மன்னிக்க வேண்டுகிறேன்
"ராகவா, நான் பேசுவது காதில் விழறதா இல்லையா? காயத்ரி மறுபடியும் வந்தாடா" வேகமாக கம்ப்யூட்டரில் டைப் அடித்துக் கொண்டிருந்த விரல்கள் பட்டென்று நின்றது. ஒரு நீண்ட பெருமூச்சுடன் கண்களை மூடிக்கொண்டு ஆயாசமாக சாய்ந்தான் ராகவன். சில விநாடிகளுக்குப் பிறகே கண்களைத் திறந்தான்.

"இன்று என்ன சொன்னாள்?"

எதுவுமே சொல்ல மாட்டான் என்று நினைத்து காபியை டேபிள்மேலே வைத்துவிட்டுப் போன ஜானகி திரும்பினாள். "வழக்கம் போலவே மன்னிப்புக் கேட்டாள். ஏண்டா உன்னையும் வருத்திக்கொண்டு அவளையும் நோகடிக்கிறாய். அவள் என்ன வார்த்தை சொன்னாள் என்று நினைவு இருக்கிறது. ஆனால் எந்த ஒரு தவறுக்கும் மன்னிப்பு உண்டுடா. அவள் செய்த தவறுக்கு அவள் அனுபவித்துவிட்டாள். இதற்குமேல் அவளையும் வருத்தி உன்னையும் வருத்திக் கொள்வதில் எந்தப் பயனுமில்லை. உன்னிடம் பலமுறை இதைச் சொல்லிவிட்டேன். இதற்குமேல் பேச எனக்குத் தெம்பில்லை" ஜானகி புடவைத் தலைப்பால் கண்ணைத் துடைத்துக்கொண்டே சென்றாள். அதற்குமேல் ராகவனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. ஆயாசமாக, அப்படியே சாய்ந்து உட்கார்ந்து, விட்டத்தைப் பார்த்தான். மின்விசிறி இப்போது வேகமாக ஓடுவதுபோல் தோன்றியது.

அது காதல் திருமணம். ராகவனின் தந்தை இளவயதில் இறந்து விட்டதால், தாயாரும் அவர்களுடன்தான் வசித்து வந்தாள். ஜானகியும் காயத்ரியும் தாயும் மகளும்போல் பழகினார்கள். ராகவனின் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. வருடங்கள் ஓடியதே தெரியவில்லை. இதோ, அவர்களின் ஐந்தாவது திருமண நாள் இன்னும் இரண்டு வாரங்களில் வருகிறது. வருடாவருடம் ராகவன் காயத்ரிக்கு வித்தியாசமாக ஏதாவது பரிசு கொடுப்பான். கடைசிவரை அதை ரகசியமாக வைத்திருப்பான். இந்த முறையும் சொல்லாததால் காயத்ரியின் ஆவல் அதிகமானது. ஒரு வாரமாக அவனை விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தாள். ராகவனும் வழக்கம்போல் சிரித்துக்கொண்டே பதில் சொல்லாமல் மழுப்பினான்.

அன்றும் அப்படித்தான். அன்று முழுக்க பல பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டி இருந்ததால் ராகவன் ஆபிசிலிருந்து லேட்டாகத்தான் வந்தான். வரும்பொழுதே மிகவும் சோர்வாக வந்தான். "ஏன் லேட்டு? எனக்காக ஏதாவது வாங்கி ஒளித்துவிட்டு வருகிறீர்களா?" காயத்ரி ஆவலாகக் கேட்டாள். என்றுமே நிதானம் தவறாத ராகவனின் நாக்கில் அன்று சனி. தீபாவளிச் சரம்போல் வெடித்தான். அந்தச் சரம்போலவே அவர்களின் வாழ்க்கையும் சிதற ஆரம்பித்தது. அடுத்த இரண்டு வாரங்களும் நரகம்தான். இதுவரைக்கும் எதுவெல்லாம் தூசாகத் தோன்றியதோ அதெல்லாம் இப்போது மலையளவு பிரச்சனையாகத் தோன்றியது. தாயாராக நினைக்கப்பட்ட ஜானகிகூட இப்போது சுமையான மாமியாராகத் தெரிந்தாள். பிரச்சனையைத் தீர்க்க முயன்று சிலர் கலங்கிய குட்டையை மேலும் குழப்பினார்கள்.

அவர்களின் திருமண ஆண்டுநிறைவின் முந்தைய நாள் இரவு. ராகவன் ஒரு அழகிய நகைப்பெட்டியை அவளிடம் புன்னகையுடன் நீட்டினான். பிறகு அவளை அணைக்க முயன்றான். "இதற்கு மட்டும் என்னிடம் ஏன் வருகிறீர்கள்" என்று அவள் ஆரம்பித்தாள். அதோடு நிற்காமல் நினைத்தாலும் நடுங்கக்கூடிய, சொல்லக் கூடாத வார்த்தைகளைக் கொட்டினாள். பொறுமை இழந்தான் ராகவன். கையை ஓங்கினான். அதிர்ச்சியில் உறைந்த காயத்ரியிடம், "நீ சொன்ன வார்த்தைக்கு மன்னிப்புக் கேட்காதவரை நான் உன் முகத்தில் முழிக்கமாட்டேன்" ஜானகியின் கெஞ்சலையும் மீறி நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறினான்.

