காணாமல் போனவன்
நகர இரைச்சலில் புகை மண்டிய சாலையில் கண் மங்கலாகத்தான் முதலில் பட்டது. நெடுநாளாகியிருந்தது பார்த்து. ஒல்லியாக கலைந்த முடி. சொல் நெளிவது மாதிரி உடம்பு. உடல் நெளிந்து கும்புட, வில் உடம்புக்காரன் என்றால் வெள்ளேழுந்தியாய் தெரியும் தங்கராசு என எல்லோருக்கும்.

'ஏய்... ராசா.. இல்லே... இப்படி திரும்புங்க ராஜபாட்டு மாதிரி இருக்கீங்க... உனக்கு நல்ல கொலுப்புடா... அவேன்.., அவேன்.., வெம்பிக் கிடக்கே... கௌவுளி மதம் பாடுது...' முடிவெட்டி உருமாறும் பொன்னுசாமி.

கோழி கூப்பிட தங்கராசு வீடு களைகட்டும். யாவற்றையும் தங்கராசு உசுப்பி விடும். காலையில் மாட்டியது தெற்கு வீட்டு ராமு. கண்ணாடி பார்த்து தானாக சிரித்தது. அங்கிங்கும் திரும்பும் கண்ணாடியில் பதுங்கியிருந்தது அவள் முகம். முறைப்பெண் எட்டிப் பார்க்க ஒரு கை பொத்தி பார்த்தது கண்ணாடியை.

சாயாந்திரப் பொழுதில் சதா சினுக்கெடுத்துக் கொண்டிருந்தாள் கூந்தலில். கண்ணாடியில் பதிந்த கூந்தல் வாசம் நினைவிலாடும் சத்தங்காட்டி.

"ஏ.... ராசாவுக்கு உடம்பெல்லாம் மச்சம்... மச்சக்கார ராசாவுக்கு கெண்டை மீனென்ன... வாழையே மாட்டும்.." என்றது தங்கராசு.

"மாப்ளே.... சொக்குறாரே..." என்ற லிங்கம், தங்கராசு கிண்ணத்தில் ஐம்பது ரூபாய் ஒத்த நோட்டாய் போட்டார். முடி வெட்டியதை பாதியில் நிறுத்திய தங்கராசு போட்டதுக்கு மேல கூட ஒரு ரூபாயாவது போட்டாத்தான் கத்திரி ஆடும் என்க, ராமுக்கு வெட்கம் புடுங்கித் தின்றது.

முகத்தில் ஈ ஆடவில்லை கண்ணாடி நொறுங்கி வேவு பார்த்தது பல முகமாய். ஊரின் வழக்கம் அப்படி. முடிவெட்டும் போது யாராவது தட்டில் காசு போட்டால் முகச்சவரம் ஆனாலும் பாதியிலே எழுந்து விடும் தங்கராசு. கூட சல்லி காசாவது போட்டால் தான் மீதி வேலை ஓடும். இல்லை ஒரே கூத்தும் கும்மாளமாய்.

இளவட்டங்கள் கூடி பணம் போடாத ஆளை கேலி பேசும். ஊரின் எழுதாக் கிழவியாய் ஓடியிருந்தது ஆதியிலிருந்து. அதுவும் முறைக்காரப் பையன் மாட்டினால் சொல்லவே வேண்டாம். ஒரே விசில். குமுக்குப் போட்டு நகரும் காலை அலாதியானது.

"மானத்தை வாங்கிப் புட்டியேடா...." என சட்டைப் பை பார்க்கும் ராமுவுக்கு கெதக்... என்றது மனசு. பையில் கிடந்தது இரண்டு ரூபாய். லிங்கம் சீத்தியடிக்க, தங்கராசு வீட்டில் கூடியது டீக்குடிக்க வந்த பெரிசு, இளவட்டம் யென எல்லாம்.

"அடே.. மீதி முடியே வெட்டு... வீட்டிலே போய் பணங் கொண்டு வாரேன்..." என்றார் ராமு.

"வழக்கத்தே மாத்துனா பொல்லாப்பு வரும் ராசா..." கிளைக்கார இளவட்டங்கள் நையாண்டி சொல்லி கண் அடித்தார்கள்.

