அன்புள்ள சிநேகிதியே:
சென்ற மாதத் 'தென்றல்' இதழில் வாழ்க்கையில் சலிப்படைந்த பெண்ணுக்கு, அவள் எந்த வகையில் வாழ்க்கையில் பயனடைந்திருக்கிறாள் என்பதை உணர்த்திக் காட்டியிருந்தீர்கள். உத்தமம். ஆனால், மனிதர்கள் நாம் வைத்திருக்கும் வீட்டைப் பார்த்து, காரைப் பார்த்து நட்புக் கொள்வதில்லை என்று எழுதியிருந்ததை நான் மறுக்கிறேன். கண்டிப்பாக, அதுவும் இந்தியர்கள் குலம், கோத்திரம், சமூக அந்தஸ்து பார்க்காமல் பழகுவதே இல்லை. சமீபத்தில் எனக்கும் என் மனைவிக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை எழுதுகிறேன். நீங்கள் சொல்லுங்கள் உங்கள் கருத்தை. எப்படி எதிர்வாதம் செய்யப் போகிறீர்கள் என்று பார்க்க ஆசை. நான் செய்தது உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், என்னுடைய கோபத்தை, ஏமாற்றத்தைப் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
நாங்கள் இங்கே செட்டில் ஆகி 25 வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆரம்ப காலத்தில் கஷ்டம்தான் பட்டோம். என் மனைவி வேலைக்குப் போக முடியவில்லை. இரண்டு குழந்தைகள். என் சகோதரன் ஸ்பான்சர் செய்து, வந்தோம். அபார்ட்மெண்டில்தான் பல வருடங்களைக் கழித்தோம். கொஞ்சம் பணம் சேர்த்து வீடு வாங்குவதற்குள் பசங்கள் படிப்பிற்குத் திண்டாட வேண்டியிருந்தது. இங்கு குடிபெயர்ந்த பலபேர் இப்படித்தான் முதலில் இருந்திருப்பார்கள் என்று புரிகிறது. இல்லையென்று சொல்லவில்லை. திடீரென்று பணம் வந்தவுடன் மாறிப்போய் விடுகிறார்களே அதுதான் பிடிக்கவில்லை. எங்கே போய்விடுகிறது ஆழ்ந்த நட்பும், உறவு முறையும்?
நாங்கள் வந்து ஒரு 5-6 வருடங்கள் இருக்கும். அப்போது ஒரு இளம்தம்பதி (கணவர் டாக்டர்) எங்கள் அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸில் அடுத்த பிளாக்கில் குடிவந்தார்கள். என் மனைவி பெரிய பரோபகாரி. அந்தப் பெண் மலங்க மலங்க இருந்தாள். அமெரிக்காவுக்குப் புதிது. கணவர் வேலைக்குப் போக, இவள் தனியாக வீட்டில் இருக்கக்கூட பயந்தாள். பணக்கார வீட்டுப் பெண். சமைக்கக்கூடத் தெரியாதுபோல இருந்தது. என் மனைவி பெரிய சகோதரி போல இருந்து அந்தப் பெண்ணை அப்படி கவனித்துக் கொண்டாள். மிகவும் சிநேகிதமாக இருந்தார்கள். அப்புறம் அவன் ரெசிடென்ஸி முடிந்து, வேறு இடத்திற்குப் போக வேண்டியிருந்தது. போய் இரண்டு வருடங்கள் தொடர்பில் இருந்தார்கள். அப்புறம் அவள் மேல்படிப்பு, குழந்தை என்று வாழ்க்கை பிஸியாகப் போய் விட்டது, அவர்களுக்கு. என் மனைவி ஃபோன் செய்தாலும், திரும்பிக் கூப்பிடுவதை விட்டு விட்டார்கள்.
ஒருமுறை, உறவினர் வீட்டுத் திருமணம் அவர்கள் இருந்த ஊரில் நடந்தது. என் மனைவி அவர்களைப் பார்க்க ஆசைப்பட்டாள். சூது, வாது தெரியாதவள் அவள். மனிதர்களின் மாற்றம் அவ்வளவு சீக்கிரம் புரிபடவில்லை. "நாங்கள் வருகிறோம் என்று தெரிந்தும் 'வீட்டிற்கு வந்து தங்குங்கள்' என்று அவர்கள் சொல்லவில்லையே என்று என் மனதில் கொஞ்சம் வருத்தம். இருந்தாலும் ஹோட்டலில் தங்கிவிட்டு அவர்களைப் பார்க்கப் போனோம். பெரிய வீடு. இரண்டு அழகான குழந்தைகள். நாய்க் குட்டி, நீச்சல்குளம் என்று அமர்க்களமாக இருந்தார்கள். அவனைப் பார்க்க முடியவில்லை. "பிராக்டிஸில் பிஸி. வர லேட்டாகும்" என்றாள். நாங்கள் கிளம்பி விட்டோம். வீட்டைச் சுற்றிக் காண்பித்தாள். டீ சாப்பிட்டோம். "அடுத்தமுறை வரும்போது(?!) வந்து தங்கவேண்டும்" என்று சொன்னாள். என் மனைவிக்கு அவளைப் பார்த்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதற்கப்புறம் தொடர்பில்லை. பையன், பெண் படிப்பு என்று பிஸியாக இருந்து விட்டோம்.
