டாக்டர். அழகப்பா அழகப்பன்
ஐ.நா.வில் உயரதிகாரியாகப் பணியாற்றியவரும், அமெரிக்காவின் முதல் இந்து ஆலயமான நியூயார்க் வல்லப மஹா கணபதி ஆலயத்தை நிறுவியவருமான டாக்டர் அழகப்பா அழகப்பன் (89) நியூயார்க்கில் அக்டோபர் 24 அன்று காலமானார். கானாடுகாத்தானில் பிறந்து, சுவாமிமலையிலும், சென்னையிலும் வளர்ந்த அழகப்பன் உழைப்பால் உயர்ந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்து எல்.எல்பி பட்டம் பெற்றார். ஐ.நா.வில் திட்டப்பணி அலுவலராகப் பொறுப்பேற்று, நீராதாரங்களுக்குப் பொறுப்பான இயக்குனராக உயர்ந்தவர். பிட்ஸ்பர்க் வெங்கடேஸ்வரா ஆலயம், ஹூஸ்டன் மீனாட்சி ஆலயம் நிர்மாணத்திலும் இவர் முக்கியப் பங்கு வகித்தார். சென்னை பெசன்ட் நகரில் அறுபடை முருகன் ஆலயத்தை நிறுவினார். ஏழாவது படைவீடாக குன்றக்குடியை அடுத்த மயிலாடும்பாறையில் முருகனுக்கும், ஞான சரஸ்வதிக்கும் ஆலயம் எழுப்பியிருக்கிறார். சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அழகப்பன், நியூயார்க் மருத்துவமனையில் காலமானார். அமெரிக்கத் தமிழர்களால் UN அழகப்பன் என்று விரும்பி அழைக்கப்பட்டவர். மனைவி விசாலாட்சி அழகப்பன். மகன்கள் டாக்டர். குமார் அழகப்பன், அருண் அழகப்பன், வைரம் அழகப்பன். மகள் மீனா அழகப்பன்.

அழகப்பா அழகப்பன் தென்றலுக்கு அளித்த நேர்காணலை வாசிக்க

© TamilOnline.com