அரங்கேற்றம்: அபிநயா செந்தில்
ஆகஸ்ட் 30, 2014 அன்று ஸ்ரீக்ருபா நடனக் கம்பெனி மாணவி செல்வி அபிநயா செந்தில் பரதநாட்டிய அரங்கேற்றம் சாரடோகாவிலுள்ள McAfee Performing Arts Center அரங்கில் நடைபெற்றது. ஸ்ரீரஞ்சனி ராகப் புஷ்பாஞ்சலி "கஜவதனா கருணா" என்ற விநாயக துதியோடு தொடங்கியது. அடுத்து பஹுதாரி ராக ஜதிஸ்வரத்துக்கு அலாதியாகவும், சுறுசுறுப்பாகவும் ஆடிய அபிநயா அனைவரையும் கவர்ந்தாள். நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் ஆகிய அம்சங்கள் அடுத்து ஆடிய வர்ணத்தில் துல்லியமாக வெளிப்பட்டன. லால்குடி ஜெயராமனின் சாருகேசி ராகத்தில் அமைந்த "இன்னும் என் மனம் அறியாதார்" என்ற வர்ணத்துக்கு ஆடிய அபிநயா, கிருஷ்ணனைக் கண்முன்னர் கொணர்ந்து நிறுத்தி மெய்சிலிர்க்க வைத்தாள்

இடைவேளைக்குப் பின்னர் ஆடிய மூன்று பதங்களும் அருமை. கோபாலகிருஷ்ண பாரதியாரின் "நந்தி சொல்லு", "நடனம் ஆடினார்" கிருதிகளுக்கு, சிவபெருமான் நந்தியின்மேல் ஆடும் நடனத்தை ஆடி, எல்லாரையும் தில்லைக்கே கொண்டு சென்றாள். அடுத்து "சிங்கார வேலவன் வந்தான்" என்னும் பாபநாசம் சிவன் பாடலுக்கும், "நின்றன்ற மயிலொன்று" என்னும் ஊத்துக்காடு வெங்கடசுப்பய்யரின் காவடிச்சிந்துவுக்கும் மயில்போல் துள்ளிக் குதித்துச் சுழன்றாடி பரவசப்படுத்தினாள். கலைமாமணி TN சேஷகோபாலனின் கடினமான சந்த்ரஹான்ஸ் தில்லானாவை அலாதியாக ஆடி பார்த்தோரை திகைக்கவைத்தாள்.

குரு விஷால் ரமணி மற்றும் சென்ன திரு. வாசுதேவன் கேசவலுவின் நட்டுவாங்கம், திரு. கௌஷிக் சம்பகேசனின் குரலிசை, திரு. ராம்ஷங்கர் பாபுவின் மிருதங்கம், திரு. C.K. விஜயராகவனின் வயலின் ஆகியவை நிகழ்ச்சிக்குப் பக்கபலமாக இருந்தன. ஐந்தாம் வகுப்பு படிக்கும் அபிநயா 10 வயதே நிரம்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவக்குமார்,
எவர்க்ரீன், கலிஃபோர்னியா

© TamilOnline.com