பாண்டியர் கருவூலத்தின் இரகசியம்
பாண்டியரின் கருவூலம் செல்வ வளத்திற்குப் பெயர்போனது என்பது தெரிந்ததே. கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் வாசாப்பு என்னும் இசுலாமிய ஆசிரியர் "குலசேகர பாண்டியனுடைய அரசு செல்வம் கொழிக்கும் வளமுடையது. மதுரை நகர் அரசுப் பெட்டகத்தில் 1200 கோடிப் பொற்காசுகள் வைக்கப்பட்டிருந்தன. இதைத் தவிரப் பெருமதிப்புள்ள முத்து, கெம்பு(உரூபி), மரகதம் என்று வார்த்தைகளால் வருணிக்க இயலாத அளவு மணிவகைகள் இருந்தன" என்று குறிப்பிடுகிறார் ('தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு', உள்ளட்டைப் பக்கம், உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை, சிகாகோ, 2000).

இந்தப் பணத்தை மதிப்பிடச் சிறு கணக்கொன்று கணிப்போம்: ஒரு பொற்காசு முன்பு ஒருபவுன் அல்லது அரைபவுன் இருக்கும். அரைபவுன் என்று கொண்டால் அந்தக் கருவூலத்துப் பொன் மட்டும் 600 கோடிப் பவுன். இன்றைய தமிழ்நாட்டு அரசின் ஆண்டுவாரி நிதிச்செலவு தோராயம் 30,000 கோடி உருபாய்; அதைப் பொன்னால் மதிப்பிடப் பவுன் விலை 4500 உருபாய் என்று கொண்டால், தமிழ்நாட்டு அரசு ஆண்டுவாரி நிதி தோராயம் 7 கோடிப் பவுன் பொன்னாகும். அதன்படிக் குலசேகரபாண்டியன் கருவூலத்துப் பொன்னாகிய 600 கோடிப்பவுன் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 7 கோடிப் பவுன் என்ற வாசியில் செலவழித்தால் தோராயம் 85 ஆண்டுகள் தாங்கும்! கருவூலத்து மணிகள் மரகதங்களையும் கணக்கிட்டால் இன்னும் சில நூறு மடங்குகள் கூடத் தாங்கும்!

அந்தச் செல்வத்தின் இரகசியம் என்ன? அதற்கு விடை காணக் குறுந்தொகையில் பாலை பாடிய கடுங்கோவின் கவிதையைக் கேட்க வேண்டும். அங்கே பொருளீட்டச் சென்ற தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி தன் தோழியிடம் தலைவனின் வாழ்க்கை நெறியைச் சொல்லுகிறாள்:

"உள்ளது சிதைப்போர் உளர்எனப் படாஅர்!
இல்லோர் வாழ்க்கை இரவின் இளிவு!"

எனச் சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர், வாழி தோழி
(குறுந்தொகை: 283)
[இரவு = இரத்தல், பிச்சை கேட்டல்; இளிவு = எளிமை, கீழ்மை]

"முன்னோர் ஈட்டிவைத்துள்ளதைச் சிதைத்து வாழ்க்கை நடத்துபவர் உயிரோடு உள்ளவராகக் கருதப்படார், நடைப்பிணமாகவே மற்றவர் கருதுவர்! தம் முயற்சியில் சேர்த்த செல்வம் இல்லோர் வாழ்க்கை பிச்சைகேட்டலினும் எளியது, கீழானது என்று சொல்லிய உறுதியான கோட்பாட்டைத் தெளிவாகக் காட்டி என் தலைவர் பொருளீட்டச் சென்றுள்ளார், வாழி நீ தோழி!" என்று தலைவி சொல்கிறாள்.

