முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 2)
பின்புலம்: சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு உதவுகின்றனர். கிரண் வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்கு வர்த்தகமானாலும் சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்ஃபோர்ட் மருத்துவமனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிபவள். மூவரும் துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

இதுவரை: ஷாலினி தம்பி கிரண் வீட்டுக்கு அம்மா அனுப்பிய உணவைக் கொடுக்க வந்தாள். கிரண் ஒரு முப்பரிமாண பிரிண்ட்டரை வைத்துத் தயாரித்த போர்ஷா கார் மாடலின் நுணுக்கமான அம்சங்களைப் பார்த்து அது பிரிண்ட்டரில் தயாரானது என்று நம்பமறுக்கவே, கிரண் புதிதாகப் பதித்துக் காட்டுகிறேன் என்று ஆரம்பித்தான். அப்போது....

*****


கிரணின் சமையலறையில் ஷாலினி கிரணின் முப்பரிமாணப் பிரிண்ட்டர் போர்ஷா மாடலை உண்மையாகவே உருவாக்குகிறதா என்று பார்த்து விடுகிறேன் என்ற சவாலோடு அமர்ந்து, காஃபி அருந்தியபடி காத்திருந்தாள். அந்தச் சவாலை சமாளிப்பதாகச் சூளுரைத்திருந்த கிரண், ஷாலினி கொணர்ந்திருந்த அம்மா தயாரித்த இடியாப்பத்தை ஒரு கை பார்த்தபடி, "பட்டனைத் தட்டி விட்டா ரெண்டு தட்டுல இட்டிலியும்" என்ற பழந்தமிழ் திரைப் பாடலை முப்பரிமாணப் பிரிண்ட்டர் நிஜமாக்கிவிடும் என்று அறைகூவவே, அதைக் கேட்ட ஷாலினி, ஆனாலும் சுவை அம்மா செய்வது போலிருக்காது என்று மறுத்துக் கொண்டிருக்கையில் பின்னறையிலிருந்து 'பீப்' என ஒரு சத்தம் வரவும் கிரண், "ஓ! ஷால் போர்ஷா கார் மாடல் முழுசா பதிஞ்சிருக்கும், காட்டறேன் வா!" என்று ஷாலினியை இழுத்துக்கொண்டு பின்னறைக்கு ஓடினான்.

ஆனால், அறைக்குள் நுழைந்த வேகத்திலேயே மீண்டும் வெளியில் ஓடிவர வேண்டியதாயிற்று! அங்கே லேசான புகையுடன், ப்ளாஸ்டிக் எரிந்த நாற்றம் பலமாக வரவே, இருவரும் கண்ணில் நீர்வர இரும ஆரம்பித்தனர். வெளியில் வந்து கிரண் மன்னிப்புக் கோரினான்! "ஸாரி ஷால்! மறந்து போயிட்டேன். காற்றை வெளியேற்ற எக்ஸாஸ்ட் விசிறியைப் போட மறந்துட்டேன். ஒரு நிமிஷம் இரு, வாசனை, புகையெல்லாம் போறமாதிரி வேகமா போட்டுட்டு வரேன்", என்று கூறிவிட்டு மீண்டும் அறைக்குள் சென்றான்.

இரு நிமிடங்களுக்குப் பிறகு கிரண் வெளியே வந்து கட்டைவிரலை உயர்த்திக் காட்டி "ஆல் க்ளியர்! வா, உள்ளே" என்று ஷாலினியை அறைக்குள் அழைத்துச் சென்றான். வாசனை இன்னும் இருந்தாலும், புகை வெளியேறியிருந்ததால் ஷாலினி சகித்துக்கொண்டாள். முப்பரிமாணப் பதிப்பானில் (பிரிண்ட்டர்) கீழே இருந்த தட்டை வெளியில் இழுத்து அதிலிருந்த கார் மாடலை எடுத்துக் காட்டினான்.

முதலில் பார்த்த போர்ஷா மாடலைப் போலவே இருந்தாலும் ஓட்டையிருக்க வேண்டிய சில இடங்களில் கருப்பாக எதோ நிரம்பியிருந்ததைக் கிரணிடம் காட்டி, "ரொம்ப நல்லாத்தான் இருக்கு, ஆனா, இதெல்லாம் என்ன கருப்பா?" என்று கேட்டாள் ஷாலினி.

