"கி.ரா. கட்டமைத்துக் காட்டும் கரிசல் பூமியும், பா. ஜெயப்பிரகாசம் கட்டமைத்துக் காட்டும் கரிசல் பூமியும் வேறு வேறானவை. பா. ஜெயப்பிரகாசம் கட்டமைக்கும் கரிசல்பூமியும் கோணங்கி கட்டமைக்கும் கரிசல் பூமியும் வேறு வேறானவை. இதே போன்றுதான் ம. தவசி கட்டமைத்துக் காட்டும் மண்ணின் அடையாளம் என்பது அவரது தனித்துவத்துடன் கட்டமைக்கப்படுகிறது. இது அவருக்குக் கிடைத்த வெற்றி" என்று எழுத்தாளர் இந்திரனால் புகழ்ந்துரைக்கப்படும் ம. தவசி, ஏப்ரல் 19, 1976ம் நாள் முதுகுளத்தூரில் உள்ள இளம்செம்பூர் கிராமத்தில் மயில்சாமி-இருளாயி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் தவசியாண்டி. எளிய விவசாயக் குடும்பம். வறுமையான குடும்பச் சூழலிலும் முயன்று படித்தார். தமிழின் மீது கொண்ட ஆர்வத்தால் இளங்கலை மற்றும் முதுகலை தமிழ் இலக்கியம் பயின்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) பட்டம் பெற்ற இவர், தின இதழ்கள் சிலவற்றில் உதவியாசிரியராகப் பணியாற்றினார்.
வாழ்க்கை அனுபவங்களும் கிராமத்து நினைவுகளும் இவருள் உறங்கிய எழுத்தாளரை உசுப்பிவிட, கவிதை, சிறுகதை, கட்டுரைகள் எழுதத் துவங்கினார். "பனைவிருட்சி" என்னும் இவரது சிறுகதைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. கவிஞராகவும் தன்னை நிரூபித்துக் கொண்டார்.
நிலம் தெரியா விடியலில் என்னவெல்லாமோ நடக்கிறது பல வண்ண குரலில்
காகங்கள் கொட்டும் பனி பெய்யும் நிலவு வீடுகளுக்குள் சேவல்
எல்லாம் இருட்டை விரட்ட
உள்ளில் உறங்கும் தூக்கம்!
போன்ற கவிதைகள் தொகுக்கப்பட்டு "உள்வெளி" என்னும் தலைப்பில் நூலாக வெளியானது. ம. தவசி என்னும் படைப்பாளியை இலக்கிய உலகு அடையாளம் கண்டது. தொடர்ந்து 'ஊர்களில் அரவாணி', 'பெருந்தாழி', 'நகரத்தில் மிதக்கும் அழியாப்பித்தம்' போன்ற சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகி இவரது படைப்பாற்றலை நிரூபித்தன.
தவசியின் கதைகளில் வார்த்தை ஜாலங்களோ, மொழிச் சிடுக்குகளோ, மனதை மயக்கும் குறியீட்டு உத்திகளோ இரா. நேரடியாகக் கதை சொல்லும் பாணி இவருடையது. ஒவ்வொரு கதையிலும் இவரது கிராமியப் பின்புலமும் அனுபவமும் வெளிப்படும். யதார்த்த உலகின் சாதாரண மானுடர்களே இவரது கதை மாந்தர்களாய் வெளிப்படுவர். வாழ்வின் துயரம், வலி, உளவியல் சிக்கல்கள் என்று யதார்த்தமும், தொன்மமும் கலந்து ஆக்கங்களைத் தருவார் தவசி.
தவசி, நாவலாசிரியராகவும் முத்திரை பதித்துள்ளார். இவர் எழுதிய 'சேவல் கட்டு' தமிழில் சேவல் சண்டையை மையமாக வைத்து எழுதப்பட்ட முதல் நாவலாகும். சி.சு. செல்லப்பா மஞ்சு விரட்டுக் காளைகளை வைத்து 'வாடி வாசல்' எழுதியதுபோல், தவசி சேவல்களை வைத்து இதனை எழுதியுள்ளார். இந்நாவல் புனைவும், யதார்த்தமும் கலந்ததாகும். கள ஆய்வு மேற்கொண்டு எழுதப்பட்டது இது என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களும் பழங்காலத்தில் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்ததை இந்த நாவல் மூலம் அறிய முடிகிறது. மேலும் காட்டுச் சேவல், குப்பைக் காட்டு சேவல், பனங்காட்டுச் சேவல், பறவைச் சேவல், கறிச்சேவல், சாதிச்சேவல், ஊடு சேவல், கோழிச் சேவல் எனச் சேவலின் பல்வேறு வகைகளையும் நாவலில் காண்கிறோம்.