அவன் திரும்பும்போது விடிந்திருந்தது. ஜானகி ஓரமாக உட்கார்ந்திருந்தாள். அவனைக் கண்டவுடன் அழ ஆரம்பித்தாள். இரவென்றும் பாராமல் காயத்ரியின் தந்தை வந்து அவளைக் கூட்டிச் சென்றுவிட்டார் என்றதைக் கேட்டவுடன் ராகவன் இடிந்து போய்விட்டான். "நீ போய்ப் பேசுடா" என்றவளிடம், "அம்மா, நான் சொன்னது சொன்னதுதான். அவள் சொன்ன வார்த்தைக்கு வருந்தாதவரை, நான் அவளை மன்னிக்கமாட்டேன்."

நாட்கள் வாரங்கள் ஆயின. வாரங்கள் மாதங்கள் ஆயின. நட்புடன் இருந்த காயத்ரியின் சுற்றத்தார், நண்பர்கள் பிரச்னையைத் தீர்க்க முயன்று மேலும் சிக்கலாக்கினார்கள். ராகவன் எல்லோருக்கும் விரோதி ஆனான்.

ஆறாவது திருமண நாளும் வந்தது. "ராகவா, நாளைக்கு ஆறாவது திருமண நாள். நாளையாவது அவர்களுடன் பேசுடா" என்றவளின் குரலைக் கேட்காமல் டிவியில் சேனல்களை மாற்றிக்கொண்டே வந்தான். ஒரு சேனலில் Fantastic Four ஆங்கிலப்படம் க்ளைமாக்ஸ் ஓடிக் கொண்டிருந்தது. "இது நாங்க பார்த்த கடைசிப் படம்" என்றான். "தெரியும். கூட வேற சேனலில் ஓடியது" சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் ஜானகி. இறந்த நாயகிக்கு உயிர் கொடுத்த வேற்றுலகவாசி, "Tell her she's right, we do have a choice" என்று சொல்லிவிட்டு அவளால் மனம்மாறும் காட்சியைக் கண்ட ராகவன் உறைந்தான். நீண்ட யோசனைக்குப் பிறகு, "Yes, I too have a choice" என்று சொல்லிக்கொண்டே ஃபோனை நோக்கிச் செல்லும்போது, ஃபோன் ஒலித்தது. டிஸ்ப்ளே ‘காயத்ரி’ என்றது.

"காப்பியைக் குடிக்கவே இல்லையா?" ஜானகியின் குரலைக் கேட்டதும் ராகவன் நிகழ்காலத்துக்குத் திரும்பினான். அவள் சென்றபின் ஒரு முடிவுடன் பேப்பர் எடுத்து எழுத ஆரம்பித்தான். "காயத்ரி... உன்னை நான் மன்னிப்பதா? அப்படிச் செய்தால் நான் தவறே செய்யவில்லை என்று ஆகிவிடுமே! நீ சொன்ன வார்த்தை கொடுமையான வார்த்தைதான். எந்தப் படத்தைப் பார்த்து மனம்மாறி நான் உனக்கு ஃபோன் பண்ண நினைத்தேனோ அதே படத்தைப் பார்த்து நீயும் மனம்மாறியது நமக்குள் இருந்த ஒற்றுமையைத்தானே காட்டுகிறது. நானும் வீராப்பா இருந்தது தவறுதானே? அதனால்தானே நான் உன்னை இழந்தேன் காயத்ரி!..." எழுதிக் கொண்டிருந்த அவனது கண்களில் இருந்து வழிந்த நீர் சில எழுத்துக்களை அழித்தது. ராகவன் லெட்டரை மடித்து பூஜையறைக்குச் சென்றான். அங்கிருந்த காயத்ரியின் போட்டோ அருகில் வைத்தான். அவள் போட்டோ மேலிருந்த பழைய மாலையை எடுத்துவிட்டுப் புதிய மாலையைப் போட்டான்.

"போதும் காயத்ரி... இதற்கு மேலும் உன்னை வருத்திக் கொள்ளாதே! உன்னை என்னிடம் இருந்து விபத்து மூலம் பிரித்த லாரி டிரைவர்கூட இப்போது சிறைக்குப் பின்னால். உன்னுடைய தவறுக்கு நீ என்னை ஒருவருடம் பிரிந்து அனுபவித்துவிட்டாய். என்னுடைய தவறுக்குக் காலமெல்லாம் உன்னைப் பிரிந்து அனுபவிக்கப் போகிறேனே..."

ராகவனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது.

ரத்னா சுப்ரமணியன்,
ஹாலந்து

© TamilOnline.com