"இப்படியே போ... மாப்ளே... தங்கச்சி மாருக கோவிக்க மாட்டாக..." ராமு கிளை பெரியசாமி. வந்தவர் சிரித்து பொய் கோவத்தில் "அட... நோக்காமிண்டைகளா... ஏந்...தம்பி மானத்தை வாங்குறீங்களே..." என நூறு ரூபாய் தாளை போட்டு, "வாங்கடா.. ஒரு கை பார்ப்போம்...." என்றார்.

இப்படியே மாற்றி மாற்றி ரூபாய்களை போட, சிரிப்பொலி ஓடி மறையும் ஊரில். அல்லோலப்பட்டு அசையும் தங்கராசு வீடு. மொகட்டில் உட்கார்ந்து கத்தும் காகம் இறகு வீசிப் போக தங்கராசு தெருவில் நடந்து வருகிறது, கூடவே குழந்தைகள். "

"ஏய்... தங்கம்... கதை சொல்லு.. கதை சொல்லு..." என்கும். குழந்தைகள் என்றால் தங்கராசுக்கு கொள்ளப் பிரியம். எப்போதும் சிறுவர்களுக்கான இதயம் பாடிக் கொண்டேயிருக்கும் விசில் ஊதி. நிலச் சூட்டில் நடக்க குளுமை தரும் வேம்பு.

வேப்பங் கனி உதிர்ந்து கிடக்கும் தங்கராசு பாதையெங்கும். கொட்டானில் பொறக்கித் தின்னும் சிறுவர்களை "ஏய்... செல்லம்... திண்கப்பிடாது... ஏ... ராசா....இல்லே.. துப்புங்க...கண்ணுவழி வந்துடும்.. துப்புங்க... துப்புங்க...ஏ.. மந்திரி. வந்தா... பூடிங்கிளாசை போடுவோம் இந்த இலையில்..." என்பார்கள் திரும்ப. ஊரின் அழியாத்தடமாக தங்கராசு.

யாவரின் நினைவு பிரியும் பாதையில் தங்கராசு நின்று "ஏ.. ராசா... இல்ல.. " என்கும். காதுகுத்து, இழவு, கல்யாணம் என ஊரின் காரியங்களில் எல்லாம் தங்கராசு கத்திரி சத்தங் கூட்டி மறையும். அம்பட்டை வராத காரியம் சீந்தாது... என்பர்

கல்யாண மாப்பிள்ளைகளுக்கு கிப்பீசு வெட்டினால் தனிக்கலை வரும் இளவட்டங்களுக்கு. வெட்டிக் கொள்ள பவுசி அழைக்கும் மயில் குரலாய். குலசாமி கோயில்களில் மாமன் மடியில் தங்கராசு காது குத்த பெத்தவள் பூரித்துப் போயிருப்பாள். பௌசி கூடி அலையடிக்க சந்தனங்கள் மணக்கும். கீச்..கீச்... என கத்திரி அசையும் லாவகம் ஊருக்கான ஆட்டமாயிருக்கும். ஊரின் ரகசியமான மனவெளி பூராம் தங்கராசுக்கு அத்துப்படி. காட்டுப் பறவை கத்திப் போக வெளியின் மூச்சு மௌனமாகும். உள் உறையும் மனம் கத்திரி நுனியில் சேகரமாகும் விந்தை. தங்கராசு சோறெடுக்க வருகிறதென்றால் இருட்டில் மிதந்து வரும் வள்ளி திருமண நாடகப் பாட்டு.

"தேடி வந்தனே... புள்ளி மானே... மேயாத மான்... நான் தேடி வந்தனே.... " வீடு வீடாய் தூக்கு வாளியில் சோறும், குளம்பும் வாங்கி வர பாட்டில் பாதி முடிந்திருக்கும்.

"வீட்டுல... யாரு, ராசாவா... ராசாத்தியா... நான் தங்கராசு வந்திருக்கேன். தாயீ... சோறு போடுங்க..." எல்லாத் தெருக்களிலும் கேட்கும் தங்கராசுவின் குரல் இருட்டில் அலையும்.

