ஆகஸ்ட் 23, 2014 அன்று ருத்ரஜீவி வெங்கட் கோவிந்தராஜின் வயலின் இசை அரங்கேற்றம் நடைபெற்றது. ருத்ரா பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கத்திய வயலின் இசையும், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கர்நாடக வயலின் இசையும் கற்றுவருகிறார். Mozart, Bach, Vivaldi போன்ற மேற்கத்திய மேதைகளின் படைப்புகளையும், தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், பாபநாசம் சிவன் போன்ற கர்நாடக இசை மேதைகளின் படைப்புகளையும் ஒரே மேடையில் வாசித்துக்காட்டி வந்திருந்தோரை வியக்க வைத்தார்.
மேற்கத்திய இசை குரு மேரி லிட்மேனின் சிற்றுரையைத் தொடர்ந்து, ஏஞ்செலா ஓல்ஸ்டாவின் பியானோ இசைப் பின்னணியில் ருத்ராவின் மேற்கத்திய வயலின் இசை (அட்டைப்படம்) ஆரம்பமானது. Violin Concerto No 3. in G Major-வில் தொடங்கினார். அந்த இசைக்கோர்வை வேகமாகத் தொடங்கி, மெல்ல ஊர்ந்து, மீண்டும் விரையும். Meditation in Thais வாசித்தபின், Concerto for Two Violins in D-minor-ல் அவருடைய தங்கை அஞ்சனா கோவிந்தராஜ் இணைந்து வாசித்தது கேட்கச் சுகமாக இருந்தது. Vivaldi-யின் Summer from the Four Seasons என்ற அற்புதமான இசைக்கோர்வையை வாசிக்கும் முன்னர் வெப்பம், ஈரப்பதம், பறவையின் கூவல், காற்று, சூறாவளி, தூக்கம், இடி, பூச்சிகள் என்பவற்றுக்குத் தன் வயலின் வாயிலாக அர்த்தம் கொடுத்தது நயமாக இருந்தது.
சிறு இடைவேளைக்குப் பின் மேடையில் மாற்றம். வெள்ளைவேட்டியும், ஜிப்பாவும் அணிந்து சம்மணமிட்டு அமர்ந்து வயலினைக் கர்நாடக இசைப் பாணியில் பிடித்தது கண்கொள்ளாக் காட்சி. மிருதங்கக் கலைஞர் திரு. கௌரி சந்திரசேகர் பக்கவாத்தியம் வாசித்தார். "வாதாபி கணபதிம்" என ஆரம்பித்தது கச்சேரி. அடுத்து மூன்று தியாகராஜ கீர்த்தனைகள் ராஜநடை போட்டன. பாபனாசம் சிவனின் ஹம்சாநந்தி ராக "ஸ்ரீனிவாச திருவேங்கடமுடையான்" என்ற கீர்த்தனை, "ஜெகன்னாத சங்க..." என்று உச்ச ஸ்தாயியில் தொடங்கி, "திருவடிக்கு அபயம் அபயம் அய்யா" என்று முடித்தவிதம் கேட்டோரைத் திருவேங்கட மலைக்கே அழைத்துச் சென்றது. ராகமாலிகையில் ராஜாஜியின் "குறையொன்றும் இல்லை" பாடலை வாசித்த விதம் செவிக்கு அமிழ்து.
திருமதி. பூங்கோதை, திரு. கோவிந்தராஜ் தம்பதிகளின் புதல்வரான ருத்ரா, நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தின் நாஷுவா மேனிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறார். கர்நாடக இசை குரு திருமதி. வித்யா ராமனும் அதைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து இந்த நிகழ்ச்சிக்காகவே வந்திருந்த வயலின் வித்வான் திரு. விட்டல் இராமமூர்த்தியும் பின்னர் வாழ்த்துரை வழங்க நிகழ்ச்சி நிறைவெய்தியது.
இரமேஷ் பீளமேடு, ஆண்டோவர், மாசசூஸட்ஸ் |