வேர்களை நோக்கி: பிரியங்கா ஆச்சார்யா
அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்து, படித்து, பட்டம் பெற்ற, இரண்டாம் தலைமுறை அமெரிக்க இந்தியர் பிரியங்கா. நியூ யார்க்கில் வழக்கறிஞர் பட்டம் பெற படிக்க விரும்பிய பிரியங்கா, அதற்குமுன் சிறிது காலம் சமூக சேவை செய்ய விரும்பினார். Association for Nontraditional Employment for Women (ANEW) என்ற அமைப்பின் வழியாக நலிவுற்ற பெண்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தரவெனச் சென்னை சென்ற இவரது வாழ்க்கையைச் சென்னை மாற்றியது!

அது சென்னைக்கு முதன்முறை என்பதால் அங்கே நண்பர்கள் யாரும் இருக்கவில்லை. அங்கிருந்த மூத்த சகோதரி சிலரை அறிமுகப்படுத்தினார். அவர்கள் வழியே பிரியங்காவின் நண்பரானார் சேத்தன் ஆச்சார்யா. நண்பர், வாழ்க்கைக் துணைவர் ஆனார். அதுமட்டுமல்ல, பிரியங்கா சென்னையிலேயே தங்கிவிட நிச்சயித்தார். வழக்கத்துக்கு சற்றே மாறுபட்ட இந்த முடிவை எடுத்த, ஃப்ளோரிடாவில் தாய்விட்டுக்கு வந்திருந்த, பிரியங்காவிடம் பேசினோம்.

Click Here Enlarge"என் பெற்றோர்களே நாம் நிரந்தரமாக இந்தியாவிற்குப் போகப்போகிறோம் என்று கூறியிருந்தால், வழக்கமான இளவயதினர்போல நானும் அழுது அமர்க்களம் செய்திருப்பேன். அவர்கள் எடுத்த முடிவை ஒருமனதோடு எதிர்த்திருப்பேன். அவர்கள்மீது எனக்குச் சீற்றமும் ஆத்திரமும் வந்திருக்கும்" என்று மனம் திறந்து ஒப்புக்கொள்கிறார் பிரியங்கா. அவர் சேவை செய்ய முதலில் போக எண்ணியது பொலிவியாவுக்குத்தான். முன்பின் தெரியாத நாட்டில் பாதுகாப்பு எப்படி இருக்குமோ என்று அஞ்சிய பெற்றோர்தாம் அவரைச் சென்னைக்குப் போகலாமே என்று கூறினர். அதை ஏற்றபோது சென்னை தனது நிரந்தர வசிப்பிடமாகும் என்று பிரியங்கா எண்ணியிருக்க வாய்ப்பில்லை.

சென்னை லயோலா கல்லூரியிலும், நியூ யார்க்கின் Rochester Institute of Technology யிலும் படித்தவர் சேத்தன். சில வருடங்கள் நியூயார்க்கில் பணி புரிந்ததுண்டு. "சேத்தனுடன் நட்பு ஐந்து வாரங்களுக்குள் நிச்சயதார்த்தம்வரை வளர்ந்துவிட்டது" என்கிறார் பிரியங்கா. அவரது தந்தை டாக்டர். பழநி வேணுகோபால் ஃப்ளோரிடாவின் டேட் சிடியில் எமெர்ஜென்சி பிரிவில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றுகிறார். தாயார் பரிமளா நாதன் சவுத் ஃப்ளோரிடா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியர்.

சில ஆண்டுகளுக்குப் பின்னும் "சென்னையில் எனக்கு மொழி இன்றும் ஒரு பிரச்சினைதான். இருந்தாலும் முன்னைவிட இப்போதெல்லாம் சரளமாகத் தமிழ் பேசுகிறேன்" என்கிறார் பிரியங்கா. ஆனாலும் "சென்னையில் எனக்கு மிகவும் பிடித்தது, நெருக்கமான உறவுமுறையை வளர்த்துக்கொள்ள உதவும் சூழ்நிலை இருப்பதுதான். சென்னைவாசிகள் மிகுந்த அக்கறை உள்ளவர்கள், உதவும் குணமுள்ளவர்கள்" என்னும்போது அவர் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. சென்னையை யாராவது குறை சொன்னாலும் அவருக்குப் பிடிக்காதாம்!

பிரியங்காவைப் போல இரண்டாம் தலைமுறை இந்திய அமெரிக்க இளையோர் இந்தியாவுக்குப் போக அஞ்சுகிறார்களே என்றால், "என் பெற்றோர்களின் நண்பர்கள் பலர் தமது குழந்தைகளிடம் "பிரியங்காவால் செய்ய முடிந்ததென்றால், உங்களாலும் முடியும்" என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அவர்கள் என்னை முன்னோடியாகப் பார்க்கிறார்கள். இந்தியாவில் வணிக வாய்ப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. வீட்டுவேலையில் உதவப் பணியாளர்கள் கிடைக்கிறார்கள். அதனால் நீங்கள் குடும்பத்துடன் அதிகநேரம் செலவிட முடியும்" என்ற என் கருத்தை அவர்களுக்கு வலுவாக எடுத்துக் கூறுவேன்" என்கிறார் பிரியங்கா.

இது ஒரு துளியா இல்லை அலையா என்றெல்லாம் ஊகிக்க விரும்பாத நாங்கள், இளைய தலைமுறை தேவைக்கேற்பத் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளத் தயங்காது என்ற நம்பிக்கையோடு அவரை வாழ்த்திப் புறப்பட்டோம்.

நளினி முள்ளூர், கோம்ஸ் கணபதி

© TamilOnline.com