எஸ்.எஸ்.ராஜேந்திரன்
லட்சிய நடிகர் என்றழைக்கப்பட்டவரும், தமிழகத்தில் முதன்முதல் எம்.எல்.ஏ. ஆன நடிகர் என்ற புகழ் பெற்றவருமான எஸ்.எஸ். ராஜேந்திரன் (87) சென்னையில் காலமானார். திண்டுக்கல்லை அடுத்த சேடப்பட்டியில் பிறந்த ராஜேந்திரன் இளவயதிலேயே நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். 1947ம் ஆண்டில் 'பைத்தியக்காரன்' என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படங்களில் அறிமுகமானார். 1952ல் வெளியான பராசக்தி அவருக்கு புகழைத் தேடித் தந்தது. தொடர்ந்து கதாநாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் 'மனோகரா', 'சொர்க்க வாசல்', 'பூம்புகார்', 'சாரதா' எனப் பல படங்களில் நடித்தார். சுத்தமான தமிழ் உச்சரிப்பினால் ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டார். பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். எனவே பக்தி வேடங்கள், ஆன்மீகப் பாத்திரங்களை முற்றிலுமாகத் தவிர்த்தார். அதனால் லட்சிய நடிகர் என்ற பெயர் பெற்றார். பிற்காலத்தில் கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து பிரிந்து அதிமுகவில் இணைந்தார். அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் பணிபுரிந்தார். தமிழக அரசின் பாகவதர் விருது, கலைமாமணி விருது, சிறந்த நடிகருக்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை எஸ்.எஸ்.ஆர். பெற்றிருக்கிறார். இவருக்கு மூன்று மனைவிகள். எட்டு மகன்கள்.



© TamilOnline.com