டாலஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளை கலைநிகழ்ச்சி
அக்டோபர் 4, 2014 அன்று இர்விங் ஆர்ட்ஸ் சென்டரில் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில் கலைநிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ, குறும்படம் என யாவும் கொண்ட 'அனுபவம் புதுமை' என்ற நிகழ்ச்சியை வழங்கினார்கள். பிரபு சங்கர் தலைமையிலான பிரபல High Octavez இசைக்குழுவினர் இன்னிசை விருந்து படைத்தனர். இதில் நியூ ஜெர்ஸி, ஃபிலடெல்ஃபியா, டாலஸ் உள்ளிட்ட நகரங்களிலிருந்து இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர். இசைக்கச்சேரிக்கு நடனம் அமைத்திருந்தது வித்தியாசமாக இருந்தது.

ஐக்கிய நாடுகள் (United Nations) சமீபத்தில் தமிழகத்தின் செட்டிநாட்டு பகுதியை சார்ந்த 73 கிராமங்களை உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர். அதனைப் பின்னணியாகக் கொண்டு நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். தமிழக மேஜிக் நிபுணர் செந்தில் (மேஜிக் சென்) ஜீனி வேடத்தில் வந்து மேஜிக் ஷோ நடத்தினார். மேஜிக் கலையில் அமெரிக்காவில் ஆராய்ச்சிப் பட்டம் படித்து வரும் முதல் இந்தியர் ஆவார். அன்னம், புவனா, கல்பனா, ஹேமா மற்றும் பிரதிபா ஆகிய நடன ஆசிரியைகள் நடனங்களை அமைத்திருந்தனர். மேடையில் கப்பலில் வந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார், கொடிகாத்த குமரன், பாரதியார் காட்சிகளுடன் தமிழா தமிழா, மனிதா மனிதா பாடல்கள் சுதந்திரப் போராட்டத்தைப் போற்றுவதாக அமைக்கப் பட்டிருந்தன.

மேரிலாந்து துணைச்செயலாளர் டாக்டர் ராஜன் நடராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். சாஸ்தா தமிழ் அறக்கட்டளைக்கு மேரிலாண்ட் கவர்னரின் பிரகடனத்தையும் வழங்கினார். உதவும் கரங்கள் அமைப்பிற்கு, டைம் விருது பெற்ற முருகானந்தத்தின், சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் மெஷின்கள் மற்றும் நலத்திட்டங்களுக்கான 40,000 டாலர் நிதியுதவியை விஸ்வநாதன் பெற்றுக்கொண்டார். திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினருடன் இணைந்து பணியாற்றும் அமெரிக்கப் பேராசிரியர் ஸோயி செரனியன், தலித் பெண்கள் மேம்பாட்டுக்கென வழங்கப்பட்ட 21,000 டாலர் நிதியுதவியைப் பெற்றுக்கொண்டார். எஞ்சிய 5,000 டாலர் அமெரிக்க அளவில் நடத்தப்படும் திருக்குறள் போட்டிக்காக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்புப் பணிகளை ரம்யா கவனித்துக் கொண்டார். இருநூறு பேர் கொண்ட தன்னார்வத் தொண்டர்கள் மிக நேர்த்தியாக நிகழ்ச்சியை நடத்தினார்கள். சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் இயக்குனர்கள் வேலு ராமன் மற்றும் விசாலாட்சி வேலு தலைமை ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com