தடைகளையெல்லாம் தாண்டித் தாண்டவமாட முடியும் என்று நிரூபித்துள்ளார் நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஹேமா லதா ராமஸ்வாமி. டௌன் சிண்ட்ரோம் இருந்தாலும் தம் மகளுக்கு எல்லாவித வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும் என்று அரும்பாடுபட்டு வருகின்றனர் இவரது பெற்றோரான திருமதி. காயத்ரியும், திரு. ரமேஷ் ராமஸ்வாமியும்.
ஹேமா 2003ம் வருடத்திலிருந்து திருமதி. சித்ரா வெங்கடேஸ்வரனிடம் பரதம் பயின்று வருகிறார். "ஹேமாவுக்குக் கற்றுக் கொடுப்பது பெரிய சவால்தான், இருந்தாலும் அவளுடைய கள்ளங்கபடமற்ற குழந்தை மனமும், ஆர்வமும் என்னைக் கட்டிப் போட்டுவிட்டன" என்கிறார் குரு சித்ரா.
ஹேமாவின் அரங்கேற்றம் செப்டம்பர் 20, 2014 அன்று கிறிஸ்டியன் பிரதர்ஸ் அகாடமி, ஹெண்டர்ஸன் தியேட்டர், நியூ ஜெர்ஸியில் நடைபெற்றது.
ஹேமாவின் கொள்ளுத் தாத்தாவும் பிரபல கர்நாடக இசைக் கலைஞருமான பேரா. என்.எஸ். ராமச்சந்திரன் அவர்களின் ஆபோகி ராகத்திலமைந்த "மஹாகணபதே" என்ற பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் கங்கைமுத்து நட்டுவனாரின் விஷ்ணு கௌத்துவத்திற்கு அழகாக அபிநயம் பிடித்தார் ஹேமா. அதைத் தொடர்ந்த அலாரிப்பும், சப்தமும் அனைவரையும் கவர்ந்தன. பின்னர் நிகழ்ச்சியின் முக்கிய அம்சமான "வேலனிடம் போய்ச் சொல்லடி" என்ற வாசஸ்பதி ராக வர்ணத்தில் மோகத்தில் வேகும் நாயகியாகவே மாறிவிட்டார் ஹேமா. பின்னர் வந்த மூன்று பதங்களும், சங்கராபரணத் தில்லானாவும் அவருடைய திறமையை வெளிக்கொணர்ந்தன. மங்களத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
நிகழ்ச்சிக்கு திரு. கோமதிநாயகம் (வாய்ப்பாட்டு), திரு. என்.சிகாமணி (வயலின்), திரு. சக்திவேல் முருகானந்தம் (மிருதங்கம்), திரு. சங்கரபிள்ளை சுனில்குமார் (குழல்) மெருகூட்டினர். நிகழ்ச்சியின் முடிவில் விண்ணை எட்டியது கரகோஷம். அரங்கத்தில் கண்கள் பனிக்காதவர் எவருமில்லை.
மிடில்டௌன் சவுத் உயர்நிலைப்பள்ளியில் உயர்கல்விப் பட்டம் பெற்றுள்ளார். தமிழிலும், ஆங்கிலத்திலும் சரளமாக உரையாடும் ஹேமா பால விஹார் வகுப்புக்களில் சென்று கற்றதால் வேத சூக்தங்களையும் சுலோகங்களையும் அநாயாசமாகச் சொல்லவல்லவர். நியூ ஜெர்சி ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களைப் பெற்றுள்ளார். தன்னார்வத் தொண்டு புரியத் தயங்காத ஹேமா மருத்துவப் பதிவுக் கோப்பாளராகவும் (Medical Records Filer) பணியாற்றியுள்ளார்.
லக்ஷ்மி சங்கர், அட்லாண்டா, ஜார்ஜியா |