வாலில்லாத நரி
பசித்திருந்த சிங்கத்தின் கண்களில் கலைமான் கூட்டம் ஒன்று தென்பட்டது. அவற்றின்மீது பாய்ந்தது சிங்கம். மான்கூட்டம் சிதறி ஓடியது. சிங்கம் விடாமல் துரத்தி ஒரு மானைப் பிடித்தது. சிங்கத்தின் தாக்குதலில் மான் உயிரிழந்தது. ஆனால், மானைப் பிடிக்கும் முயற்சியில் ஒரு பாறைமீது மோதி சிங்கத்தின் சில பற்கள் உடைந்ததோடு, காலிலும் பலத்த அடிபட்டிருந்தது. அதனால் மானை உண்ண முடிவில்லை.

அந்த வழியாகக் குள்ள நரி ஒன்று வந்தது. சிங்கத்தின் காயங்களைப் பார்த்து அது நடந்ததை ஊகித்தது. மிகவும் பணிவாகச் சிங்கத்திடம், "மகாராஜா, மிகச் சோர்வோடு காணப்படுகிறீர்களே, என்ன விஷயம்?" என்றது. சிங்கம் தன் நிலைமையை விளக்கியது.

"கவலைப்படாதீர்கள் மன்னா! இதற்கு நல்லதொரு மருந்து இருக்கிறது. நான் உதவுகிறேன்."

"சரி. ஏதாவது செய்."

"மன்னா... மான்தோல் காயத்துக்கு மிகவும் நல்ல மருந்து. நீங்கள் சற்றுக் காத்திருங்கள். நான் இந்த மான்தோலை உரித்துக் காயங்களில் வைத்துக் கட்டிவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு, நரி, மானின் தோலை உரிக்க ஆரம்பித்தது.

தோலை உரித்துச் சிங்கத்தின் கால்களைக் கட்டிய நரி தந்திரமாக அதன் மற்றொரு முனையைச் சிங்கம் அறியாதபடி ஒரு பெரிய மரத்தோடு சேர்த்து இறுகக் கட்டி முடிச்சுப் போட்டது. "மன்னா.. அப்படியே ஆடாமல் அசையாமல் சிறிது நேரம் இருங்கள். காயங்கள் சரியாகிவிடும்" என்று சொல்லிவிட்டுச் சென்றது. அதை நம்பிய சிங்கம் அப்படியே அசையாமல் இருந்தது.

சிறிதுநேரத்தில் தன் நண்பர்களுடன் வந்த நரி, மானை இழுத்துச் செல்ல ஆரம்பித்தது. சிங்கம் சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தது. நரி மானை இழுத்துச் செல்வதைக் கண்டதும் ஆத்திரத்துடன், "ஓ.. என்ன தைரியம். என்னையே ஏமாற்ற நினைக்கிறாயா?" என்று பாய முற்பட்டது. ஆனால் கால்கள் மரத்தில் கட்டப்பட்டிருந்ததால் வெகுதூரம் பாய முடியவில்லை. நரியின் வால்மட்டுமே அதன் வாயில் அகப்பட்டது. அதை ஆத்திரத்துடன் கடிக்க, வால் துண்டானது. வாலறுந்த நரி, அங்கிருந்து ஓடிப்போனது.

பற்களால் கடித்துக் கட்டுக்களை விடுவித்துக் கொண்ட சிங்கத்துக்கு ஒரே கோபம். எல்லா நரிகளும் மறுநாள் காலையில் தன்னை வந்து பார்க்க வேண்டும் என்று ஆணையிட்டது. எல்லா நரிகளும் வரும்போது, வாலறுபட்ட நரியை எளிதில் கண்டுபிடிக்கலாம் என்று நினைத்தது சிங்கம்.

தன்னைக் கண்டுபிடித்துத் தண்டிக்கச் சிங்கம் செய்யும் தந்திரம் இது என்பதை ஊகித்த வாலறுந்த நரி, "சிங்கராஜாவுக்கு உடல் நலமில்லை. அதற்கு வாலுள்ள நரிதான் சிறந்த மருந்தாம். தினம் ஒரு நரியை வாலோடு உண்டால்தான் அது சரியாகுமாம். ஆகவேதான் சிங்கம் அழைக்கிறது" என்று ஒரு வதந்தியைப் பரப்பிவிட்டது. சிங்கத்திடமிருந்து தப்பிக்கத்தான் தனது வாலை அறுத்துக் கொண்டதாகவும் சொன்னது. அதை நம்பிய மற்ற நரிகளும் அஞ்சி, வால்களை அறுத்துக்கொண்டன.

மறுநாள் வந்த எந்த நரிக்கும் வால் இல்லாததைக் கண்டு சிங்கம் திகைத்தது. ஒருவரது இயலாமையை அற்பர்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, நரிகளை விடுவித்தது.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com