மாண்டலின் ஸ்ரீனிவாஸ் - சில நினைவுகள்
ஒரு பக்கம் 'இது போன ஜன்மத்துத் தொடர்ச்சியா?' என்றொரு கேள்வி. இன்னொரு பக்கம் 'கோடியில் ஒருவர்தான் இதுமாதிரி மேதையாக வருவார்கள்' என்றெல்லாம் பேச்சு. இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல், தான் ஒரு மேதை என்றே நினைக்காமல், இசையே தன் மூச்சாக வாழ்ந்து மறைந்தார் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்.

ஸ்ரீனிவாஸ் புகழின் உச்சத்தில் இருந்தபோது சான் டியேகோவில் அவருடைய கச்சேரிக்குப் போயிருந்தேன். அவர் அனாயசமாக நான்கு தந்திகளிலும் சில பிடிகள் (phrases) வாசித்தார். கச்சேரி முடிந்தது. அவர் தன் மாண்டலினைப் பெட்டியில் எடுத்து வைத்துவிட்டார். சுற்றி இருந்த பலரும் விலகினார்கள். வீணை வாசிப்பவள் என்ற முறையில் சற்றே கூச்சத்துடன் அந்தப் பிடிகள் பற்றி, "விரல்களை எந்த முறையில் வைத்து எப்படி வாசித்தீர்கள்?" என்று கேட்டேன். நான் கேட்ட அந்த நிமிடமே ஓடிப்போய் பெட்டியைத் திறந்து வாத்தியத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்துவிட்டார்.

நான் பிரமித்தேன்.

சாதாரணமாக, கச்சேரிக்குப் பின் ரசிகர்களோடு பேசுவதற்குத்தான் பலரும் விரும்புவார்கள். ஸ்ரீனிவாஸோ மறுபடி மாண்டலினை எடுத்து வாசிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்த சந்தோஷத்தில் ஆர்வத்துடன் அந்தப் பிடிகளை வாசித்துக் காண்பித்தார். இது எனக்கு ஒரு புது அனுபவம்.

24/7 அவர் கையில் மாண்டலின் இருக்கும். 'மேதை' எனப் புகழப்பட்டாலும் சாதகம் செய்யாமல் சாதனை புரியமுடியாது. அதுபற்றி அவரிடம் கேட்டேன். "நான் ஒருநாள் வாசிக்காவிட்டால் யாருக்கும் ஒன்றும் தெரியாது. இரண்டு நாட்களாகி விட்டால் எனக்கு மட்டும் தெரியும். மூன்று நாட்களானால் ரசிகர்களுக்கே நான் வாத்தியதைத் தொடவில்லை என்பது தெரிந்துவிடும்" என்று அவர் சொன்னதை இன்றும் என் மாணவ மாணவிகளுக்கு நான் உதாரணமாகச் சொல்லுகிறேன்.

என் சினேகிதி சுபா நாராயணன் என்னிடம் சொன்ன ஒரு விஷயத்தைத் தென்றல் ரசிகர்களோடு பகிர விரும்புகிறேன். முதன்முறையாக லாஸ் ஏஞ்சலஸ் SIMA-வில் வாசிக்க வந்த ஸ்ரீனிவாஸ், சுபா வீட்டில் தங்கியிருந்தார். உடன் வயலின் வாசிக்க சிக்கல் பாஸ்கரனும் வந்திருந்தார். அந்தக் காலகட்டத்தில் பாஸ்கரன் அவர்கள்தான் பல கச்சேரிகளிலும் ஸ்ரீனிவாஸுக்கு பக்கபலமாக இருந்தவர். ஸ்ரீனிவாஸுக்குப் பத்து வயது இருக்கும்போது ஒரு சபாவில் "மணிரங்கு ராக ஆலாபனை, அதைத் தொடர்ந்து ஒரு கிருதியும் வாசியுங்களேன்!" என்று ஒரு ரசிகர் எழுந்து நின்று விண்ணப்பித்தாராம்.

ஸ்ரீனிவாஸுக்கு அந்தச் சமயம் மணிரங்கு பரிச்சயமில்லை. ஆனாலும் வயலின் வாசித்துக்கொண்டிருந்த பாஸ்கரன் அவர்களிடம் 'நீங்கள் ஆரோஹணம், அவரோஹணம் காட்டிக் கொடுத்துவிட்டு ஆலாபனை வாசியுங்கள். நான் உங்களைத் தொடர்கிறேன்.' என்றாராம். அத்தோடு மணிரங்குவில் அமைந்த 'மாமவ பட்டாபிராம' என்ற தீட்சிதர் கிருதியையும் பாஸ்கரனுடன் நிழலாகத் தொடர்ந்து வாசித்து முடித்தபோது ரசிகர்களின் கைதட்டல் அடங்கப் பல நிமிடங்கள் ஆயிற்று.

"யாருக்குமே மேடையில் என்ன நடந்தது என்று தெரியாது. ஸ்ரீனிவாஸ் வாசிக்க நான் வழக்கம்போல் வயலினில் தொடர்ந்தேன் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். பத்து வயதில் என்ன ஒரு ஞானம் இருந்தால் இது சாத்தியம்?" என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாராம் சிக்கல் பாஸ்கரன். சுபா நாராயணன் இதை என்னிடம் சொன்னபோது அதே கேள்விதான் என் மனதிலும் வந்தது.

மேதைகளில் பலர் சின்ன வயதிலேயே இறந்ததாகச் சொல்வார்கள். அந்தச் சரித்திரத்தில் இவரும் சேர்ந்துவிட்டாரே என்று இன்று கர்னாடக சங்கீத உலகமே துவண்டு போயிருக்கிறது. அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதுதான் உண்மை.

கீதா பென்னெட்

© TamilOnline.com