எல்லா வீடுகளும் முடிய வேலனின் வேஷம் பிடித்து தனியே நிகழ்த்திப் பார்க்கும் நேரம் வேடிக்கையானது. எல்லா வாண்டுகளும் கூடி நாடகம் பார்ப்பர் வண்ணாம் புளியில். ஒவ்வொரு வேசமாய் போட அடுத்த பாத்திரம் உருவாகும்.

ஒரே ஆள் அனைத்து நாடகக் காட்சிகளையும் விவரித்து நாரதரும், வள்ளியுமாக மாறி மாறிப் பாட, இருட்டுக்கே விழிப்பு கூடி தூங்கா இரவாய் அலைவுறும். ஜன்னலில் வந்து சேரும் நிலவின் முகம் கண்ணில் பளிச்சிட சிறுவர்கள் பப்பூன் ஆட்டத்தை தங்கராசோடு ஆடுவர்.

"ஏய்... நல்லாயிருக்கும்... ஏய்... இந்தாப்பா... இந்தா.... நல்லாருக்கும்...," ஆடிக் களைக்க நாடகம் முடிந்திருக்கும் இரவு. பசிக்கு தங்கராசு எடுத்து வந்த சோறு பரிமாறப்படும். ஆளுக்கொரு பிடியாய் தின்க, ருசி மெப்புக்கூடும்.

வண்ணாம்புளி இருளில் அசைய இலைகள் உதிர்ந்து மண்ணோடு சேகரமாகும். மட்கி சருகாய்ப் போன தரை பாதையாகும் விந்தை தொடராமல் போனது துரதிருஷ்டவசமானது.

இரவில் ஒளிந்திருக்கும் தங்கராசுவின் குரல் எப்போதும் கேட்கும் காற்றில். இருட்டு பத்திரப்படுத்தி விரிக்கும் தூங்கா இரவுகளில். வாளிகள் உரசும் கர்ணக் கிணறு. கிணற்றுக்கு துணையாய் எப்போதும் ஆளிருக்கும். சொறுக்... சொறுக்... என ஊரும் கிணற்றில் கதைகள் கெளித்து கிடக்கும் ஊற்றுக் கண்ணில். ஊர் இறைத்துப் போக தாகம் தீர்க்கும் நீர்க்கதைகள் வெண்கலக் குடங்களில் சலப்... சலப்... என சத்தம் கூட்டும்.

தங்கராசு ஒத்தபேரு. ஒருபானை போதும். பானை எடுத்து வைக்க யாராவது இறைத்து ஊற்றுவர். ஆத்தா... நல்லாயிருக்கனும்... என ஓட்டமும், நடையுமாய் வந்து சேர, தங்கராசுவை வழிமறிக்கும் விசும்பி. எப்பொழுது பானையெடுத்துப் போனாலும் "நான் ஊத்துறேன் தங்கராசுக்கு....ஏஞ் செல்லம்.... "என்கும். சோறெடுக்க வீட்டின்முன் நிற்கும் சுடுசோற்றோடு.

பசியாறாக் கண்களில் ஓடி மறையும் கனவு. இரவில் விழிப்பு கொள்ள மஞ்சப் பூ கோலம் விரிந்திருக்கும் வீடு. வீட்டின் ஓட்டில் வரைந்து கொண்டேயிருக்கும் கனவின் பாதையை விசும்பி, இரவில் ஆடிய ஆட்டங்காண பதுங்கி பார்க்கும் இரும் பிடித்து காத்திருக்கிறாள் மடியில்.

அள்ள அள்ள குறையா மடிக்கனவில் எல்லா ஆட்டமும் பதுங்கும் நினைவு. தங்கராசு நிழலாய் வருகிறாள் விசும்பி.' என்னாச்சு... இந்தாத்தாளுக்கு... பெரியசாமி அய்யா மக...' தங்கமான குணந்தான். சிரிச்சா வெள்ளிப் பணம் உதிர்ந்து கொட்டும். மாநிறத்தில் ஓடித் திரியும் மஞ்சள் மான். எப்போதும் தங்கராசுக்கென பூத்து சிரிக்கிறாள் விடியாத பொழுதுகளில். காட்டு மயிலாய் ஓடித் திரியும் குமரு... இந்த அம்பட்டப் பயல ஏன் அள்ளி திண்கப் பாக்குது... அய்யாக்களுக்கு தெரிஞ்சா தீஞ்சு போயிரும் பாவம்.

