தொடக்கநிலை நிறுவனங்களுக்கு வழி - பங்கு வெளியீடா, நிறுவன விற்பனையா?
சமீப காலத்தில் ஏராளமான நிறுவனங்கள் இணைந்துள்ளன (merged) அல்லது வாங்கப் பட்டுள்ளன (acquired). சந்தையில் பங்கு விற்பனைக்கு வரும் (Going Public or Initial Public Offering - IPO) நிறுவனங்கள் மிகவும் சிலவே. நன்கு வளர்ந்து வரும் ஆரம்ப நிலை நிறுவனங்கள், என்றைக்காவது இரண்டு வழிகளில் ஒன்றில் வெளியேற்றம் (exit) அடைந்தால்தான் அவற்றில் மூலதன மிட்டவர்களுக்கு முதலீட்டின் பேரில் வருமானம் (return on investment) கிடைக்கும். இந்த நிறுவனங்களுக்கான இரண்டு வழிகளைப் பற்றி என்னிடம் பலர் கேள்வி களை எழுப்பியுள்ளனர். அவற்றுக்கான விடைகள் இங்கே.

கேள்வி: இப்போது திடீரென மென்பொருள் (software) துறையிலும் மின்வலை மற்றும் மின்வலைப் பாதுகாப்பு (networking and network security) துறைகளிலும் பல நிறுவனங்கள் வாங்கப் பட்டுள்ளன அல்லது இணைந்துள்ளனவே, ஏன்?

பதில்: சென்ற இதழில் இதே கேள்விக்கான விடையின் முதல் பகுதியில் Geoffrey Moore-இன் 'பெரும்பிளவைத் தாண்டுதல்' (Crossing the Chasm) புத்தகத்தில் கூறியுள்ள கோட்பாடுகளின்படி ஒரு நிறுவனம் வளர்ச்சி பெற்றுப் பெரும் நிறுவனமாக வேண்டு மானால், அதற்குத் தேவையான பல முக்கியமான பண்புகளைப் பெற்றிருக்க வேண்டுமென்றும், முதல் பங்கு வெளியிடு வதற்குத் தாண்ட வேண்டிய சுவர் மிக உயரமாகி வருகிறது என்றும் கண்டோம். அதனால், பல சிறு நிறுவனங்களும், ஏன் சில பெரிய நிறுவனங்களும் கூட, இன்னும் பெரிய நிறுவனங்களுடன் இணைகின்றன. இதற்குச் சந்தை ஒன்றுகூடல் (market consolidation) என்று பெயர்.

கேள்வி: ஆனால் வளர்ந்து கொண்டு லாபகர மாக நடக்கும் சிறு நிறுவனங்களும் ஏன் கூடுதலுக்கு இரையாக வேண்டும்? ஏன் அவைகள் லாபத்துடன் நடக்கும் சிறிய நிறுவனங்களாகவே இருந்து கொண்டிருக்க முடியாது?

பதில்: ஒரு காரணம், முதலில் குறிப்பிட்டபடி வாங்குபவர்கள் ஒரு சில பெரும் நிறுவனங் களிலிருந்தே வாங்க விரும்புகின்றனர். அதனால், லாபகரமாக நடக்கும் சிறு நிறுவனங்களும் ஓரளவுக்கு மேல் வளர முடியாவிட்டால் கொஞ்ச காலத்துக்குப் பிறகு தேங்கி விடுகின்றன. அதற்குள் அவற்றின் வித்தியாசமான அம்சங்களை (differentiators) பெரும் நிறுவனங்கள் தங்கள் விற்பண்டங் களில் சேர்த்து விடுவதால் வாங்குபவர் களுக்கு சிறு நிறுவனங்களிடமிருந்து வாங்கக் காரணங்கள் இன்னும் குறைந்து தயக்கம் அதிகமாகி விடுகிறது. அது வளர்ச்சியைக் குறைத்து விடுகிறது அல்லது வருமானத் தேய்வையே ஏற்படுத்தி விடுகிறது. அதனால், அத்தகைய நிறுவனங்களில் சில முழுவது மாகத் தேய்ந்து உருக்குலைந்துவிடும் முன்னர் பெரும் நிறுவனங்களுக்கு விற்று விடுகிறார்கள்.

