காய்கறி ஸ்ட்யூ - (Vegetable Stew)
இதை நுண்ணலை அவியனில் (Microwave Oven) செய்யலாம்.

தேவையான பொருட்கள்

வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1 கிண்ணம்
காரட், உருளைகிழங்கு, பீன்ஸ் (பொடியாக நறுக்கியது) - 2 கிண்ணம்
பட்டாணி - 1/8 கிண்ணம்
பச்சை மிளகாய் (இரண்டாக கீறியது) - 7
லவங்கப்பட்டை (சிறியது) - 1 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பூண்டு (நறுக்கியது) - 1/2 தேக்கரண்டி
இஞ்சி (மெல்லிய, நீளமான) துண்டங்கள் - 10
தேங்காய்ப் பால் (தயார்நிலை) - 2 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி
வெள்ளை மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்துமல்லித் தழை - சிறிதளவு

செய்முறை

நுண்ணலையில் வைக்கக்கூடிய ஒரு பெரிய பாத்திரத்தில் வெண்ணெய், எண்ணெய் விட்டு இத்துடன் பச்சை மிளகாய், லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து மைக்ரோவேவை உயர் திறனில் (High power) 5 நிமிடங்கள் வைக்கவும்.

வெங்காயம் வதங்கிப் பளபள என்று ஆனதும் மற்ற எல்லாப் பொருட்களையும் போட்டுக் கொஞ்சம் தண்ணீர் விட்டு மறுபடியும் உயர் திறனில் 10 நிமிடங்கள் வைக்கவும். காய்கறி நன்றாக வெந்து விடும். வேகவில்லை யெனில் இன்னும் சிறிது நேரம் வேக விடவும். அதிகத் திறன் உள்ள மைக்ரோ வேவில் சீக்கிரம் வெந்துவிடும்.

பின்னர் அதில் (இந்தியக் கடைகளில் தயார்நிலையில் கிடைக்கும்) தேங்காய்ப் பாலையும் வெள்ளை மிளகுப் பொடியையும் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும். இதை மூடி அவியனில் (ஓட்டாமல்) 10 நிமிடங்கள் வைத்துப் பின்னர் நறுக்கிய கொத்துமல்லியைத் தூவிப் பரிமாறவும்.

பின்குறிப்பு: மைக்ரோவேவில் பொருட்களை வேக விடும் போது அடிக்கடி திறந்து மரக் கரண்டியால் பொருட்களை மேல் கீழாகக் கலந்து விடுதல் அவசியம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com