கிரண் சிரித்துக்கொண்டு, "அதுதான் பிரிண்ட்டர் சூட்சுமம்! சில இடங்களில் ஓட்டையா பதிக்க முடியாட்டா, அங்க இந்தமாதிரி கருப்பா நிரப்பிடும். ஆனா இப்ப பாரு!" என்று கூறிவிட்டு ஸ்க்ரூடிரைவர் ஒன்றை எடுத்து, பல இடங்களில் தட்டி, கருப்புப் பகுதிகளை ஒவ்வொன்றாக அசைத்து வெளியில் எடுத்துப் போட்டான். பிறகு கார் மாடலை ஷாலினியிடம் நீட்டினான். அத்தோடு, முதலில் காட்டிய பழைய மாடலையும் கொடுத்து, "ஊம், ஷால் நம்ப மாட்டேன்னியே, ரெண்டையும் நல்லா ஒப்பிட்டுப் பாத்துக்கோ, அப்புறம் சொல்லு!" என்று அறைகூவினான்.

ஷாலினி இரண்டு மாடல்களையும் ஓரிரு நிமிடங்கள் கூர்ந்து ஒப்பிட்டுவிட்டு, பிரமிப்புடன் பாராட்டினாள். "கிரண் நிஜமாவே இது பிரமாதந்தான்! நேரா பாத்தப்புறம் கூட நம்பக் கஷ்டமா இருக்கு. ஆனா நிஜமாவே சரியா கச்சிதமா அதே மாதிரி பதிஞ்சிருக்கு. ஆனா. சக்கரம் எதுவும் இல்லயே. அதெல்லாம் எங்கே?"

"எல்லாம் ஒரே மூச்சில பிரிண்ட் ஆகாது. சக்கரமெல்லாம் தனியா பிரிண்ட் பண்ணி மாட்டணும், அவ்வளவுதான். வேணும்னா பிரிண்ட் பண்ணி காட்டட்டுமா?"

ஷாலினி தலையசைத்து மறுக்க வாய் திறக்குமுன் அவள் செல்பேசி பிங் எனச் சத்தமிடவும், அதில் புதிதாக வந்திருந்த மின்னஞ்சலைத் திறந்து பார்த்து விட்டு கூவினாள், "ஹே கிரண், நீ நிச்சயமா இதை நம்பவே போறதில்லை! இந்த புது ஈமெயில் எதைப்பத்தித் தெரியுமா?"

கிரண் தோள் குலுக்கி, உதட்டைப் பிதுக்கினான். "எனக்கெப்படித் தெரியும்? என்ன நீ பில்லியன் டாலர் ஜெயிச்சேன்னு நைஜீரியாலேந்து வந்திருக்கா? கங்க்ராட்ஸ்!"

ஷாலினி சிரித்தாள். "நீ பாக்கற வெப்ஸைட்கள்னால உனக்குத்தான் அப்படி நிறைய வரும்! இது என்ன ஆச்சர்யம்னா, இந்த ஈமெயில் நாம இப்ப பேசிக்கிட்டிருக்கற முப்பரிமாணப் பதிப்புத்துறை சம்பந்தப்பட்டதேதான்!"

கிரண் வாயைப் பிளந்தான். "என்ன, என் காதுலயே பூவா? நாம பேசறதுபத்தி யாருக்குத் தெரிஞ்சு அனுப்பியிருப்பாங்க?"

ஷாலினி தலையசைத்து மறுத்தாள், "சே சே! அது அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல கிரண். தற்செயலா, என்கூட வேலை செய்யற ஆராய்ச்சியாளர் ஒருத்தி அவளோட நண்பர் நிறுவனம் இந்த முப்பரிமாணத் துறையில உயிரியல்ரீதியான மிகப் புரட்சிகரமான ஒரு புதுமையைக் கண்டுபிடிச்சு விற்பனை ரீதியா கொண்டுவர இருந்ததாவும், எதோ பிரச்சனை ஆகியிருக்கறதாவும், நாம அந்த நேனோ நுட்பத்துல செஞ்சா மாதிரி உதவி செய்ய முடியுமான்னும் கேட்டிருக்காங்க. அவ்வளவுதான்."

கிரண் உற்சாகத்தோடு துள்ளிக் குதித்தான். "வாவ், வாவ்! பிரமாதம், பிரமாதம். நான் ரொம்ப ஆசையா விளையாடிக்கிட்டிருக்கற அதே துறையில துப்பறியற சான்ஸ். அதுலயும் ஒரு ட்விஸ்ட்? உயிரியல் முப்பரிமாணப் பதிப்பு! ஐ லைக் இட்! என்ன காத்துக்கிட்டிருக்கே? உடனே நாங்க நிச்சயமா உதவிபண்றோம்னு பதில் அனுப்பிட்டு உடனே கிளம்பி சூர்யாவைக் கலெக்ட் பண்ணிகிட்டு அங்க ஓட வேண்டியதுதானே. வா, வா, போலாம்" என்று அவசரப் படுத்தினான்.

