முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 3)
பின்புலம்: சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு உதவுகின்றனர். கிரண் வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்கு வர்த்தகமானாலும் சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்ஃபோர்ட் மருத்துவமனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிபவள். மூவரும் துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

இதுவரை: ஷாலினி தன் தம்பி கிரண் வீட்டிற்கு அம்மா அனுப்பிவைத்த உணவைக் கொடுக்க் வருகிறாள். கிரண் ஒரு முப்பரிமாண ப்ரின்டரை வைத்துத் தயாரித்த போர்ஷா கார் மாடலின் நுணுக்கமான அம்சங்களைப் பார்த்து அது ப்ரின்டரில் தயாரானது என்று நம்ப மறுக்கவே, கிரண் புதிதாகப் பதித்துக் காட்டி வியப்பளிக்கிறான். அப்போது, ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து சூர்யாவின் உதவி கேட்டு மின்னஞ்சல் வரவே இருவரும் சூர்யாவின் வீட்டிற்கு விரைகின்றனர். அங்கே...

*****


வாசலில் பொறுமையின்றி ஆடிக் கொண்டிருந்த கிரணையும் நிதானமாக வந்த ஷாலினியையும் ஒரு கணமே நோட்டம் விட்ட சூர்யா, "என்ன உயிரியல் முப்பரிமாணப் பதிவுப் பிரச்சனையா?" என கண கச்சிதமாகக் கேட்டதும் அவரது யூக சக்தியை நன்கறிந்திருந்த இருவரும்கூட அசந்தே போய் எவ்வாறு கண்டறிந்தார் என விளக்கம் கேட்டனர்.

வியப்பால் வாயடைத்தவர்களைப் பார்த்து சூர்யா முறுவலித்தார். "இப்ப அசந்துபோய் எப்படின்னு கேக்கறீங்க. நான் விளக்கியதுமே, சே இவ்வளவுதானாம்பீங்க" என்றார்.

கிரண் "நிச்சயமா இல்லை சூர்யா, ப்ளீஸ், ப்ளீஸ் எப்படி யூகிச்சீங்கன்னு சொல்லிடுங்க. இல்லன்னா, என் தலையே வெடிச்சிடும்!"

சூர்யா புன்னகையுடன் விளக்கினார். "சொல்லப் போனா அதுல ஒண்ணுமேயில்லை. கிரண், நீ ஏற்கனவே என்கிட்ட உன் முப்பரிமாணப் ப்ரின்டரைப் பத்தி ஆர்வத்தோட பேசியிருக்கே. அப்ப இருந்த அதே உத்வேகத்தோட இப்ப இருக்கே. உனக்கு ரொம்ப ஆர்வம் இருக்கற விஷயத்துல வேலைன்னாதான் இந்த மாதிரி நீ குதிப்பே. அதுமட்டுமில்ல, ஷாலினி கைப்பையில அந்த ப்ரின்டர் புரோஷூர் நீட்டிக்கிட்டிருக்கு பாரு. அதுனால, இதுக்கு முன்னாடி ரெண்டு பேரும் அதப்பத்தி எதோ பேசிக்கிட்டிருந்திருக்கணும். மேலும், ஷாலினி அவளோட சக ஆராய்ச்சியாளர் உதவி கேட்டதா செய்தியனுப்பிச்சா. அதுனால விஷயம் உயிரியல் சம்பந்தப் பட்டதா இருக்கணும். இப்ப ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கீங்க. இதெல்லாம் சேர்த்துப் போட்டு ரெண்டும் ரெண்டும் அஞ்சுன்னு இப்படித்தான் இருக்கணும்னு ஒரு யூகமா எடுத்து வீசினேன் அவ்வளவுதான். அது அதிர்ஷ்டவசமா சரியாச்சுன்னு தான் வச்சுக்கணும்."

கிரணும், ஷாலினியும் ஒரே குரலில் "சே, அவ்வளவுதானா!" என்றனர்.

சூர்யா வாய்விட்டு உரக்கச் சிரித்தார். "பாத்தீங்களா, நான்தான் சொன்னேன் இல்ல? சரி போகட்டும், மேஜீஷன் எல்லாருக்கும் இதே கதிதான். தந்திரம் என்னன்னு தெரிஞ்சாச்சுன்னா சுவாரஸ்யம் போச்சு. பரவாயில்லை. இந்த மாதிரியான யூகம் மத்தவங்களுக்கு உதவியானா போதும்."

ஷாலினி சமாதானப் படுத்தினாள். "அதான் பலமுறை பயனாகியிருக்கே சூர்யா. ஆனாலும் பாருங்க, உங்க வழிமுறைகளைப் பத்தி நல்லாத் தெரிஞ்ச எங்களுக்கே நீங்க விளக்கற வரைக்கும் தெரியலையே, அதான் உங்க வெற்றி."

சூர்யா தலையாட்டியபடி, "சரி சரி, விடுங்க. விஷயத்துக்கு வருவோம். நானும் போன கேஸுக்கப்புறம் சில மாதங்கள் ஓய்வா இருக்கலாம்னு இருந்து சலிச்சே போயாச்சு. திரும்ப சுவாரஸ்யமான கேஸ் ஒண்ணு கிடைச்சது நல்லதுதான்."