2, 3 மாசத்துக்கு முன்பு என் மனைவி திடீரென்று ரொம்ப excited-ஆக விஷயத்தைச் சொன்னாள். இந்தப் பெண்ணை எங்கோ ஷாப்பிங்கில் பார்த்தாளாம். இந்த இடத்திற்கே திரும்பி வந்திருக்கிறார்கள். கொஞ்சம் 50 மைல் தள்ளி என்று வைத்துக் கொள்ளுங்களேன். அட்ரஸ், ஃபோட்டோ எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தாள். அவர்கள் இங்கே செட்டிலாகி ஒரு வருடம் ஆகப்போகிறது. எனக்கு எங்கேயோ உறைத்தது. நமக்கு ஏன் ஒரு மரியாதைக்குக் கூடத் தெரிவிக்கவில்லை என்று தோன்றியது. நான் அப்போது பேசாமல் இருந்துவிட்டேன். என் மனைவியை வருத்தப்பட வைக்கவில்லை, என் எண்ணங்களைத் தெரிவித்து. அவள் எல்லோரையும் நம்பிவிடுகிறவள். மிகவும் பாசத்தைக் காட்டுபவள்.
கொஞ்சநாள் முன்பு அவர்களை ஆசையாக டின்னருக்குக் கூப்பிட்டிருந்தாள். இரண்டு ஃபோன் கால்களுக்குப் பிறகு அந்தப் பெண் தனக்கு அன்றையதினம் ஏதோ சரிப்படாது என்றும், டாக்டர் கணவர் 'ஆன் காலில்' இருப்பதாகவும் சொல்லி வருத்தம் தெரிவித்தாள். என் மனைவிக்கு மிகவும் ஏமாற்றம். அப்போதும் பேசாமல் இருந்தேன். அதற்கு சிலநாட்கள் பிறகு, ஒரு ரெஸ்டாரன்டிற்குப் போயிருந்தபோது அந்த ஓனர், முதல் வாரம் அந்த டாக்டர் வீட்டுப் பார்ட்டிக்குத் தான் செய்த ஸ்பெஷல் அயிட்டம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். என் மனைவி அவர்களை விருந்துக்கு அழைத்த அதே தினம். எனக்கு "இவ்வளவுதானா இந்த நட்பெல்லாம்?" என்று பட்டென்று விட்டுப் போய்விட்டது. என் மனைவியிடம் சொன்னால் அவள் மிகவும் வருத்தப்படுவாள் என்று அதைப் பற்றிச் சொல்லவில்லை. அந்தக் குடும்பத்தை என் மனதிலிருந்து வெளியேற்றி விட்டேன். கொஞ்சம் சமாதானம் ஆனது.
போன வாரம் என் மனைவி வெளியில் எங்கேயோ போயிருந்தாள். நான்தான் ஃபோனை எடுத்தேன். அந்தப் பெண்தான். குழைந்து, குழைந்து பேசினாள். பிறகு தான் போன் செய்த காரணத்தை வெளியிட்டாள். அவளுடைய அம்மாவிற்கு உடம்பு சரியில்லையென்று அவள் அர்ஜென்ட்டாக இந்தியா கிளம்பிக் கொண்டிருக்கிறாள். கணவர் கான்ஃப்ரென்ஸில் மாட்டிக் கொண்டிருக்கிறார். டீன் ஏஜ் டாட்டர் வீட்டில் தனியாக இருக்கிறாள். நாய், பூனை வேறு. ஒரு நான்கு நாள், நாலே நாள் என் மனைவி போய் தங்கியிருக்க முடியுமா என்று ரிக்வெஸ்ட்.
"உங்களுக்குத் தான் நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்கிறார்களே. அங்கேயே கேட்டுப் பார்க்க வேண்டியது தானே" என்று நக்கலாகத்தான் கேட்டேன். புரிந்து கொண்டாளா என்று தெரியவில்லை. கேட்டுப் பார்த்தாளாம். All are busy working professionals. திடீரென்று தனது அருமைச் சகோதரியின் (!?) ஞாபகம் வந்ததாம். அந்தக் காலத்துல் அப்படி ஆசை ஆசையாக உதவி செய்வாளாம். என்னென்னவோ சொன்னாள். என் மனைவி அவள் பேச்சைக்கேட்டு அப்படியே மயங்கிப் போயிருப்பாள். உடனே எங்கள் பழைய டயோட்டாவில் இரவோ, பகலோ என்று பார்க்காமல் கிளம்பிப் போயிருப்பாள். எனக்கு எதிர்மாறான உணர்ச்சிகள். பொறுத்துக்கொண்டு, "அவள் வரட்டும். கேட்டுப் பார்க்கிறேன்" என்று சொல்லி ஃபோனை வைத்தேன். மறுபடியும் 15 நிமிடங்களுக்கு பிறகு ஃபோன் கால். நான் எடுக்கவில்லை.