அண்மையில் Oracle நிறுவனம் Siebel நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்ததை உதாரணமாகக் குறிப்பிடலாம். பின்னது ஒன்றும் அவ்வளவு சிறியதல்ல. இருந்தாலும் இந்தக் கருத்துக்குச் சரியான உதாரணமாகப் பொருந்துகிறது. மற்ற மென்பொருள் நிறுவனங்களுக்கு முன்பு முதலாவதாக வாடிக்கையாளர் உறவு நிர்வாகம் (Customer Relationship Managment-CRM) என்ற துறைக்கான மென்பொருளைத் தயாரித்து விற்று அமோக வெற்றியுடன் படு வேகமாக வளர்ந்து லாபம் பெற்றது Siebel. ஆனால், சில வருடங்களுக்குள், Oracle, PeopleSoft, SAP, Microsoft போன்ற பெரும் போட்டியாளர்கள் ஒரு பக்கத்திலிருந்தும், SalesForce, UpShot போன்ற மென்பொருள் சேவை தரும் (application service providers-ASPs) ஆரம்பநிலை நிறுவனங்கள் இன்னொரு பக்கத்திலிருந்தும் தாக்கவே, வளர்ச்சி தேங்கி, வருங்காலம் கேள்விக் குறியாகியது. ஏதாவது ஒரு பெரிய நிறுவனத்துடன் இணைவது தடுக்க முடியாததாகிவிட்டது.

கேள்வி: ஆனால் வெற்றிகரமாக வளரும் ஆரம்பநிலை நிறுவனத்தாரும் விற்பதற்கு ஆர்வமாக இருக்கிறார்களா என்ன?

பதில்: இந்தக் கேள்விக்குப் பதில், ஒரு பலமான "ஆமாம்!"

பல சமீப கால விற்பனைகள் அதற்கு அத்தாட்சி. மிக வேகமாக வளர்ந்த VMware நிறுவனம் EMC-க்கு 600 மில்லியன் டாலர்களுக்குத் தன்னை விற்றுவிட்டது! பொதுப் பங்கு வெளியிட்டே தீரும் என்று வால் ஸ்ட்ரீட் நிபுணர்கள் பலராலும் நம்பப்பட்ட Crystal Decisions என்னும் நிறுவனம் Business Objects நிறுவனத்துக்கு 1.2 பில்லியன் டாலர்களுக்கு விலைபோனது. மின்வலைத் துறையில் மிக பலம் வாய்ந்த, வெற்றிகரமாக வளரும் நிறுவனங்கள் என்று கருதப் பட்ட Airespace, Peribit மற்றும் NetScaler நிறுவனங்கள் விற்கப்பட்டதையும் சற்றே சிறிய உதாரணங்களாக எடுத்துக் காட்டலாம்.

கேள்வி: ஏன் அத்தகைய வெற்றி வாய்ப்புள்ள நிறுவனங்கள் மேலும் வளர்ந்து பொதுப் பங்கு வெளியீடு செய்யக் கூடாது? அப்படி விற்க வேண்டிய கட்டாயந்தான் என்ன?

பதில்: சிறு நிறுவனங்களின் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், தங்கள் பங்கு தாரர்களுக்குப் பலன் தருவதோடு, அத்தகைய பலன் தருவதற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடிய வணிக அபாயம் (market risk), தொழில்நுட்ப அபாயம் (technology risk) மற்றும் செயல்பாட்டு அபாயம் (execution risk) போன்ற பல வித அபாயங்களையும் குறைத்து, பலனை முடிந்த அளவுக்கு மேம்படுத்துவது மிக முக்கியம். பல சிறு நிறுவனத்தார் தற்போதைய பங்குச்சந்தை சூழ்நிலையில் பங்கு வெளியீட்டைவிட, நிறுவன விற்பனைதான் ஆபத்தைக் குறைத்து பலனைப் பெருக்க அனுகூலமாக உள்ளது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இது எதிர்காலத்தில் மாறலாம். Google போன்ற நிறுவனங்களைக் கண்டு, சில B2C துறையிலுள்ள DotCom-கள் பங்கு வெளியீட்டுக்கு முன்வரக் கூடும்.

கேள்வி: வேகமாக வளரும் சிறு நிறுவனங்களின் அபாயங்கள் எவ்வாறு பங்குதாரர் பலனைக் குறைக்கக் கூடும்?

பதில்: தொழில் நுட்ப அபாயம் (technology risk): பொதுவாகப் புதுத் தொழில் நுட்பங்களை வணிக சாத்தியத்துக்குக் கொண்டு வரவே சிறு நிறுவனங்கள் ஆரம்பிக்கப் படுகின்றன. ஆரம்ப நிலையில் அந்தத் தொழில்நுட்பம் எதிர்பார்த்த அளவுக்கோ, போதுமான அளவுக்கோ பலன் தராமால் போகலாம். ஆனால் வணிகத்துக்கு வந்த பின் அந்த அபாயம் அவ்வளவு இருக்க வாய்ப்பில்லை. வேறு விதமான ஆபத்துகள் வரக்கூடும். வேறொரு நிறுவனம், அதே பலனை, இன்னும் பெருமளவில் தரப் போட்டியாக மற்றொரு தொழில்நுட்பத்தைக் கொண்டு வரக்கூடும். அப்போது இந்த நிறுவனம், தன் தொழில்நுட்பத்தை இன்னும் சிறப்பாக்க வேண்டும். அப்படி முடியா விட்டால் தொழில்நுட்ப அபாயம் விளைகிறது.

