சிகாகோவின் பிரபல நாட்யா டான்ஸ் தியேட்டருக்கு (Natya Dance Theater) மக்ஆர்தர் பன்னாட்டுத் தொடர்பு நிதியம் (MacArthur International Connections Fund) தாராளமான நிதிநல்கை ஒன்றை வழங்கியுள்ளது. இந்தோனேசியாவிலுள்ள நான் ஜொம்பாங் நடனக் குழுமத்தோடு இணைந்து நாட்டிய நிகழ்ச்சி ஒன்றைத் தயாரிப்பதற்காக இந்த நிதிக்கொடை வழங்கப்படுகிறது. நடன அசைவுகளில் புத்தாக்கம், மாறுபட்ட ரசிகர்களுக்கேற்ற கற்பனைகள், சிகாகோவிலும் இந்தோனேசியாவின் படாங்கிலும் நடனப் பணிப்பட்டறைகள் நடத்துதல் என்பவற்றில் தொடங்கி, இறுதியில் இவ்விரு நகரங்களிலும் நடன நிகழ்ச்சி அரங்கேற்றத்தில் இந்தக் கூட்டுமுயற்சி நிறைவுறும். இறுதிப் படைப்பு மேலும் பிற நகரங்களுக்கும் போகவும் கூடும்.
பன்முகக் கலாசாரப் புரிதல், சமூகநீதி வளர்த்தெடுத்தல், சூழல்குறித்த பொறுப்புணர்வு ஆகியவற்றைத் தனது படைப்புக்கள் மூலம் நாட்யா செய்து வருகிறது. இந்தப் பின்னணியில், வரப்போகும் புதிய முயற்சியும் இரு கலாசாரங்களுக்கும் பாலம் ஏற்படுத்தி ஒரு உலகளாவிய கலை வெளிப்பாட்டை உருவாக்கும்.
மக்ஆர்தர் அமைப்பு 12 கலை, கலாசார அமைப்புகளுக்கு நிதிக்கொடைகளை அங்கீகரித்துள்ளது. சிகாகோ தவிர பிரேசில், சீனா, மலேசியா, ஃபிலிப்பைன்ஸ் உட்பட்ட 11 நாடுகளின் அமைப்புகள் இதிலடங்கும். பெரும்பாலான லாபநோக்கற்ற அமைப்புகள் தத்தளித்துக் கொண்டிருந்த ஆண்டான 2008ல், மக்ஆர்தர் நிதியம் தொடங்கப்பட்டது. இந்த நிதிநல்கை அதன் 9 மில்லியன் டாலர் மொத்தக் கொடையின் ஓர் அங்கமாகும்.
செய்திக்குறிப்பிலிருந்து |