தனக்கென்று ஒரு வீடு
"அம்மா, நீயே பாரேன். உனக்கு முதியோர் இல்லத்திலே ஜாலியா இருக்கப் போகுது" என்றான் சேகர். அவனுடன் தனது புதிய வசிப்பிடத்துக்குக் காரில் போய்க் கொண்டிருந்த அவனது அம்மா அதைக் கவனித்ததாகவே தெரியவில்லை.

ராமன் அந்த இறுக்கத்தைத் தணிக்க விரும்பி, "சேகர், ரியல் எஸ்டேட்ல பணம் போடறதைப் பத்தி நீ என்ன நெனக்கறே?" என்றான்.

"வாடகைக்கு விடறதானா பிரயோஜனம் உண்டு. சீரான வருமானம் வரும். எப்ப வேணும்னாலும் அதை விக்கலாம். அட அவசரமாப் பணம் வேணும்னா, அதை அடகு வச்சுக் கடன் வாங்கலாம்."

ஒரு நிமிட யோசனைக்குப் பின் ராம் கேட்டான், "அதைப் பராமரிக்கறது போலச் சில சிரமங்களும் உண்டுன்னு தோணுதே. எங்கிட்ட அதில் முதலீடு செய்யப் போதிய பணம் இல்லேன்னு வெச்சுக்கோ, அதுவும் பிரச்சனைதானே?"

"உன் நண்பர்கள்கிட்ட அதிகப்படிப் பணம் இருந்தா, உன்கூடச் சேர்ந்து அதை வாங்கச் சொல்லிக் கேட்கலாம். உங்களுக்கு நடுவில ஒரு சட்டரீதியான ஒப்பந்தம் போட்டுக் கலாம்" என்றான் சேகர்.

"சரி, என் பிரண்ட் ஒருத்தன் என் கூடச் சேந்து வாங்கறான்னே வச்சுக்கலாம். வாங்கின சில மாதங்களிலேயே அவனுடைய பங்கை விக்கணும்னு அவசரப்படுத்தினா...?"

எதிர்பாராமல் சேகரின் தாயார் பேசினார், "உனக்குச் சொத்துல பணம் போடணும், ஆனா அதை நிர்வகிக்கிற பிடுங்கல் வேண்டாம்னா 'Real Estate Investment Trust'ல முதலீடு செய்யேன்."

"அதென்ன...!" என்றார்கள் இருவருமே ஏக காலத்தில்.

"உன் கையிலே நிறையப் பணம் இல்ல, ஆனா கொஞ்சமாவது அசையாச் சொத்தில உனக்கு முதலீடு செய்யணும்னு ஆசைப் பட்டா இதுதான் வழி. அப்படி ஆசைப் படறவங்களின் பணத்தையெல்லாம் ஒண்ணு சேத்து மொத்தமா அவங்க சொத்து வாங்குவாங்க. 1960-ல அரசாங்கம் இந்த அறக்கட்டளைக்கு வழி வகுத்தது. இதன் மூலம் தனி நபர்கள் சொத்து வாங்கும் திட்டத்தில பங்கு கொள்ளலாம்.

"இந்த 'அசையாச்சொத்து முதலீட்டு அறக்கட்டளை' என்பது அடிப்படையில் நிலம் மற்றும் கட்டடங்களை வாங்கி விக்கற குழுமம். அதில யார் வேணுமானாலும் பணத்தை முதலீடு செய்து வருமானம் பெறலாம்."

"சுவாரசியமா இருக்கே!" என்றான் ராம். "இன்னும் கொஞ்சம் அதிக விவரம் சொல்லுங்களேன்."

"ஒரு கம்பெனி இந்த அறக்கட்டளையாக இயங்கணும்னா தனது மொத்தச் சொத்தில குறைந்தது 75 சதவீதத்தை வீடுநிலம் (ரியல் எஸ்டேட்) இவற்றில் முதலீடு செய்திருக்கணும். மிச்சத்தைப் பணமாகவோ, அரசாங் கப் பத்திரங்களாகவோ வைத்திருக்கலாம். ஏன், முழுப்பணத்தையுமே கூட அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்திருக்கலாம். இதை REIT-யின் இயக்குனர்கள் தீர்மானம் செய்வார்கள். பிறகு வாடகையாகவோ, சொத்து விற்பதன் மூலமோ வருமானம் பெறப்படுகிறது."

"அம்மா, உனக்கு எப்படி இதெல்லாம் தெரிஞ்சது. நம்பவே முடியலையே!" என்றான் சேகர்.

தான் வீட்டைவிட்டு வேறிடத்துக்கு அனுப்பப்படுகிறோம் என்ற அதிர்ச்சியில் இருந்த அம்மாவுக்கு சேகரைப் பார்த்துப் பேச முடியவில்லை.