ஷாலினி மகிழ்ச்சியில் கூவினாள். "ஓ! என் தோழி ரொம்ப சந்தோஷப்படுவா. உடனே செய்தியனுப்பறேன். அங்க சீக்கிரமா போகலாம் வாங்க" என்றபடி கைபேசியில் குறுஞ்செய்தி தட்டிவிட்டாள்.

கிரணும் குதித்தான். "ஹையா! முப்பரிமாண ப்ரின்டர், அதுவும் இன்னும் சுவாரஸ்யமா, உயிரியல் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பம். இதை மட்டும் நாம நிவர்த்திச்சோம்னா நான் எனக்கொரு செல்லப் பிராணியையே ப்ரின்ட் பண்ணிக்கலாமான்னு நெனைக்கறேன், என்ன சொல்றீங்க?"

ஷாலினி பழித்துக் காட்டினாள். "ஹுக்கும். செல்லப் பிராணி என்ன, இந்த நுட்பம் அந்த அளவுக்கு முன்னேறிடுச்சுன்னா, நீ கேர்ள் ஃப்ரெண்ட்ஸா ப்ரிண்ட் பண்ணித் தள்ளிடுவயே!"

கிரண் முறைத்தான். "ஹேய் ஷால், நான் ஒண்ணும் உன்ன மாதிரி நெர்ட் இல்லை. என் பின்னாடி எத்தனை பொண்ணுங்க அலையறாங்க தெரியுமா? புதுசா ஒண்ணும் ப்ரின்ட் பண்ண வேண்டிய தேவையில்லை."

ஷாலினி முகவாயைத் தோள்மேல் இடித்துக் கொண்டாள் "அய்யே, அந்தப் பொண்ணுங்களைத்தான் நானும் பாத்திருக்கேனே. பொண்ணுங்களாம் பொண்ணுங்க. சுத்த உதவாக்கரைங்க. அதுங்கதான் உன் பின்னாடி அலையும். ஒனக்கு நல்ல பொண்ணா வேணும்னா நான் குடுக்கற ஆர்டர்படி ப்ரின்ட் பண்ணாத்தான் சரியா வரும்."

கிரண் பதிலுக்கு ஏதோ கூறப் போகையில் சூர்யா குறுக்கிட்டார். "ஹேய் சின்னப் பசங்களா, உங்க குடுமிப் பிடி சண்டையைக் கொஞ்சம் நிறுத்துங்க. பாவம் அவங்களுக்கு என்ன பிரச்சனையோ! ஷாலினி, உன் ஃப்ரெண்டைப் போய்ப் பார்ப்போம், புறப்படறீங்களா?"

ஷாலினி தலையசைத்தாள். "சே, ரொம்ப சரியா சொன்னீங்க சூர்யா. சின்னப் பசங்க மாதிரிதான் நடந்துக்கறோம், இல்ல? போலாம் வாங்க." ஷாலினி குறுஞ்செய்தியிலிருந்த முகவரியைப் பார்த்தபடி செல்பேசி வரைபடத்தில் போகும் வழியைப் பார்த்தாள். "ஊம், ரொம்ப ஒண்ணும் தூரமில்லை. ஆனா நாம கிரண் கார்ல போக வேண்டாம். ரொம்ப துள்ளிக்கிட்டிருக்கான், இடிச்சுடப் போறான். நானே ஓட்டறேன்" என்றாள்.

மூவரும் ஷாலினியின் வண்டியில் ஏறிப் புறப்பட்டனர். கிரணால் ஷாலினியின் நிதானமான ஓட்டுதலைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. "அம்மா, தாயே, கொஞ்சம் வேகமாக ஓட்டேன் ப்ளீஸ்" என கெஞ்சினான். இருந்தாலும் ஷாலினி வெகு ஜாக்கிரதையாகவே ஓட்டிச் சென்றடைந்தாள்.

அந்தக் கட்டிடத்தின் முன்னால், "குட்டன்பயோர்க்" என்ற பெயர்ப் பலகை வைக்கப் பட்டிருந்தது. ‌ஷாலினி, "வாவ், இதைப் பார்த்தீங்களா சூர்யா, என்ன பிரமாதமான பெயர் இல்ல?" என்றாள்.

கிரண் புரியாமல் குழம்பினான். "இது என்ன நல்ல பெயர்? குட்டனாவது, பயோர்காவது? என்ன நல்லா இருக்கு!"

சூர்யா, "கிரண், உனக்கும் புரியலயா? இது இந்த பிஸினஸுக்கு பிரமாதமான பெயர்தான்" என்றார்.

கிரண் குழப்பத்துடன் தலையசைத்தான். "புரியலையே. சரி நீங்கதான் சொல்லுங்களேன்..." என்றான்.

சூர்யா, "ஷாலினியே சொல்லட்டும். அவதானே முதல்ல பார்த்து கண்டுபிடிச்சா. எனக்கும்கூட முதல்ல உதிக்கலை. அவ சொன்னப்புறந்தான் எனக்கும் அந்த கனெக்‌ஷனே புரிஞ்சுது. வெரிநைஸ் ஷால். கிரணுக்கு விளக்கு" என்றார்.

