மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்
கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்

ஆயுதமெடுக்க மாட்டேன் என்று போருக்கு முன்னால் அர்ஜுனனிடம் நிபந்தனை விதித்த கண்ணன், தன் சொல்லைத் தானே மீறி, போருக்குத் தயாராவதைப் பார்த்தோம். இது ஏதோ ஒருமுறை தற்செயலாக நிகழ்ந்துவிட்ட ஒன்றன்று. ஒன்பதாம்நாள் போர் முடிந்த சமயத்திலேயே, அன்று பீஷ்மர் காட்டிய வேகத்தையும் ஆற்றலையும், அவர் விளைவித்த பேரழிவையும் நினைத்தவாறு, அன்று இரவு ஆலோசனைக் கூட்டத்தில் தர்மபுத்திரன் பேசும்போது அவனைக் கிருஷ்ணன் இடைமறிக்கிறான். 'பீஷ்மர் ஒன்றும் கொல்ல முடியாதவர் அல்லர். அவரைக் கொல்வது அர்ஜுனனால் இயலாது என்பதும் உண்மையல்ல. இவன் ஆரம்பமுதல் அந்தச் செயலில் இறங்கத் தயங்கிக்கொண்டிருக்கிறான். இவன் கண்ணைத் தாத்தா பாசம் மறைக்கிறது. உபப்லாவியத்தில் நம் எல்லோருக்கும் முன்னால், அவரைக் கொல்வதாகச் சபதம் செய்தான் அல்லவா? ஒன்று அவன் இந்தக் காரியத்தில் ஈடுபடட்டும். அவனுடைய சபதத்தை நிறைவேற்றட்டும். இல்லாவிட்டால், யுதிஷ்டிரா, எனக்கு அனுமதி கொடு. இந்தக் காரியத்தை நான் ஒருவனாகவே நின்று செய்துமுடிக்கிறேன்' என்று கண்ணன் பேசுவதைக் கேட்கத்தான் கேட்கிறோம். அன்றைய போரில்தான் தேரைவிட்டுக் குதித்தோடி பீஷ்மரை நோக்கி இரண்டுமுறை 'கொல்வதைப்போன்ற' வேகத்துடன் கண்ணன் சென்றிருந்தான். அந்தச் சமயத்தில் அவ்வாறு செய்தது என்னவோ, அர்ஜுனனைச் செயலுக்குள் செலுத்துவதற்காக அவன் மேற்கொண்ட செயலே தவிர, அவனே நேரடியாகக் கொல்ல நினைக்கவில்லை. அப்போது அவன் மேற்கொண்டது மகத்தான நடிப்பே என்பதை ஒரு சிறிய விஷயத்திலிருந்து அனுமானித்துவிடலாம்.

'சக்கரப்படையைக் கையில் எடுத்துக்கொண்டு பீஷ்மரை நோக்கி ஓடினான்' என்றல்லவா எல்லோருமே சொல்கிறார்கள். அப்படித்தான் வியாசரும் சொல்கிறார். ஒன்று கவனியுங்கள். சக்கரப்படையை எடுத்துக்கொண்டு பீஷ்மரை நோக்கி ஓடுவானேன்! அருகில் எடுத்துச் சென்றால்தான் குத்திக் கொல்ல வேண்டுவதற்கு அதென்ன வாளா? யாராவது வில்லை எடுத்துக்கொண்டு, எதிராளிக்கு அருகில் நின்றபடியா அம்பை எய்வார்கள்? மிக அருகில் நின்றால் அம்பைச் செலுத்தவே முடியாது. அம்பு எய்வதற்கென்று குறைந்தபட்ச தொலைவாக ஒரு பத்துப் பதினைந்து அடிகளாவது எதிராளியிடமிருந்து விலகி நிற்கவேண்டும். மிக அருகில் நிற்பவன் மீது எய்வதற்கான சிற்றெல்லை (short range) அம்புகளும் இருந்தன. அவற்றைப் பிரயோகிக்கத் தனிப்பட்ட பயிற்சி தேவை. இப்படித்தான், துரோணருடைய தேர்த்தட்டின்மீது குதித்து அவருக்கு மிக அருகில் வந்துவிட்ட திருஷ்டத்யும்னனை இத்தகைய சிற்றம்புகளால் துரோணர் துன்புறுத்தினார். அவருக்கு மட்டுமே கைவந்த கலை அது என்று அந்த இடத்தில் வியாசர் குறிப்பிடுகிறார். துரோணர் ஒருவர்தான் இப்படி மிக அருகில் இருக்கும் இலக்கை வில்லால் அடிக்கக் கூடியவராக இருந்தார். மற்ற எல்லோருக்கும் வில்லிலிருந்து பாயும் அம்பு போய் தாக்குவதற்கு ஒரு குறைந்தபட்ச தொலைவு தேவைப்பட்டது. மிக அருகில் நின்றால் வில்லால் அடிக்க முடியாது என்பது பொது விதி.

