தென்றல் பேசுகிறது...
மிசௌரியின் செயிண்ட் லூயிஸ் பகுதியிலுள்ள ஃபெர்கூசனில், ஆயுதமேந்தாத, 18 வயது கருப்பினத்தவரான மைக்கல் பிரவுனைக் காவலர் டாரன் வில்சன் (28) கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி சுட்டுக் கொன்றார். பொலீஸ்காரருக்கு எதிராக வழக்குத் தொடர முகாந்திரம் இருக்கிறதா என்று விசாரித்த கிராண்ட் ஜூரி, அவர்மீது வழக்குத் தொடரவேண்டியதில்லை என்று கூறிய தீர்ப்பினால் அமெரிக்காவின் கருப்பின மக்கள் பொங்கி எழுந்திருக்கிறார்கள். சரணடையும் எண்ணத்தோடு பிரவுன் இரண்டு கைகளையும் உயர்த்தியிருந்த நிலையில் அவரை வில்சன் சுட்டதாக ஒருவர் சாட்சியம் கூறியுள்ளார். அரசு வழக்குரைஞர் ஆரம்பத்திலிருந்தே பொலீஸ் துறை செய்தது சரி என்கிற வழியிலேயே வழக்கை முன்வைத்திருக்கிறார். இவையும், கிராண்ட் ஜூரி சற்றும் சந்தேகத்தின் அனுகூலத்தைக் (benefit of doubt) கொலையுண்ட பிரவுனுக்குத் தராததும், அமெரிக்க நீதிமுறை கருப்பினத்தவருக்கு எதிராகவே சாய்ந்திருக்கிறது என்ற எண்ணம் ஏற்படக் காரணமாகிவிட்டது. மிசௌரி மாநிலம் என்றாலே கறுப்பினத்தவருக்கு எதிரானது என்னும் பரவலான அபிப்பிராயம் முன்னரே உள்ளது. அதிலும் அரசு வழக்கறிஞரின் நடத்தை, கருப்பருக்கெதிராகச் செயல்படும் வெள்ளையர் எவரையும் அரசு தண்டனைக்குள்ளாக்காது என அறிவிப்பதுபோல் உள்ளது என்று பலரும் கூறத் தொடங்கிவிட்டனர்.

கருப்பர்கள் இருக்கட்டும், அமெரிக்காவின் ஆதிகுடிகளான செவ்விந்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி மற்றொரு துயரம். அதைப் பேச இங்கே சந்தர்ப்பமில்லை. ஆனாலும் ஃபெர்கூசன் சம்பவத்தின் எதிரொலி கருப்பினச் சுனாமியாக மாறுவதற்குள் அரசும், நீதியுணர்வுள்ள பிற இனத்தவரும், மைக்கல் பிரவுன் வழக்கை மீண்டும் பரிசீலனைக்கு ஆட்படுத்தி, நியாயம் வழங்குவதற்கு ஆவன செய்யவேண்டும். மக்கள் தமது வோட்டு என்னும் ஆற்றலை கவனமாகப் பயன்படுத்த வேண்டும், அந்த விழிப்புணர்வின் மூலமே, பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களைத் தமது கடமைகளைச் சரிவரச் செய்யும் கட்டாயத்தில் மக்கள் வைக்கமுடியும்.

*****


"தமிழ்மொழி உலகின் மிகப் பழம்பெரும் செம்மொழி. அதனை இந்தியாவின் இரண்டாம் ஆட்சிமொழி ஆக்கவேண்டும். திருக்குறள் உலகப் பொதுநூல். இந்தியாவின் எல்லா மாநிலங்களும் திருவள்ளுவர் தினம் கொண்டாட வேண்டும்" என்று தமிழின், திருக்குறளின் பெருமைகளை இந்திய ராஜ்யசபையில் பேசியிருப்பவர் தருண் விஜய். அதனை ஏற்ற அமைச்சர் ஸ்மிருதி இரானி, அடுத்த ஆண்டிலிருந்து எல்லா மாநிலங்களிலும் திருவள்ளுவர் நாளைச் சிறப்பாகக் கொண்டாட அரசாணை பிறப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார். நடுவண் ஆளுங்கட்சியில் செல்வாக்குப் பெற்ற ஒரு வடவர் இப்படிப் பேசியிருப்பது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதைவிட, தருண் விஜய் கூறினால் அது வடபுல மக்களின் கவனத்தைக் கவர அதிகம் வாய்ப்பிருக்கிறது என்பதே சரியாக இருக்கும். தமிழின், வள்ளுவத்தின் பெருமை பேசுகிற பல தருண் விஜய்கள் வடமாநிலங்களில் புறப்பட வேண்டும் என்று நாம் ஆவலுறுகிறோம். அதற்குமுன், தமிழர் அனைவரும் ஆழ்ந்து வள்ளுவத்தைக் கற்றுக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

*****


தென்றல் பதினான்கு ஆண்டுகளை நிறைவோடு கடந்துள்ளது. அது புகுந்த திசையெங்கும் மேன்மையும், பண்புநலனும், மகிழ்ச்சியும் பரப்பியுள்ளது. சிறியன சிந்தியாமையைக் கோட்பாடாகக் கொண்டு செம்மாந்து நடக்கக் காரணம் அதன் விளம்பரதாரர், எழுத்தாளர், வாசகர் கூட்டணியே. முந்தைய ஆண்டினும் மேம்பட்ட சேவை என்பதையே இதுவரை வரலாறாகக் கொண்டிருக்கும் தென்றல் பதினைந்தாம் ஆண்டையும் செழுமைப்படுத்தும்; தமிழுக்கும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் தொடர்ந்து தொண்டு செய்யும் என்னும் உறுதியோடும், நன்றிப் பெருக்கோடும் மேலே நடைபோடுகிறது.

*****


எளிய, ஈர்க்கும் தமிழில் எழுதவும் பேசவும் வல்லவர் மரபின் மைந்தன் ம. முத்தையா. வெற்றித் தமிழர் பேரவையோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். கவிஞர், ஆன்மீகவாதி. இந்த இதழின் நேர்காணலில் அவரது கருத்துக்களை ரசியுங்கள். ஐம்பத்துமூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த காந்தியவாதியான பேரா. எம்.சி. மாதவன் பல வகைகளிலும் ஒரு முன்னோடி. நிறுவனங்கள், நிதிநல்கைகள், சமுதாயச் செயல்பாடுகள் என்று பல திறக்குகளிலும் அளித்த பங்கு இந்தியர்களுக்கு ஓர் முன்னுதாரணம். அவர்பற்றிய சாதனையாளர் குறிப்பு மிகவும் சிறப்பானது. இன்னும் எண்ணற்ற படைப்புகளின் தகவல்களின் களஞ்சியமாகத் தென்றலின் 15வது ஆண்டின் முதல் இதழை உங்கள் கரங்களில் மகிழ்வோடு வைக்கிறோம்.

தென்றல் குழு

டிசம்பர் 2014

© TamilOnline.com