வளைகுடாப் பகுதியில் ஃபெட்னா தமிழ் விழா 2015
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) வரலாற்றில் முதன்முறையாக 2015ம் ஆண்டு மேற்குக் கரையில், சான் ஃபிராசிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்துடன் இணைந்து ஜூலை மாதம் 2 முதல் 5 வரை தமிழ் விழாவைக் கொண்டாடவுள்ளது. பேரவையின் இந்த 28வது ஆண்டு விழா சான் ஹோசே நகர National City Civic Auditorium அரங்கில் நடக்கும்.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) என்பது வட அமெரிக்காவில் இயங்கிவரும் பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகும். பேரவையின் ஆண்டுவிழா மிகச் சிறப்பாக அதன் உறுப்புச் சங்கங்களின் உதவியோடு நடைபெற்று வருகிறது. நான்கு நாட்கள் நடக்கும் இந்த விழாவில் தமிழகத்திலிருந்து இயல், இசை, நாடகம், திரைக் கலைஞர்களும், சமூகத் தொண்டர்களும் கலந்து கொள்வார்கள். இரண்டு நாட்கள் பல்வேறு அரங்குகளில் பலவித நிகழ்ச்சிகள் நடைபெறும். அமெரிக்கத் தமிழர்கள் வழங்கும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். இவற்றுடன், தொழில்முனைய விரும்பும் தமிழர்களுக்கு, இங்கு பல்வேறு தொழில்துறைகளில் சாதனை புரிந்த தமிழர்கள் நடத்தும் பயிற்சிப் பட்டறையும், தொழில்முனைவோர் சந்திப்பும் நடைபெறும்.

இந்தத் தமிழ்க் கடலில் திளைக்க இப்போதே 2015, ஜூலை 2-5 ம் தேதிகளை ஒதுக்கி வைத்துவிடுங்கள். அமெரிக்காவின் பிற மாநிலங்கள் அல்லது அயல்நாடுகளில் வாழ்பவர்கள் தமிழ் விழாவைத் துய்ப்பதோடு, எழில்மிகு கலிஃபோர்னியாவையும் கண்டுகளிக்கத் திட்டமிடத் தொடங்குங்கள். விழாவில் தன்னார்வத் தொண்டராகப் பங்கேற்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. நீங்கள் விரும்பும் எந்தப் பணியையும் செய்து தமிழ் மன்றத்துக்கு தொண்டாற்ற வாருங்கள்.

மேலும் விவரங்களுக்கு:
தில்லை க. குமரன், ஒருங்கிணைப்பாளர், தமிழ் விழா 2015
மின்னஞ்சல் - coordinator@fetna.org
தொலைபேசி - 408-857-0181
வலைமனைகள் - www.fetna.org / www.fetna2015.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com