பாஸ்டன்: விட்டல் ராமமூர்த்தி வயலின் கச்சேரி
அக்டோபர் 18, 2014 அன்று மாலை, பாஸ்டன் அருகே உள்ள நாஷுவாவில் (New Hampshire), பிரபல வித்வான் திரு. விட்டல் ராமமூர்த்தி அவர்களின் வயலின் கச்சேரி நடைபெற்றது. இந்தக் கச்சேரி, நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலயம் (Hindu Temple of New Hampshire) மற்றும் அதன் கலாசாரப் பள்ளியான பாரதி வித்யாஸ்ரமத்தினால், ஆலயத்திற்கு நிதி திரட்டும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

கச்சேரிக்குமுன், சிலிக்கன் பள்ளத்தாக்கின் ஜனனி கணேஷ், லாவண்யா கோதண்டராமன், கார்த்திக் கோபாலரத்தினம் ஆகியோரின் 'மதுர நாத சங்கீர்த்தனா (Melodious Meditations)' என்ற கர்நாடக சங்கீத CD பற்றிய ஒரு வீடியோவைத் திரையிட்டனர். வித்யாஸ்ரமக் குழந்தைகளின் சுலோகங்களுக்குப் பின் கச்சேரி துவங்கியது.

விட்டலின் சிஷ்யரான திரு. சூர்யா சுந்தரராஜன் (வயலின்), திரு. கௌரீஷ் சந்திரசேகர் (மிருதங்கம்), Dr. ரவி ஐயர் (கடம்) ஆகியோர் அவருக்குப் பக்கவாத்தியம் வாசித்தனர். கச்சேரியை ஆபோகி ராக வர்ணத்துடன் ஆரம்பித்தார். பிறகு வந்த "விநாயகா நின்னு வினா" (ஹம்சத்வனி) கிருதி, ஒரு ஜுகல்பந்தி ஆனது.

கன்னடகௌளையில் "சொகசு சூட தரமா" என்ற தியாகராஜ கிருதி, துவிஜாவந்தியில் "அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம்" என்ற தீக்ஷதர் கிருதி, சங்கராபரணத்தில் "ரமா ரமண ரா ரா" என்ற தியாகராஜ கிருதி எல்லாம் சிறப்பாகத் தொடர்ந்தன.

இரண்டாம் பகுதியில் ராகம்-தானம்-பல்லவியை நேயர் விருப்பமாக நடத்தினர். ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப கீரவாணி, நளினகாந்தி, ஆனந்தபைரவி, பந்துவராளி, பெஹாக், பைரவி, பிருந்தாவனி, பிலஹரி, தேஷ், பிருந்தாவன சாரங்கா என்று சரளமாகப் பல ராகங்களை வாசித்த்தனர். இதன்பின் வயலின் வாசிப்பில், பாடலின் வார்த்தைகளை எப்படி குரு லால்குடி ஜெயராமன் வெளிக்கொண்டு வருவார், என்பதைச் செய்து காண்பித்தார். "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா" என்ற வரியைப் பல விதங்களில் பாடி எப்படி வெவ்வேறு அர்த்தங்களை உருவாக்க முடியும் என்று காட்டி வியப்பில் ஆழ்த்தினார். கர்ணரஞ்சனி ராகத்தில் லால்குடி ஜெயராமனின் தில்லானா, காஞ்சி பரமாச்சாரியாரின் "மைத்ரீம் பஜத", புரந்தரதாசரின் "பாக்யாத லக்ஷ்மி பாரம்மா" ஆகியவற்றுக்குப் பின் மங்கள கீதத்துடன் கச்சேரி முடிந்தது.

திரு. வீரமணி ரங்கநாதன், திரு. ராயுடு ராயசம், திரு. லக்ஷ்மி முனுகூர் ஆகியோர் உரையாற்றினர். திருமதி. உஷா துவாரகநாத் நன்றியுரை கூறினார். திரு. பிரேம் ஆனந்த்ராவ் தொகுத்து வழங்கினார்.

திரு. லால்குடி ஜெயராமன் அவர்களின் சிஷ்யரான விட்டல், தனிக் கச்சேரிகள் மட்டுமின்றி, சுதா ரகுநாதன், பாலமுரளிகிருஷ்ணா போன்ற முன்னணி வித்வான்கள் பலருக்கு பக்கமும் வாசித்திருக்கிறார். காஞ்சி மற்றும் சிருங்கேரி மடங்களின் ஆஸ்தான வித்வானாக கௌரவிக்கப்பட்டுள்ள விட்டல், சென்னை மியூசிக் அகடமி, ஸ்ரீ கிருஷ்ண கான சபா ஆகியவற்றின் சிறந்த வயலின் வித்வான் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலயம் மற்றும் பாரதி வித்யாஸ்ரமத்தைப் பற்றி அறிய: hindutemplenh.org/htnhhome.do
திரு. விட்டல் ராமமூர்த்தி பற்றி அறிய: violinvittal.com
மதுர நாத சங்கீர்த்தனா–Melodious Meditations இசைக்குறுந்தட்டுப் பற்றி அறிய: www.youtube.com

அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி,
பாஸ்டன், மாசசூஸட்ஸ்

© TamilOnline.com