போத்தையா என்னும் அறுபது வயதுக்காரரும் அவரது தந்தையும் சேவற்கட்டு விளையாட்டில் வாழ்க்கையைத் தொலைத்ததை, சேவல் சண்டை பற்றிய நுணுக்கமான விவரங்களுடனும், கிராமத்து மனிதர்களின் உயிர்ப்புள்ள உணர்வுகளுடனும் இந்நூலில் சித்திரித்திருக்கிறார் தவசி. சேவல் கட்டில் தோற்றுத் தந்தை பைத்தியமாகியும், மகன் அதே சேவல் கட்டில் இறங்குவது, சேவல்களின் உலகம், அவற்றின் ஜாதகம், வெற்றிபெற்ற சேவலுடன் தம்பதிகள் புகைப்படம் எடுத்துக்கொள்வது, சேவலைக் கொன்று தனக்கு சமைத்துப் போட்ட மனைவியையே கணவன் கொல்வது, எப்போது சேவலை கட்டுக்கு விடவேண்டும், எப்போது ஓய்வு கொடுக்க வேண்டும், காலில் கட்டப்படும் கத்தியின் அளவு எனச் சேவல் சண்டை பற்றிய அனைத்து விவரங்களும் கொட்டிக் கிடக்கும் இந்த நாவல் தமிழின் ஓர் அரிய முயற்சி என்றால் அது மிகையல்ல. இந்நாவலுக்கு 2011ம் ஆண்டுக்கான இளம் சாகித்திய அகாதமி (யுவபுரஸ்கார்) விருது கிடைத்தது. தமிழில் முதன்முதல் 'யுவபுரஸ்கார்' விருது பெற்றவர் தவசிதான்.
2000த்திற்குபின் எழுத வந்த இளம் படைப்பாளிகளுள் முக்கியமானவர் ம. தவசி. தமிழின் தனித்துவமிக்க இளம் படைப்பாளியாகத் தன்னை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார். நிறைய எழுத வேண்டும்; தன் அனுபவங்களை, அறிந்தவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் தீவிரமாக இயங்கி வந்த அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். நோய் முற்றி படுத்த படுக்கையாக இருந்தபோதும் கதை, கட்டுரைகளை எழுதி வந்தார். தன்னையே 'தவசீலன்' என்று ஒரு பாத்திரமாகப் படைத்து இவர் எழுதியிருக்கும் 'வட்டமிடும் ஒற்றைக் குருவி' என்ற சிறுகதை கிராமத்து மனிதர்களின் எளிமையையும், அன்பையும். மனித மனத்தின் ஏக்கங்களையும், விழைவுகளையும், ஆசைகளையும் சுட்டுகிறது. தொடர்ந்து 'அப்பாவின் தண்டனைகள்' என்ற நூலையும் எழுதி வந்தார். அதனை விரைவில் வெளியிட வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறவில்லை. மார்ச் 9, 2013 அன்று தவசி காலமானார்.
அவரது மறைவுக்குப் பின் அந்நூல் சந்தியா பதிப்பகத்தின் மூலம் வெளியானது. இந்நூல் பற்றி, "தீவிர உடல் நலிவுக்கும் நோயின் உச்ச வதைநிலைக்கும் இடையில் இந்த 'அப்பாவின் தண்டனைகள்' படைப்பை எழுதியிருக்கிறார் தவசி. எந்த ஒரு இடத்திலும் வலியின் சிறு முனகல் இல்லை" என்று விமர்சிக்கும் வண்ணதாசன், "அசலான வாழ்வொன்றின் மாய இருப்பை, அழகான படைப்பு ஒன்றின் மாய யதார்த்தத்தை முன்வைக்கும் இந்தப் பக்கங்களை நான் எழுதியிருக்க வேண்டும். நான் செத்துப் போயிருக்க வேண்டும்," என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுவதே தவசியின் எழுத்து வன்மைக்குச் சான்று.
தவசிக்கு அங்காளேஸ்வரி என்ற மனைவியும் சங்கமித்ரா, வினோத் என்று இரு குழந்தைகளும் உண்டு. குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதிய தவசி, தமிழின் முக்கியமான இளம்படைப்பாளிகளுள் ஒருவர்
அரவிந்த் |