நான் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவன். பிறரிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை. என்னால் முடிந்ததைச் செய்வேன். பதிலுதவி என்று நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் நாம் பிறரிடம் வைக்கும் நட்பு, நேசம் மதிக்கப்பட வேண்டும் என்று எண்ணுபவன். பணம் வந்தவுடன் பல பேருக்கு பழைய நட்பு மறந்து போய்விடுகிறது. அவர்களின் போலித்தனம், பாசாங்கு பிடிப்பதில்லை. மூன்றாவது முறையாக அந்தப் பெண் ஃபோன் செய்தபோது எனக்கு ஆத்திரம் வந்துவிட்டது. "தயவுசெய்து வேறு எங்கேயாவது பார்த்துக் கொள்ளுங்கள். Stop using people as door-mats" என்று அதிர்ந்து பேசினேன். அவள் "சாரி" என்று சொல்லி வைத்துவிட்டாள். நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாதோ என்று தோன்றியது. ஆனால் இதுபோன்ற exploitation-ஐத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் மனைவி வந்த பிறகு எதுவும் சொல்லவில்லை. இரண்டு நாள் கழித்து விவரமாக எடுத்துச் சொன்னேன். அவளுக்குக் கோபம் வரவில்லை. ஆனால் வருத்தம் நிறைய இருந்தது. மனிதர்கள் இப்படி நடந்து கொள்கிறார்களே என்று. எதையும் எழுதும் பழக்கம் இல்லை. முதல்முறையாகச் செய்கிறேன். நீங்கள் எப்படி இந்தச் சம்பவத்தை கணிக்கிறீர்கள் என்று கேட்க ஆர்வம்.
இப்படிக்கு ...................
அன்புள்ள நண்பரே,
நான் போன இதழில் "எல்லோரும்" என்று எழுதியிருப்பதாக நினைவில்லை. நல்ல உள்ளங்கள் நிறைய உண்டு என்பதை நான் இப்போதும் வலியுறுத்திச் சொல்லுகிறேன். வெள்ளை மனதுடன் பாசத்தைக் கொட்டிப் பழகிய உங்கள் மனைவியை அந்தப் பெண் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நஷ்டம் அவருக்குத்தானே தவிர, உங்களுக்கு இல்லை. நீங்கள் அவர்களை விட சமூக, பொருளாதார நிலையில் சிறிது குறைந்து இருந்தாலும் கொடுக்கும் நிலையில் தான் இருந்திருக்கிறீர்கள். வாங்கும் நிலையில் இல்லை. பெருமைப்படுங்கள்.
Some people take relationships for granted. எந்த உறவும் அவ்வப்போதாவது நீர் விட்டு உரம் போட்டு வளர்த்தால்தான் தழைக்கும். அந்தப் பெண்ணிற்கு உங்கள் உறவு அப்படி அத்தியாவசியமாகப் பட்டிருக்கவில்லை. உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கிறது. இல்லையென்று சொல்லவில்லை. நான் முன்பு ஒருமுறை எழுதியது ஞாபகம் இருக்கிறது. "நாம் பொருட்களை உபயோகிக்க வேண்டும். மனிதர்களை நேசிக்க வேண்டும்" என்று. ஆனால், நேர்மாறாகச் செய்யும்போது ஒருசமயம் இல்லையென்றாலும் ஒருசமயம் பிறர் தங்களைத் தாங்க வேண்டிய நிலைமை. அது அந்தப் பெண்ணிற்கு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கும் ஒரு விழிப்பு உணர்ச்சி ஏற்பட்டிருக்கலாம்.
இந்தச் சம்பவத்தை நான் எப்படிக் கணிக்கிறேன் என்று கேட்டிருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் விவரித்த விஷயங்கள்தான் தெரிகிறது. அந்தப் பெண்ணைத் தெரியாது. அவர் பொய் சொல்லியது உங்களுக்கு எதேச்சையாகத் தெரிய வந்தது. இல்லாவிட்டால் இவ்வளவு பொறுமையிழக்க வாய்ப்பில்லை. மனிதர்களின் போக்கை அவ்வளவு எளிதில் மாற்றமுடியாது. ஆனால் புரிந்து கொண்டுவிட்டால், நம் உறவின் போக்கை மாற்றிக் கொள்ள முடியும். அதுதான் நீங்கள் செய்தீர்கள். இது தவறா, சரியா என்பது அவரவர் கொள்கைகள், எதிர்பார்ப்புகளைப் பொறுத்தது. எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருக்க முடியாது. வகைதான் மாறுபடும். உங்கள் மனைவிக்கு ஏமாற்றம் இருந்தாலும் "ஐயோ பாவம் அந்தச் சின்னப் பெண். தனியாக அம்மா இல்லாமல் துணை இல்லாமல் எப்படி இருக்கிறாள்" என்று கவலைப்பட்டுக் கொண்டுதான் இருப்பார்.
வாழ்த்துக்கள், டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் |