ஆம். பாண்டி நாட்டின் வியப்புக்குரிய செல்வவளத்திற்குக் காரணம் பாண்டிய மன்னர்கள் தத்தம் பெற்றோர் ஈட்டிய செல்வத்தில் அரசு நடத்துவது இழுக்கென்று கருதிச் சொந்த முயற்சியில் புதிதாகப் பொருள் சேர்த்தார்கள் என்றுதான் இடைக்கால யாத்திரிகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

"முன்னோரால் ஈட்டிவைத்த பொருள்கொண்டு இல்லறம் நடத்துதல் முறையன்று என்பது பண்டையோர் கொள்கை" என்று அந்தக் குறுந்தொகைப் பாட்டின் குறிப்பில் உ.வே. சாமிநாதையர் குறிப்பிட்டுச் சில மேற்கோள்கள் காட்டுகிறார். இறையனார் அகப்பொருளுரையில் தலைவன் பொருட்பிணி கொண்டிருப்பது தன் வீட்டில் துய்ப்பதற்குப் பெற்றோரும் முன்னோரும் சேர்த்த பொருள் இல்லை என்பதால் இல்லை. தன் முன்னோரால் படைத்த "பல்வேறு பொருளெல்லாம் துய்க்கக்கிடந்ததுமன்; அதுகொடு துய்ப்பது ஆண்மைத் தன்மை அன்று" என்று தலைவன் நினைப்பதாலேயே மேலும் பொருளீட்டச் செல்கிறான் என்கிறது. எனவே தான் ஈட்டாததை வைத்து அனுபவிப்பது ஆண்மைக்கு இழுக்கு என்று கருதினர் பண்டைய ஆடவர் கருதினர் என்பது தெரிகிறது. மேலும் முன்னோர் படைத்த செல்வம் கொண்டு முன்னோர்க்கு மரியாதை செய்வதால் முன்னோர் இன்புறார்; தனக்கும் பயனில்லை என்று இறையனார் அகப்பொருளுரை கூறுகிறது.

பெற்றோர் சேமித்த பொருளில் வாழ்வது ஏன் பிச்சையை விடக் கீழானது? "தன் முயற்சி ஒன்று இன்றியே பெற்ற பொருளால் வாழ்தலினும் இரத்தலாகிய சிறு முயற்சியேனும் செய்து பொருள் பெற்று வாழும் இரவு உயர்ந்ததாயிற்று" என்கிறார் உ.வே.சா. அதாவது பிச்சை கேட்பதிலாவது சிறு முயற்சி என்னும் உழைப்பு உண்டு; ஆனால் முன்னோர் ஈட்டத்தில் வாழ்க்கை நடத்துவதில் ஒரு முயற்சியும் இல்லாததால் அவன் பிச்சைக்காரனைவிடச் சோம்பேறி என்ற இழிவுக்கு ஆளாகிறான்!

இதை இன்றைய தமிழ்ச்சமுதாயத்துப் பெற்றோரும் பிள்ளைகளும் கருத்தில் கொள்ளவேண்டும். பெண்வீட்டாரை உருட்டி மிரட்டிப் பொன்னும் மணியும் நிலபுலனும் வரதட்சிணையாகப் பெற்று மாமனாரின் உழைப்பில் வாழ முயலும் மாப்பிள்ளை ஆண்மையற்றவன் என்றே குறுந்தொகையும் மற்ற பண்டை இலக்கியமும் கண்டிப்பதை நினைப்பில் கொள்ளவேண்டும். சங்கக் காலத்திலும் அதற்குப் பின் நெடுங்காலமும் கல்யாணத்திற்குப் பெண்ணுக்கு மணமகன் தான் பொன்னும் பொருளும் பரிசமாகக் கொடுக்க வேண்டிய மரபு இருந்தது. திருமணத்திற்கு அவ்வாறு கொடையாக மணமகன் கொடுப்பதே அவன் ஆண்மைக்குத் தேர்வாக இருந்தது. அந்த மரபு மீளவேண்டும். மீண்டால் தமிழ்ச்சமுதாயத்தில் செல்வம் அளவின்றிக் கொழிக்கும்.

பெரியண்ணன்

© TamilOnline.com