இஸ்லாமியரின் புனித நாளான பக்ரீத் பண்டிகையை விரிகுடாவாழ் தமிழ் முஸ்லீம்கள் ஃப்ரீமான்ட்டின் லேக் எலிசபெத் பூங்காவில் கொண்டாடினர். திரு. அபு ஐநூல்கான் ஏற்பாடு செய்த இவ்விழாவில் சுமார் 150 பேர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
தமது வரவேற்புரையில் திரு. அபு, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதன் காரணத்தை விளக்கினார். மனித நேயம், மத நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் நோக்கோடு இந்த விழாவை மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறினார். தொடர்ந்து திரு. குமரப்பன் (வளைகுடா பகுதி தமிழ் மன்ற நிறுவனர்) வாழ்த்துரை வழங்கினார். அடுத்துப் பேசிய வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற முன்னாள் தலைவரும், ஃபெட்னா-2015ன் ஒருங்கிணைப்பாளருமான திரு. தில்லை, விழாவின் அவசியத்தையும், இதுபோன்று பல இடங்களில் நடத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
விழாவுக்கு வந்திருந்த அமெரிக்கர் ஒருவர், "ஒருவன் ஒருவன் முதலாளி", "ஜெய் ஹோ" பாடல்களைப் பாடியது வந்திருந்தோரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.
அப்துல்லா கான், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |