ஆகஸ்டு மாதம் 11, 2014 அன்று சர்வலகு தாளக்கலை மையத்தின் (rameshsrinivasan.com) மாணவர் விவேக் ரமணனின் அரங்கேற்றம் சான்டா க்ளாரா பல்கலைக்கழகத்தின் லூயிஸ் மேயர் அரங்கில் நடந்தேறியது. கர்நாடிகா சகோதரர்கள் கலைமாமணி திரு. கா. ந. சசிகிரண் மற்றும் திரு. பா. கணேஷ் பாடிய இந்நிகழ்ச்சியில் திரு. ஹெம்மிகே ஸ்ரீவத்ஸன் வயலின் இசைக்கத் திரு. பாலாஜி சந்திரன் கடம் வாசித்தார். கர்நாடிகா சகோதரர்கள் மிருதங்கத்துக்குப் பொருத்தமாக பல்வேறு தாளங்களிலும் நடைகளிலும் கிருதிகளை எடுத்திருந்தார்கள். விவேக் தனியாவர்த்தனத்தில் கடத்துக்கு இணையாகத் தனது கைத்திறமையைக் காட்டியது அழகு. அடுத்து வந்த ராகம்-தானம்-பல்லவியை முதலில் சர்வாங்க தாளத்திலும் பிறகு 4-களை ஆதியிலும் 2-களை ஆதியிலும் அமைத்திருந்தனர். இந்த 'சர்வ அங்க' தாளத்தில் லகு, த்ருதம் என்ற தாள அங்கங்கள் மட்டுமன்றி குரு, காகபாதம் எனும் பண்டைய அங்கங்களும் சேர்ந்திருந்தன. விவேக் சற்றும் அசராமல் தனது கை வண்ணத்தைக் காட்டி, பலத்த கைதட்டல் வாங்கினார். முக்கிய விருந்தினர் திரு. பீ. வீ. ஜகதீஷ் அவர்கள் விவேக்கை ஆசீர்வதித்து குரு ரமேஷ் அவர்களைப் பாராட்டிப் பேசினார்.
கடந்த மே 11ம் தேதியன்று நடந்த ஸ்ரீவத்ஸனின் மிருதங்க அரங்கேற்றமும் வெகு சிறப்பு. சான் ஹோசே CET அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாடியவர் பத்மபூஷண் டி.வி. கோபாலகிருஷ்ணன். வயலின் வாசித்த எஸ். வரதராஜன், கடம் வாசித்த திருப்பூணித்துரா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் ஸ்ரீவத்ஸனைப் போலவே கோபாலகிருஷ்ணனின் சீடர்கள் ஆவர். கிளீவ்லேண்டு சுந்தரம் தலைமை வகித்தார்.
ஸ்ரீவத்ஸன் சங்கராபரணம் வர்ணத்தை அடுத்து ஹம்ஸத்வனி, சௌராஷ்டிரம், ஆனந்தபைரவி, பிலஹரி என பல ராக, தாளங்களிலும் தனது திறமையைக் காட்டினார். "நகுமோமு" என்னும் ஆபேரி கிருதியை அடுத்து இரட்டைக் களை ஆதி தாளத்தில் தனி வாசிக்கும்போது ஸ்ரீவத்ஸன் கொன்னக்கோல் சொல்லி கூடவே வாசித்து கடத்துக்கும் ஈடு கொடுத்தது சிறப்பாக அமைந்தது.
சர்வலகு தாளக்கலை மையத்தின் தலைவரான வித்வான் திரு. ரமேஷ் ஸ்ரீநிவாசன், வேலூர் ராமபத்திரனின் சிஷ்யர் ஆவார். இவர் கடந்த சில ஆண்டுகளில் ஆறு மாணவர்களை அரங்கேற்றியுள்ளார்.
நடாத்தூர் சுந்தர், சான் ஹோசே |