அக்டோபர் 11, 2014 அன்று சான் ப்ரூனோவில் உள்ள ஸ்கைலைன் கல்லூரி அரங்கத்தில் செல்வியர். அதிதி கிருஷ்ணன், ஆர்யானா நீமம், க்ரியா பச்சிபாலா ஆகியோரின் சலங்கை பூஜை நடைபெற்றது. இவர்கள் நர்த்தனா நடனப் பள்ளி நிறுவனரான குரு. ஜனனி ஜயகுமாரின் மாணவிகளாவர்.
சேக்கிழாரின் "உலகெலாம் உணர்ந்து" நாட்டையில் புஷ்பாஞ்சலியாக மலர்ந்தது. தொடர்ந்து நடேச கவுத்துவம், திஸ்ர அலாரிப்பு, ஜதீஸ்வரம் போன்ற ஜதிக்கோர்வைகளும், பதமாக "நீலமயில் வாகனனோ"வும் ஆடிய நடன மணிகளோடு சிறுமியர் அம்ருதா, அருந்ததி, நித்யா, மூன்றே வயதான த்ரிநேத்ரா இணைந்தாடி அழகு சேர்த்தனர். முருகன் மீதான "நீலமயில்" நிகழ்ச்சியின் சிறப்பம்சம். ஷண்முகப்பிரியா ராகத்தில் "ஆனந்த தாண்டவம்", பாரதியாரின் "மனதிலுறுதி வேண்டும்" ஆகியவற்றுக்குப் பின் மங்களத்துடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.
உயர்நிலைப் பள்ளியில் பயிலும் செல்வி. கீதா சங்கர் (வாய்ப்பாட்டு), செல்வன். அக்ஷய் வெங்கடேசன் (மிருதங்கம்), செல்வி. மாலினி மஹேஸ் (வயலின்), திருமதி. ஜனனி (நட்டுவாங்கம்) என வளரும் இளங்கலைஞர்களைக் கொண்டு நடந்த இந்நிகழ்ச்சியைச் சிறப்பு விருந்தினராக வந்த திரு. திருமுடி துளசிராமனும், திருமதி உஷா ஸ்ரீநிவாசனும் பாராட்டிப் பேசினர்.
நர்த்தனா நடனப் பள்ளியின் ஆசிரியை ஜனனி இளவயதிலேயே பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றவர். மேலும் விவரங்களுக்குப் பார்க்க: www.jananijayakumar.com
மீனா சுப்ரமணியம், சான் ப்ரூனோ, கலிஃபோர்னியா |