சக்கரப்படைக்குத் திரும்புவோம். இருந்த இடத்தில் இருந்தவாறு எதிராளியின்மேல் வீசக்கூடிய ஆயுதமல்லவா சக்கரப்படை? சிசுபாலனைக் கொல்லும்போது கண்ணன் என்ன அவனுக்கு நெருக்கமாக நின்றுகொண்டா வீசினான்? அப்படி இருக்கும்போது, கையில் எடுத்துக்கொண்டு ஓடுவானேன்? கொல்வதானால், தேரில் இருந்தபடியே, இருந்த இடத்தில் இருந்தவாறே, பீஷ்ரின்மேல் எறிந்திருக்கக் கூடும் அல்லவா? இது அர்ஜுனனைத் தீவிரப்படுத்தும் உத்தி. அர்ஜுனனைக் குறித்து உரையாடும் சமயத்தில் இதைப்பற்றி விரிவாகக் காண்போம். இப்போது ஒன்பதாம்நாள் போர் முடிந்த இரவில் நடந்த உரையாடலுக்குத் திரும்புவோம்.

'சத்தியத்திலேயே மனத்தை நிலைக்கச் செய்திருக்கும் நீ வருந்தலாகாது யுதிஷ்டிரா! பீமனும் அர்ஜுனனும் ஆற்றலில் காற்றையும் நெருப்பையும் போன்றவர்கள். நகுல-சகதேவர்களோ இந்திரனுக்குச் சமமானவர்கள். இவ்வளவு ஆற்றல் படைத்தவர்களை அருகில் கொண்டிருக்கும் நீ வருத்தப்படலாகாது. நமக்கிடையே நிலவிவரும் நன்மதிப்பின் அடிப்படையில் கேட்கின்றேன், இந்தக் காரியத்தை நான் மேற்கொள்வதற்கு அனுமதி கொடு. பாண்டு புத்ரா! பீஷ்மருடன் நானே போரிடுவேன். உன்னுடைய ஆணையின்பேரில் நான் போரில் செய்யமுடியாதது என்ன இருக்கிறது! மனித ஏறான பீஷ்மரை சவாலுக்கு அழைத்து, திருதிராஷ்டரனின் புதல்வர்கள் கண்ணுக்கு எதிரில் அவரைக் கொல்வேன். பற்குணன் (அர்ஜுனன்) இதைச் செய்ய விரும்பாவிட்டால், நானே அதைச் செய்து முடிப்பேன். ஒற்றை ரதத்தில் இருந்தபடி (நான் தனியொருவனாகவே) கௌரவர்களின் பிதாமகரை நானே வீழ்த்துவேன். இந்திரனுக்குச் சமமான என்னுடைய ஆற்றலை (நாளை) நீ போர்க்களத்தில் காண்பாய். பயங்கரமான ஆயதங்களைப் பிரயோகிக்கும் பீஷ்மரை அவருடைய தேரிலிருந்து பூமியின் மேல் நானே வீழ்த்துவேன். (சுருக்கமாகச் சொன்னால், 'முதலில் இவனை ஆயுதத்தைக் கீழே வைக்கச் சொல். மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன்'. தொனிப்பொருளால் அர்ஜுனனைக் குத்திக் கிளப்புவதுதான் நோக்கம் என்பது சொல்லாமலேயே புரியும்.)