உதாரணமாக, மின்வலைத் துறையில் வலையகலத்தைக் (bandwidth) கூட்டப் பல மின்வலைத் தொடர்புகளை ஒன்று சேர்க்கும் சாதனங்களை உருவாக்கி, விற்கும்பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட சில நிறுவனங்கள், ஒரே ஒளி நாரில் பல அலைவரிசைகளில் தரவுகளை (data) அனுப்பக் கூடிய DWDM என்ற தொழில்நுட்பம் வந்தவுடன் போட்டி போட முடியாமல் மடிந்தன.

சந்தை அபாயம் (market risk): சில சமயம், தொழில்நுட்பம் சிறப்பாக இருந்தாலும், அதைப் பயன்படுத்தும் சாதனங்களுக்குத் தேவையில்லாமல் போய்விடுகிறது. இதற்குப் பல உதாரணங்களைத் தரலாம். முன்பு குறிப்பிட்ட மின்வலைத் துறையிலேயே ஒளிமின்னியல் (full optonics) அதாவது, மின் சைகைகளை (signal) ஒளி சைகைகளாக மாற்றி மீண்டும் மின் சைகைகளாக மாற்றாமல், முதலிலிருந்து இறுதிவரை ஒளி சைகைகளாகவே தரவுகளை அனுப்பும் தொழில் நுட்பத்தை வணிக ரீதியாக்கி விற்கப் பல நிறுவனங்கள் 2000-ஆம் ஆண்டின் முதல் பாதியில் தோன்றின. காரணம் வலையகலத் தேவை படு வேக மாகப் பெரிதாக வளரும் என்ற எதிர்பார்ப்பு. அவற்றில் பல முதலில் சாதனங்களைப் பெருமளவில் விற்று வளர ஆரம்பித் திருந்தன. Cerent என்னும் ஒரு நிறுவனம் அப்போதும் கூடப் பங்கு வெளியிடாமல், Cisco நிறுவனத்துக்கு ஏழு பில்லியன் ($7 Billion) டாலர்களுக்குத் தன்னை விற்று விட்டது! (நிறுவன மேலாளர்களுக்கு வரப்போகும் எதிர்பாராத சந்தை அபாயம் தெரிந்து விட்டிருந்ததோ என்னவோ!) ஆனால், திடீரென ஏற்பட்ட டாட்காம் குமிழி வெடிப்பால், அந்த வணிகத் தேவை ஆவியாகி விடவே, பெரும்பாலான ஒளியியல் நிறுவனங்கள் திவாலாகி மறைந்தே விட்டன.

செயல்பாட்டு அபாயம் (execution risk): சிறு நிறுவனங்கள் புதுத் தொழில்நுட்பங்களைக் கையாண்டு, வாடிக்கையாளர்களுக்குப் பெரும் நிறுவனங்கள் தராத பலன்களைத் தங்கள் விற்பண்டங்களில் தருவதால்தான் வளர முடிகிறது. ஆனால் நாளாக நாளாக, அந்த வாய்ப்புக் குறையும் அபாயம் அதிகரிக்கிறது. ஏனெனில் மற்ற சிறு நிறுவனங்கள் அதே மாதிரி விற்பண்டங் களில் அதே மாதிரி பலன்களைத் தர ஆரம்பிப்பதால் போட்டி அதிகரிக்கிறது. மேலும் பெரும் நிறுவனங்களும் தங்கள் சாதனங்களில் அப்பலன்களுக்கான அம்சங் களை (features) சேர்க்க ஆரம்பிக்கிறார்கள். அதனால் முதலில் மிக எளிதில் விற்றுப் பெரும் லாபகரமாக இருந்த வாய்ப்பு கடினமாகி, விலைத் தள்ளுபடிகளால் பாதிக்கப்பட்டு லாபம் குறையச் சாத்திய மாகிறது. இதற்கு பண்டமாக்கல் (commoditization) என்று பெயர். அதாவது ஒருவரிடமிருந்தே விசேஷமாகக் கிடைப்பதால் அதிக விலைக்கு விற்க முடியக்கூடிய ஒரு பொருள், பலரிடமிருந்தும் பொதுவாகக் கிடைப்பதால் சாதாரணமாகி, விலை குறைகிறது; மற்றும் விற்பதற்கான செலவு (cost of sales) அதிகரிக்கிறது. அப்படியானால் நேரடி விற்பனை சாத்தியமல்ல. மறைமுக வணிக வழிகளில் (indirect channels) விற்க முடிந்தால்தான் கட்டுப்படியாகி லாபகரமாக விற்க முடியும். அது எளிதல்ல! மதிப்புயர்வு மறுவிற்பனையாளர்கள் (value added resellers) மூலமாக விற்பது பிரம்மப் பிரயத்தனம். (ஏனென்று விவரிப்பதற்கு இன்னொரு முழுக் கட்டுரையே வேண்டும்! அதைப் பிறகு பார்க்கலாம்.) அப்படி விற்பனையை வளர்த்து லாபகரமாக்க முடியாமல் போவது ஒரு விதமான செயல்பாட்டு அபாயம். நிறுவனத்தின் விற்பனையாளர்கள் (sales), சந்தைப்படுத்துனர் (marketing), பொருள் உருவாக்க நிபுணர்கள் (product development and manufacturing) இவர்களில் எந்தத் துறையாவது லாயக்கில்லாமலோ, தவறித் தடுமாறியோ சேதம் விளைவிப்பது இன்னொரு வகையான செயல்பாட்டு அபாயம். இப்படி பல விதமான செயல்பாட்டு அபாயங்கள் உள்ளன.

