அரங்கேற்றம்: ப்ரணவ்யா மாணிக்கவேலு
ஆகஸ்ட் 16, 2014 அன்று ஸ்ருதிலயா நாட்டியப் பள்ளி மாணவி செல்வி. ப்ரணவ்யா மாணிக்கவேலுவின் பரதநாட்டிய அரங்கேற்றம் டாலஸ் மாநகரின் கிராண்ட்வில் ஆர்ட்ஸ் சென்டரில் நடைபெற்றது. 'பரிபரி ஸ்ரீபதமே' என்ற விநாயகர் வணக்கத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. அடுத்து வந்த "தேவி நீயே துணை" பதத்துக்கு ப்ரணவ்யாவின் அபிநயம் அபாரம். "நாதனை அழைத்து வா சகியே" என்ற காம்போதி வர்ணத்தின் நடனத்தில் ப்ரணவ்யாவின் பாதவேலை சிறப்பு. ஒவ்வொரு ஜதியிலும் முத்திரையிலும் அவரது நடனம் மிளிர்ந்தது.

தொடர்ந்து "ஆனந்தக் கூத்தனின்" என்ற பதத்துக்கு ஆனந்த தாண்டவம் ஆடிய ப்ரணவ்யா ஆவேசம், கோபம், கருணை என்று பலவித ரசங்களை அழகாக வழங்கினார். அடுத்து வந்த மீரா பஜனில் "மேரா தோ கிரிதர கோபாலா" என்று ஆரம்பித்து பக்தியையும், காதலையும் தத்ரூபமாக நடனத்தில் வெளிப்படுத்தினார். பாலமுரளியின் பிருந்தாவன சாரங்கா தில்லானாவை அற்புதமாக ஆடி முடித்தார். சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் ஆடிய "வந்தே மாதரம்" நடனம் மங்களமாக அமைந்ததற்கு அரங்கமே கைதட்டி மரியாதை செலுத்தியது.

குரு மதுஸ்ரீ சேதுராமன் நட்டுவாங்கமும், பெங்களூர் நீலா ராமானுஜன் குழுவினரின் குரலிசை மற்றும் பக்க வாத்தியமும் நிகழ்ச்சியை அருமையான விருந்தாக்கின.

சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com