யு.ஆர்.அனந்தமூர்த்தி
கன்னடத்தின் சிறந்த எழுத்தாளரும், ஞானபீடம் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவருமான யு.ஆர். அனந்தமூர்த்தி என்னும் உடுப்பி ராஜகோபாலசார்ய அனந்த்தமூர்த்தி (82) பெங்களூரில் காலமானார். ஷிமோகா மாவட்டத்தின் தீர்த்தஹள்ளியில் டிசம்பர் 1, 1932 அன்று பிறந்த இவர், இளவயதிலேயே எழுத்தார்வம் மிகுந்திருந்தார். 1965ல் இவர் எழுதிய 'சம்ஸ்காரா' நாவல், இவருக்கு இலக்கிய உலகின் கவனத்தைப் பெற்றுத் தந்தது. அது பின்னர் திரைப்படமாகி, திரையில் நவீனத்துவப் போக்கிற்கு வழிவகுத்தது. ஏ.கே. ராமானுஜன் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். அனந்தமூர்த்தியின் 'பாரதிபுரா', 'அவஸ்தெ' 'கட ஸ்ராத்தா', 'பாவா' போன்ற படைப்புகள் அவருக்கு புகழ்தேடித் தந்தன. சிறந்த சிறுகதைகளயும் சர்ச்சைக்குரிய கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். பேராசிரியராகவும், மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், சாகித்ய அகாடமி மற்றும் நேஷனல் புக் டிரஸ்டின் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 1994ம் ஆண்டில் இவருக்கு இந்தியாவின் உயர்ந்த இலக்கிய விருதான 'ஞானபீடம்' வழங்கப்பெற்றது. 1998ல் 'பத்மபூஷண்' வழங்கப்பட்டது. சிறுநீரகத் தொற்றுக்குச் சிகிச்சை பெற்றுவந்த அனந்தமூர்த்தி ஆகஸ்ட் 2, 2014 அன்று காலமானார்.



© TamilOnline.com