என்னத்தே சொன்னாலும் பூத்து கிடக்கும் வெள்ளிக் கண்களுடன் விசும்பி, "ஏய்... தங்கராசு... இந்தா புட்டு..." சோனமுத்து கிழவன் இறந்த சேதி சொல்ல காளி கோயில் மேட்டில் போக முன் மறித்து கை நீட்டியது. மறுத்தால் தேம்பி தேம்பி அழும். அதுதான் விசும்பி என அழைத்தனர் யாவரும்.

தயங்க கையைப் பிடித்து புட்டை வைத்து கலகலவென சிரித்து போனது. காடெல்லாம் வாசம் ஓடி மறையும். பூக்கள் விட்ட மரங்கள் தலையசைக்கும். செம்பூவத்தி சிரித்துப் பார்த்து மறைய, எதற்குள்ளும் அடைபடாமல் நழுவும்.

தங்கராசு பாதையெங்கும் பதுங்கி பார்க்கும் விசும்பியின் கண், "ஏய்... செல்லம்... அந்தப் பாட்டே பாடு... தேடி வந்தேனே புள்ளி மானே..." பயமும், மிதப்பும் கவ்வி நினைவாடும் பொழுதுகளில்.

அனாதப் பயலுக்கு அன்பு காட்டும் உசுரு. இரவுகளில் வடியும் கண்ணீரை விசும்பி துடைத்தவாறு இருக்கிறாள் நினைவில்... சர்க்கரைப் பூசணி கொடி விட்டுப் படர இனிக்கும் மனசெல்லாம். பூவின் வாசனை காடே கொள்ளாது மணக்கும்.

*****


ஆள் தெரியா இருட்டில் விசும்பி. அண்ணன்மார்கள் மூன்று பேர், கூடவே அப்பா. யார் முகத்திலும் அசைவில்லா சவக்கண் பதிந்திருந்தது. இருட்டின் இறுக்கம் முகத்தில் அப்பியிருந்தது. முதன் முதலாய் பக்கத்தூருக்கு நாடகம் பார்க்கப் போவதாக நினைப்பு விசும்பிக்கு. அப்படித்தான் அண்ணன்மார்கள் சொல்லி கூட்டிப் போனார்கள். வரும்போது உனக்கு பிடித்த பாவாடை, தாவணியைக் கட்டிக்கிட்டு வா... என்றான் அண்ணன்.

விசும்பிக்கு தாளாத சந்தோசம். தங்கராசுக்குப் பிடித்த மஞ்சள் பூப் போட்ட பாவாடையைக் கட்டி வந்திருந்தது. இருட்டில் குமரு வெளியேறி ஊர் தாண்டினால் குல நாசம்... என்பார் அப்பா. உலுத்துவிழும் சட்டங்களில் வீடு காணாமல் போயிருந்தது.

'என்ன நாடகம்ப்பா....?'

'மயான காண்டம்....' ஒற்றை வரியில் கூறிய அப்பாவின் முகம் காட்டிய இருள் விசும்பிக்கு தெரியவில்லை. காடு யாவற்றையும் தான் பொத்தி வைத்துள்ளது. ஊடு பாதையில் நடக்க பனை நிழல் பதறும் கும்மிருட்டு.

முப்பது குறுக்கக் காட்டில் சோளக்கதிர் அசைகிறது. ஆவ்.. என பிடிக்கும் என்று பயம். முனி உறங்கும் காட்டில் சோளப் பொம்மைகள் நடக்கிறது இரவு முழுவதும். சோளத்தை பிரித்துப் போகும் பாதையில் நின்றார் அப்பா.

கிர்... ரென உறைந்த காட்டில் மௌனம் அசைவு கொள்ளும் வெளி. கூப்பிட்டால் கூட கேட்காத வார்த்தை காட்டில் ஒளியும். ஆந்தை வீச்... சென கத்த காட்டு மயில் கதறுகிறது. எங்கோ விட்டுவிட்டு கேட்கும் நாயின் ஊளை. இருள் அடர்ந்து சுற்ற கருப்பு நாயின் கண்கள் விழித்து வரியாக முள் குத்திய ரத்தம் ஒழுகும் காடு. மையிருள் சுழல சொனங்கும் சோளக்கதிர்.

