து வருவர். இதில் ஒரு பெருமை இருக்கத்தானே செய்கிறது!

ஆங்கிலத்தில்:வசந்தி சுப்பிரமணியன்
தமிழாக்கம்: சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com