இரண்டு கட்டமாக நடைபெற்ற தமிழக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை, சேலம், கோவை, நெல்லை ஆகிய நான்கு மாநகராட்சிகள் அ.தி.மு.கவிடமிருந்து தி.மு.க கைப்பற்றியது மட்டுமல்லாமல் திருச்சி, மதுரை ஆகிய மாநகராட்சிகளையும் இம்முறை தி.மு.க கைப்பற்றியது. மாநகராட்சி மட்டும் இல்லாமல் நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் அதிக இடங்களையும் தி.மு.க கூட்டணியே கைப்பற்றியது. தமிழ்நாட்டில் உள்ள மூன்றாம் நிலை நகராட்சிகளையும் சேர்த்து மொத்த முள்ள 152 நகராட்சிகளில் 120 நகராட்சி களை தி.மு.க கூட்டணி கைப்பற்றியுள்ளது. இம்முறை அ.தி.மு.க கூட்டணிக்கு வெறும் 10 நகராட்சிகளே கிடைத்துள்ளது குறிப்பிடத் தக்கது. இத்தேர்தலில் நகராட்சிகளில் உள்ள வார்டுகளில் கணிசமாக சுயேட்சைகள் வெற்றிப்பெற்றுள்ளது முக்கியமான அம்சமாகும்.
முன்னதாக சென்னை மாநகராட்சியின் வாக்குப் பதிவின் போது நடைப்பெற்ற வன்முறையை அடுத்து பிரதான எதிர்கட்சி யான அ.தி.மு.க சென்னை நகரில் மொத்தம் உள்ள 155 வார்டுகளிலும் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தது. இதனைத் தொடர்ந்து சென்னை நீங்கலாக மற்ற மாநகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி களுக்கான வாக்குகள் எண்ணும் பணி கடந்த 18ம் தேதி நடைப்பெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் உயர்நீதி மன்றம் சென்னை மாநகராட்சியின் 17 வாக்குச் சாவடிகளுக்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டது.
மறுவாக்குப்பதிவு மற்றும் சென்னை மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளாமல் அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. இதுவரை இல்லாத அளவிற்கு இம்முறை சென்னை மாநகராட்சியின் 155 வார்டுகளில் பெரும்பாலான வார்டுகளை தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றியது. அ.தி.மு.க வெறும் நான்கு இடங்களையும், ம.தி.மு.க ஒரு இடத்தையும் பெற்று படுதோல்வியை சந்திக்க நேரிட்டது.
நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில், பேரூராட்சிகளைப் பொறுத்த வரை தி.மு.க கூட்டணி சுமார் 60 சதவீத இடங்களையும், அ.தி.மு.க கூட்டணி 30 சதவீத இடங்களையும் பெற்றுள்ளது.
தொகுப்பு: கேடிஸ்ரீ |