கண்ணன் மேலும் சொல்கிறான், 'அர்ஜுனனுக்காக நான் எதுதான் செய்யமாட்டேன்? தேவையென்றால் என் சதையைக்கூட அறுத்துக் கொடுத்துவிடுவேன். ஏனெனில், யார் உன் பகைவனோ, அவன் ஐயத்துக்கிடமின்றி என் பகைவன். யார் உனக்குச் சுற்றமோ, அவர்கள் என் சுற்றத்தார். உன்பகை, என் பகை. உன் உறவு, என்னுறவு. (இவை யாவும் கும்பகோணம் பதிப்பின் நான்காம் தொகுதியில் பீஷ்ம பர்வத்தின் நூற்றேழாவது ஸர்க்கத்திலிருந்து வடிக்கப்பட்டவை.)

ராமாயணத்தில் சுக்ரீவனைப் பார்த்த மாத்திரத்தில் ராமன் அவனுக்குக் கொடுத்த வாக்கு நினைவுக்கு வருகிறது.

'மற்று, இனி உரைப்பது என்னே? வானிடை, மண்ணில், நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும், உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்; உன் கிளை எனது; என் காதல்
சுற்றம், உன் சுற்றம்; நீ என் இன் உயிர்த் துணைவன்' என்றான்.


இனிமேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது சுக்ரீவா! உன்னைப் பகைத்தவர்கள் என்னைப் பகைத்தவர்கள். எவ்வளவுதான் தீயவராகவே இருந்த போதிலும் உனக்கு யாரெல்லாம் உற்றாரோ, அவர்கள் அனைவரும் எனக்கும் உற்றார்தான். உன் உறவு என் உறவு. என்னுடைய உறவனைத்தும் உன்னுடைய உறவு. நீ என் ஆருயிர்த் துணைவன்.

ஒப்பிட்டுப் பாருங்கள். ராமன் பேசியதற்கும் கண்ணன் பேசியதற்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா!

அப்படியானால், இப்படி ராமனையாகிலும் சரி, கண்ணனையாகிலும் சரி, ஓர் உறுதிமொழியைத் தரவைத்தது என்றால் அதற்குக் காரணமாக நின்றது எது? பக்தி என்பார்கள் பலர். தர்மம் என்பேன் நான். தர்மம் இல்லாதவனிடத்தில் பக்தி இருப்பதில்லை. 'பக்தி உடையார் காரியத்தில் பதறார்; மிகுந்த பொறுமையுடன், வித்து முளைக்கும் தன்மையைப்போல் மெல்லச் செய்து பயனடைவார்' என்றானல்லவா பாரதி, அப்படி, தர்மம் இருக்கும் இடத்தில் இருப்பதுதான் பக்தி. இதற்கு மாற்றுப்பாதை கிடையாது. தர்மத்தின் வழியில் நிற்கும்வரையில் ஒருவன் பூண்டிருப்பது வேஷம்தானே ஒழிய பக்தி அல்ல.

'தர்மன், போரில் வெல்ல எவ்வளவு அதர்மங்களை மேற்கொண்டான் தெரியுமா' என்று ரத்தம் சூடேற என்னைக் கேட்கத் தோன்றுகிறது, அல்லவா? இன்று ஒரு புன்னகையோடு நிறுத்திக் கொள்கிறேன். யார் பக்கத்தில் தர்மமிருப்பதாக நாம் கருதுவது முக்கியமில்லை. யார் பக்கத்தில் தர்மமிருந்ததாக வியாசரும் குந்தியும், ஏன் காந்தாரியும்கூட, குறிப்பிடுகிறார்கள் என்பதே முக்கியம். சந்திப்போம். தீபாவளி நல்வாழ்த்துகள்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com