மேற்கூறப்பட்ட மூன்று அபாயங்களால் இக்கட்டில் அகப்படும் சிறு நிறுவனங்கள், முதல்நிலை வருமானம் (top line revenues) வளர்ந்தாலும், லாபகரமான நிலைக்கு வர முடியாமல் மேலும் மேலும் முதலீடு தேவை யாகித் தத்தளிக்க ஆரம்பிக்கின்றன. அல்லது, மேலும் முதலீடு கிடைக்காவிட்டால் திவாலாகி, அவற்றின் தொழில்நுட்பம் (technology assets) மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு விடுகிறது. இதை Fire Sale என்று குறிப்பிடுவார்கள், கேள்விப்பட்டிருக்கலாம்.

எனவே, அபாயங்களைத் தவிர்த்து, பங்குதாரர்களுக்கு அளிக்க வேண்டிய பலனை அதிகப்படுத்தி, இறுதியாக அவர்கள் கையில் கணிசமான தொகையைக் கொண்டு சேர்ப்பது எளிதல்ல. விக்கிரமாதித்தன் கதையில் வருவது போல், ஏழு சமுத்திரங் களையும், ஏழு மலைகளையும் கடந்து, குகைக்கு வெளியில் இருக்கும் பூதத்தை வென்று, உள்ளே இருக்கும் மிருகத்தைக் கொன்று, அதனுள் புதைந்திருக்கும் சியமந்தக மணிக்குள் அடைக்கப் பட்டிருக்கும் மந்திர... இதற்குள் உங்களுக்கு நான் சொல்ல வருவது என்னவென்று புரிந்திருக்கும் என நினைக்கிறேன்! சிறுநிறுவனங்களை நல்மோட்சத்துக்கு சென்று சேர்ப்பதற்கு முன் படவேண்டிய பாடுகள் மிகப் பல!

அத்தகைய பாடுகள் பல பட்டு வெற்றி கரமாக வளர்ந்தாலும், முதல் பங்கு வெளியீட்டுக்குத் தேவையான அளவுக்கு ஒவ்வொரு காலாண்டிலும் (quarterly period) முன்கூட்டியே எதிர்பார்த்து அறிவிக்கத் தக்க அளவில் வளர முடியாவிட்டாலோ, லாபகரமாகச் செயல்பட முடியவில்லை யென்றாலோ, அல்லது முன் கூறிய அபாயங்களில் ஏதாவது ஒன்று பெருமளவுக்கு அதிகரித்தாலோ அந்த நிறுவனத்தைப் பெரும் நிறுவனத்துக்கு விற்றால்தான் பங்குதாரர்களின் கட்டாயத்துக்கு பதில் கூற முடியும்.

கேள்வி: சிறு நிறுவனங்களைத்தான் அபாயம் குறைக்க விற்று விடுகிறார்கள். ஆனால் பொதுப் பங்குச் சந்தையை சென்றடைந்து விட்ட, லாபகரமாக நடக்கும் Veritas போன்ற பெரிய நிறுவனங்கள் கூட ஏன் விற்க வேண்டும்? ஏன் தனியாகவே செயல் படக்கூடாது?

பதில்: சுவையான கேள்வி. இந்தக் கேள்விக்கும் இதன் மறுபாகமான "பெரும் நிறுவனங்கள் ஏன் மற்ற நிறுவனங்களை வாங்க வேண்டும்? தாங்களே உருவாக்கலாமே?" என்னும் கேள்விக்கும் பதிலையும், வாங்கிய பின் என்ன நடக்கிறது என்பதையும் இனி வரும் பகுதிகளில் பார்ப்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com