"என்னப்பா... நிக்கிறீங்க... சோளக்கதிர் திருடவா..." என்றாள் விசும்பி.

பதிலில்லை...

'மூத்தவனே... சரிப்பா...' என்கு முன் விழுந்தது வெட்டு தங்கச்சி கழுத்தில். கருகமணி பாசி போட்ட கழுத்து. முளக்கொட்டுக்கு வாங்கி கொடுத்திருந்தான் விசும்பிக்கு. கருகமணியில் பல்காட்டி சிரிக்கும் முத்து நினைவில்.

"அப்பா... அண்ணே... "என கட்டிப்பிடிக்க ஓடி வரும் மகளை தன்னிச்சையாக உருவிய அருவா வெட்டியது இருளில்...

"அப்...பா... நீங்களுமா.?".. யென மறைந்தது உயிர் காட்டில்.

ரத்தம் பீறிட, "ஏனே... சின்னவனே... மூச்சியில்லப்பா..". குறுக்கு காட்டு சோளக்கதிர் ஆடுகிறது, ரத்த வாடை நுகர்ந்து. பதுங்கிப் பார்த்த ஆந்தையின் கண்ணில் பயம் வழிந்தது. இமை மூட விரியும் இருள் சிவந்து மரத்தூரில் ஒடுங்கியது.

எதுவும் பேசாமல் தூக்கி வந்தனர் இரத்தக் கையுடன்... வர வர... "அப்பா... நீங்களுமா..." என்ற குரல் வழி மறித்து நின்றது. நால்வருக்கும் தாரை தாரையாய் ஓடியது உப்புக்கண்ணீர். ஓங்கி ஒலித்துக் கொண்டேருக்கும் 'அப்பா... அண்ணே... எனும் குரல். குறுக்கம் தாண்டி கரி மூட்டத்திற்கு வந்தனர் உடலை தூக்கி.

விறகெடுத்து அடிப்பொந்தில் திணிக்க கரிமூட்டம் புகை கக்கி வெளியேறியது. விடிய விடிய புகைந்து கொண்டே இருந்தது கரிமூட்டம். மேலே கத்தித் திரியும் ஆக்காட்டிப் பறவை ஊரை நோக்கிப் பறந்தது. நினைவு மிரட்ட பாதை மறந்தோடி ஒளிந்தது மூட்டத்தில். நால்வரும் வீடு வர இருள் வடிவில் துரத்தும் நாய் குலைக்கும் முற்றம்.

வெகுநாள் விசும்பி கண்ணில் தெட்டுப்படவில்லை தங்கராசுக்கு. விசும்பி மறைந்த நாளிலிருந்து நெஞ்சுக்குள் புகைச்சுருள் போல மனம் தேம்புவதை உணர்ந்திருந்தான் தங்கராசு.

கரிமூட்ட புகையில் மூச்சு சத்தம் கேட்பதாக சொன்னது ஊர். இவனும் அதை நின்று பார்க்க, மூச்சு சுழன்று கருவட்டம் என தன்னையே சுற்றி தேம்பலாக மாறுவதை பலநாள் உணர்ந்திருந்தான். இவன் மேல் எந்த தப்பும் இல்லை... எல்லாம் அந்த சிறுக்கிதான் என்றது சனம் எதையோ பேசி.

ஊரில் அவன் பேச்சு குறைந்திருந்தது. நின்ற நாடகம் திரும்ப அரங்கேறவில்லை. பத்திரிக்கை கொடுக்க குறுக்கு காட்டுப் பாதையில் போன போது "ஏ... ராசாவுக்கு நான் இறைத்து ஊத்துறேன் தண்ணீ... " என்ற குரல் கேட்டு விக்கித்து நின்றான்.

சோளக்கதிர் சொணங்கி அழ, கரிமூட்ட புகை சுழன்றது நெஞ்சில். அப்படியே மௌனமாய் போனவன்... திரும்பவே இல்லை... அந்த ஊரில் அவனுக்கான தடம் அழியாமல் கிடக்கிறது இன்னும்... எல்லாத் தெருக்களிலும் ஓடி மறைகிறது குரல்.

"ஏ... ராசா... ஏஞ் செல்லம்...."

ம. தவசி

© TamilOnline.com