எண்ணம் போல நடக்கும்
ஒரு கிராமத்தில் வாசுதேவன் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். தினந்தோறும் உழைத்துச் சாப்பிடுவான். எப்படியாவது பணக்காரன் ஆகி, சுகபோகமாக வாழ ஆசைப்பட்டான். காட்டுக்குள் சென்று தவம் செய்தால் ஏதாவது தேவதை வந்து அருள்செய்யுமோ என்று சோதிக்க ஆசை தோன்றியது. ஒருநாள் அருகிலிருந்த காட்டுக்குச் சென்றான்.

வழியில் நிறைய மாமரங்கள் இருந்தன. அதில் மாங்கனிகள் மணம் வீசின. சிலவற்றைப் பறித்து உண்டான். அதன் ருசியில் மகிழ்ந்து மேலும் சிலவற்றைப் பறித்து தன் துண்டில் மூட்டையாகக் கட்டினான். காட்டுக்குள் சென்று தவம் செய்ய ஆரம்பித்தான். பகல், இரவு கடந்து மறுநாள் பொழுது விடிந்தது. உண்ணாமல், உறங்காமல் தவம் செய்தான் வாசுதேவன்.

அந்தக் காட்டில் வாழ்ந்த தேவதை அவனது தவத்தைக் கண்டு மனமிரங்கி அவன்முன் தோன்றியது. "அப்பா, உன் தவம் கண்டு மகிழ்ந்தேன். உனக்கு என்ன வேண்டும்?" என்றது. வாசுதேவன் மகிழ்ச்சியுடன் அதை வணங்கி "என் ஊரிலேயே நான் பெரிய பணக்காரனாக வேண்டும். அதற்கு அருள் செய்" என்றான்.

"ம்ம்ம்ம். உன் எண்ணம் போலவே எல்லாம் நடக்கும். அது சரி. உன் அருகில் ஒரு மூட்டை வைத்திருக்கிறாயே அது என்ன?" என்றது தேவதை.

"அவையா... அவை மாங்கனிகள்."

"ஓ... எனக்கு மாங்கனிகள் என்றால் மிகவும் பிடிக்கும். எனக்கும் சிலவற்றைத் தருவாயா?"

"தேவதைக்கு சில கனிகளைக் கொடுத்து விட்டால் நமது பங்கு குறையுமே" என்று நினைத்த வாசுதேவன், மூட்டையிலிருந்து இரண்டு மாங்கனிகளை மட்டும் எடுத்துக் கொடுத்தான். சிரித்துக்கொண்டே அவற்றைப் பெற்றுக்கொண்ட தேவதை, "அப்பா.. எல்லாம் உன் எண்ணம் போலவே நடக்கும். நீ கவலைப்படாமல் வீட்டுக்குச் செல்" என்று கூறி மறைந்தது. வரம் பெற்ற மகிழ்ச்சியுடன் வீட்டுக்குச் சென்றான் வாசுதேவன்.

அவன் வீட்டு வாசலில் இரண்டு பெரிய மூட்டைகளும் இரு சிறு பெட்டிகளும் இருந்தன. ஆச்சரியத்துடன் மூட்டையைத் திறந்து பார்த்தான். அதில் முழுவதும் அரிசி இருந்தது. பெட்டிகளைத் திறந்து பார்த்தான். அதில் இரண்டு தங்க மாம்பழங்கள் இருந்தன.

"ஆஹா.. இதுதான் தேவதை தந்த பரிசோ!" என்று எண்ணி மகிழ்ந்தான் வாசுதேவன். அதே சமயம் தேவதைக்குத் தான் இரண்டு மாம்பழங்கள் மட்டுமே கொடுத்ததும், அதைப் பெற்றுக்கொண்ட தேவதை, "எல்லாம் உன் எண்ணம் போலவே நடக்கும்" என்று சொன்னதும் நினைவுக்கு வந்தது. தான் கொடுத்த இரண்டு மாம்பழங்களுக்குப் பதிலாக இரண்டு தங்க மாம்பழங்களை தேவதை அளித்திருப்பதைப் புரிந்து கொண்டவன், தேவதைக்கு இன்னும் நிறையக் கொடுத்திருந்தால் இன்னும் நிறையத் தங்க மாம்பழங்கள் கிடைத்திருக்கும் என்பதையும் உணர்ந்து கொண்டான். "ம்ம்ம்ம்.. ‘எண்ணம் போல் வாழ்வு" என்று தேவதை சொன்னது இதுதானோ?! சரி, இனிமேலாவது பெருந்தன்மையாக வாழ்வோம்" என்று முடிவு செய்தான் அவன்.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com