ராஜம் கிருஷ்ணன்
தமிழ்நாட்டின் முன்னோடி எழுத்தாளரும் முற்போக்குச் சிந்தனையாளருமான ராஜம் கிருஷ்ணன் (90) சென்னையில் காலமானார். உறவுகளால் கைவிடப்பட்டு, சில ஆண்டுகாலம் தனிமையில் முதியோர் இல்லத்தில் வசித்துவந்த இவர், பின்னர் சிகிச்சைக்கென மருத்துவமனையில் இருந்தார். அங்கேயே காலமானார்.

1925ம் ஆண்டில், திருச்சி மாவட்டம் முசிறியில் ஆசாரமான குடும்பத்தில் பிறந்தவர் ராஜம். இளவயதிலேயே பொறியாளர் கிருஷ்ணனைத் திருமணம் செய்துகொண்டார். மனைவியின் படைப்பார்வத்தைப் புரிந்துகொண்ட கிருஷ்ணன், அவருக்குப் புத்தகங்களை அறிமுகப் படுத்தியதுடன் எழுதவும் ஊக்குவித்தார். கணவரின் பணி மாறுதல்கள் காரணமாகப் பல ஊர்களுக்கும் பயணப்பட்டார் ராஜம் கிருஷ்ணன். பரந்த வாசிப்பும், வாழ்க்கை அனுபவமும் அவரை எழுதத் தூண்டின. படைப்புகள் வெளியாகின. சிறுகதை, நாவல், கட்டுரை என மூன்றிலுமே முத்திரை பதித்தார். கள ஆய்வு செய்து, கதை மாந்தர் தொடர்பான மனிதர்களை நேரில் சந்தித்து, அவர்களோடு தங்கி அவர்களின் வாழ்க்கை முறையை ஆராய்ந்து, பின்னர் நாவல் எழுதுவது ராஜம் கிருஷ்ணனின் வழக்கம். அவரது 'கரிப்புமணிகள்', 'அலைவாய்க் கரையில்', 'குறிஞ்சித் தேன்', 'வளைக்கரம்', 'முள்ளும் மலர்ந்தது', 'வேருக்கு நீர்' போன்ற படைப்புகள் அவருக்குப் புகழ் சேர்த்தன. 'கரிப்பு மணிகள்' சென்னைத் தொலைக்காட்சியில் தொடராகவும் வெளிவந்து கவனத்தை ஈர்த்தது.

சமூகத்தில் நிலவும் பெண்ணடிமைத் தனம், உழைப்புச் சுரண்டல், ஏழைமை, அறியாமை, வன்கொடுமை போன்றவற்றைத் தனது எழுத்துக்களில் மக்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தவர் ராஜம் கிருஷ்ணன். சமூக அவலங்களைச் சாடுவதில் முதன்மையானவராக விளங்கிய அவர், எழுத்தோடு நின்றுவிடாமல் பல களப்போராட்டங்களிலும் கலந்துகொண்டவர். நேரு விருது, திரு.வி.க. விருது, சாகித்ய அகாதமி விருது, நியூயார்க் ஹெரால்ட் டிரிப்யூன் சர்வதேச விருது, கலைமகள் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். சென்னையின் குடிசைப் பகுதிக் குழந்தைளின் கல்வி வளர்ச்சிக்குத் தொடர்ந்து உதவி வந்தார். அவருக்குத் தென்றலின் அஞ்சலி.

© TamilOnline.com