கிரண் நையாண்டி செய்தான். "சூர்யா, உங்களுக்கும் புரியலை போலிருக்கு. அதான் ஷாலினியையே சொல்லச் சொல்றீங்க."

சூர்யா முறுவலித்தார். "அப்படியே வச்சுக்கயேன். ஆனா, ப்ரின்டர் சம்பந்தம் உனக்குத் தோணலைங்கறது ஆச்சர்யந்தான். சரி ஷால் சொல்லு."

சூர்யா தன்னைப் பாராட்டிய பெருமிதத்துடன் ஷாலினி விளக்கினாள். "ஏய் கிரண், என்ன இன்னும் முழிக்கிறே, ட்யூப் லைட், ட்யூப் லைட். சூர்யாதான் ஒரு ஹிண்ட் குடுத்தாச்சே..."

கிரண் தலையில் அடித்துக் கொண்டான். "ஓ! இப்ப தெரியுது. குட்டன்பர்க்? பயோ ப்ரின்டர்? அஃப் கோர்ஸ்! குட்டன்பயோர்க்! நான் ஒரு சரியான மண்டுதான். ஒத்துக்கறேன்!"

ஷாலினி கலகலத்தாள். "அப்பாடி, இப்பவாவது புரிஞ்சுதே, அதாவது நீ மண்டுன்னு." கிரண் விளையாட்டாக அவளை அடிப்பதுபோல் கையை உயர்த்திச் செல்லமாகத் தட்டிவிட்டுச் சிரித்தான்!

சூர்யா மேற்கொண்டு விளக்கினார். "குட்டன்பர்கின் பதிப்பு இயந்திரம் உலகத்தில் பலப்பல புரட்சிகளை விளைவித்தது. சாமான்யர்களுக்கும் படிப்பறிவு பரவ மிக உதவி செய்து, புரட்சிகரமான கருத்துக்களை மக்களிடையே பரப்பியது. தொழில்புரட்சி (industrial revolution), ஃப்ரென்ச் புரட்சி, அமெரிக்க சுதந்திரம் போன்ற புரட்சிகள் குட்டன்பர்கின் கண்டுபிடிப்பில்லாவிட்டால் நடந்திருக்காது என்பது ஒரு கருத்து. இவர்கள் அத்தகைய புரட்சியை உயிரியலிலும், மருத்துவத்திலும் நடத்த முயல்கிறார்கள். அதனால், இது ரொம்பப் பொருத்தமான பெயர்தான்."

ஷாலினி தலையசைத்து ஆமோதித்துவிட்டு மேலே தொடர்ந்தாள். "அது மட்டுமில்லை. குட்டன்பர்க் செய்த பிறகு வெகுவாகப் பரவிய பதிப்புச் சாதனங்கள் புத்தகங்களைப் பெருமளவில் பதிப்பித்ததால், படிக்க ஆரம்பித்த மக்களுக்குக் படிப்புக் கண்ணாடி தேவைப்பட, லென்ஸ்களை உருவாக்கும் திறமையும் பெருகியது. அதனால் தொலைநோக்கிகள் (டெலஸ்கோப்), நுண்ணோக்கிகள் (மைக்ராஸ்கோப்) ஆகியவற்றை உருவாக்கும் நுட்பங்கள் முன்னேற, வானியலும் (astronomy), உயிரியலும்கூடப் பெரும் முன்னேற்றம் பெற்றன. ஒரே ஒரு கண்டுபிடிப்புக்கு எவ்வளவு தாக்கம் பாத்தீங்களா? இந்த முப்பரிமாண உயிரியல் பதிப்பும் அந்த மாதிரி இப்ப கற்பனைகூடச் செய்ய முடியாத புதுப் பலன்களை அளிக்கலாம்..."

ஷாலினி சொல்லி வாய் மூடுவதற்குள், "ரைட் யூ ஆர்! நீங்கதான் ஷாலினியா? இவர்தான் சூர்யா போலிருக்கு. ஒ, யூ மஸ்ட் பீ கிரண். ஷாலினியோட சக ஆராய்ச்சியளர் எல்லா விவரத்தையும் எனக்கு அனுப்பிட்டாங்க. என் பெயர் அகஸ்டா க்ளார்க். இந்த குட்டன்பயோர்க் நிறுவனம் நான் ஸ்தாபித்ததுதான்" என்று படபடவென உற்சாகக்தோடு வாக்கியங்களை அள்ளி வீசியபடி அவர்களுடன் பலமாக கைகுலுக்கி வரவேற்றாள் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி.

சூர்யா அவளோடு கை குலுக்கிவிட்டு வழக்கம்போல் ஒர் அதிர்வேட்டை வீசினார். சூர்யா வீசிய யூக வேட்டின் விவரங்களையும், முப்பரிமாண மெய்ப்பதிவு முடிச்சின் சிக்கல்களையும் வரும் பகுதிகளில் காண்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com