மீண்டும் ராம்தான் குறுக்கிட்டான், "வேறு கம்பெனிகளில் முதலீடு செய்வதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?"

"சரியாகக் கேட்டாய். தனது லாபத்தில் குறைந்தது 90 சதவீதத்தை RIET தன் முதலீட்டாளர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். மீதிப் பணத்தில் வேண்டு மானால் மேலும் சொத்து வாங்கலாம். முழு லாபத்தையும் வேணுமானாலும் கொடுக்கலாம். ஆனால் முதலீட்டாளருக்குக் குறைந்தபட்சம் லாபத்தில் 90 சதவீதம் வரும் என்கிற உத்தர வாதம் உண்டு. அதை 'டிவிடெண்ட்'னு சொல்வாங்க."

கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல், "பல வருஷம் பாடுபட்டதுக்குப் பலனாவது உண்டு அதிலே" என்றார் அம்மா நக்கலாக.

"REIT கம்பெனிகள் தமது பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்குமா?" என்று கேட்டான் ராம்.

"விற்கும். அவற்றின் பங்குக்கும் கூகிளின் பங்குக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. ஒரு புரோக்கரிடம் கணக்குத் துவங்கிக் கொண்டு அவற்றின் பங்குகளை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்."

"REIT கம்பெனிகள் நூத்துக் கணக்கில இருக்கும்னு நெனக்கிறேன். வீடு, கடை கண்ணி, அலுவலகக் கட்டிடம், வணிகப் பெருவளாகம் இப்படி விதவிதமான சொத்துகளிலே முதலீடு செய்யத் தனித் தனியா இருக்குமே!" என்றான் ராம்.

"கெட்டிக்காரப் பயல் நீ ராம். சரியாச் சொன்னாய். நிலையான வருமானத்தோடு, REIT பங்குகளின் விலையேற்றத்தினாலும் லாபம் பெறலாம். அவற்றைப் பங்குச் சந்தையில் வாங்கலாம், விற்கலாம். ஆக, ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை என்று இரட்டைப் பயன் ஒரு முதலீட்டாளருக்குக் கிடைக்கிறது."

"நீண்ட கால இடைவெளியில் பங்குகளையும் பத்திரங்களையும் விட RIET அதிக லாபம் தருகிறதா?" இதைக் கேட்டது சேகர்.

"1973-லே இருந்து 2003 வரையிலான 30 வருஷத்தை எடுத்துக் கொண்டா S&P500 12.5 சதவீதப் பலன் கொடுத்தது. இதுவே நல்ல வருமானம்தான். ஆனால் RIETயில 14.18 சதவீதம் கிடைத்தது.

"சொல்லப் போனா, ஓய்வுகாலத் திட்டமாக RIET-யைப் பயன்படுத்தலாம். அதுக்கு அரசாங்கமே 401-K IRA, Roth IRA போன்ற சலுகைகளை வழங்குகிறது. அசையாச் சொத்துக்களை வாங்கிப் போட்டு அதை நிர்வகிக்கற தலைவலி இல்லாமல், பேசாம RIET-யில பணத்தைப் போட்டுட்டு நிம்மதியா இருக்கலாம்."

"ஒருவேளை உங்களுக்கு அவசரமாப் பணம் தேவைப்பட்டால்...? சேகர் வீடு வாங்கும்போது நீங்க பணத்தையெல்லாம் திரட்டினது எனக்கு நினைவிருக்கு" என்றான் ராம்.

"RIET-யில முதலீடு செய்யறதாச் சொன்னா லும், நீ உண்மையில் பங்குச் சந்தையில பங்குகளைத்தான் வாங்கறே. எப்ப வேணும்னாலும் அதை விக்க முடியும். வீடு, நிலம் விக்கறதை விட அது சுலபம்தானே!"

மறுநாள் சேகரின் தாயார் முதியோர் இல்லத்துக்கு வந்த ராமைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

"அம்மா, சேகர் உங்களை இங்கே கொண்டு விட்டதில் எனக்கு வருத்தம்தான். நீங்கள் என்னுடன் வசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வருவீர்களா?" என்று கேட்டான்.

"REIT-யே அசையாச் சொத்துக்கு ஈடுன்னு சொன்னா, சேகருக்கு ராம் ஈடுதான். இதோ, பையை எடுத்துக்கிட்டு வரேன்" என்றார் அந்த முதிய பெண்மணி.

ஆங்கிலத்தில் : சிவா மற்றும் பிரியா
தமிழ் வடிவம் : மதுரபாரதி

சிவா மற்றும் பிரியா 'Dollarwise Penny foolish' என்ற நூலை எழுதியுள்ளனர். மேலும் அறிய:www.wisepen.com

© TamilOnline.com