ஷாலினி கையமர்த்தி அவனை அமைதிப்படுத்தினாள். "ஹேய், கிரண்! கொஞ்சம் அடக்கி வாசி மேன்! நாம முதல்ல சூர்யாவைப் பாத்து அவருக்குச் செய்ய நேரம் இருக்கா, விருப்பம் இருக்கான்னு கேக்கணும். அவர் ஓகே சொன்னப்புறந்தான் அதெல்லாம்!"

கிரண் சீண்டினான். "அது சரி, சூர்யா சரின்னு சொன்னப்புறந்தானே உனக்கு எல்லாம்?"

"டேய், சூர்யாவைப்பத்தி மட்டும் சீண்டாதே, சொல்லிட்டேன். அடிச்சுடுவேன்!"

கிரண் பயப்படுவதுபோல் ஒரு கையை உயர்த்தி ஒளிந்துகொள்வது போல் குனிந்து காட்டினான். "அய்யய்யோ, பயமா இருக்குப்பா. சரி சரி, சீண்டலை. நிஜமாவே கெஞ்சி கேக்கறேன். ப்ளீஸ், உடனே, சூர்யா இப்போ ஃப்ரீயான்னு கேளு. அங்க போயி அங்கயே அவரை கன்வின்ஸ் பண்லாம்."

ஷாலினி ஆமோதித்து, சூர்யாவின் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். உடனே டிங் என பதில் வந்தது. ஷாலினி சூர்யாவைக் காணப்போகும் ஆனந்தத்தில், "ஓகே கிரண், உன் கனவை நனவாக்க இப்பவே ஒரு வாய்ப்பு. சூர்யா சும்மாத்தான் இருக்காறாம். நேர்லயே பேசலாம்ங்கிறார். வா போலாம். நான் அங்கேர்ந்தே என் லேபுக்குப் போகணும். அதனால என் கார்லயே வரேன். இப்ப இருக்கற பரபரப்புல எங்கயாவது தாறுமாறா ஓட்டி எங்கயாவது முட்டிக்க போறே. ஜாக்கிரதையா கொஞ்சம் பாத்து நிதானமா ஓட்டு, என்ன? அதுவும் நான் கிளம்பி ஒரு பத்து நிமிஷம் கழிச்சு கிளம்பு. அப்பதான் ரெண்டு பேரும் ஒண்ணா போய்ச் சேருவோம்" என்றாள்.

அவள் சொன்னபடியே, அவள் சூர்யா வீடுபோய்ச் சேர்ந்த அதே கணத்தில் படுவேகத்தில் கிரணும் வந்து, வேகமாகத் தன் போர்ஷா ஸ்போர்ட்ஸ் வேக வாகனத்தைத் திருப்பி, பிரேக் போட்டு, சரக்கென்று சறுக்கலுடன் நிறுத்திவிட்டு அதிலிருந்து குதித்து கதவைப் படாலென வேகமாக மூடிவிட்டு ஓடிப் போய் சூர்யாவின் வாசல் மணியைப் பலமுறை அழுத்தினான். சூர்யா வந்து திறக்கும்வரை பொறுமையின்றி கால்கைகளை உதறிக்கொண்டு நின்றான். ஷாலினியோ நிதானமாக நடந்து வந்தாள். அவள் வந்து சேரவும் சூர்யா கதவைத் திறக்கவும் சரியாக இருந்தது.

கதவைத் திறந்த சூர்யா, நிதானமாக வந்த ஷாலினியையும், பொறுமையின்றி குதித்துக்கொண்டிருந்த கிரணையும் பார்த்து தனக்கே உரிய ஒரு யூக முறுவலுடன், அவர்களை வரவேற்றபடி ஒரு அதிர்வேட்டு வீசினார். "என்ன ஷாலினி, விஷயம் என்னன்னு டெக்ஸ்ட் செய்தில சொல்லலை. ஆனா உங்களைப் பாத்தா, எதோ முப்பரிமாண உயிரியல் பதிப்பு சம்பந்தப்பட்டதா இருக்கணும்னுதான் தோணுது... சரி உள்ள வந்து ஆசுவாசப் படுத்திக்கிட்டு நிதானமா சொல்லுங்க. அதுக்குள்ள கிரண் கொஞ்சம் தணியறானா, இல்ல, துள்ளல் அதிகமாகுதான்னு பாக்கலாம்"

கிரண், ஷாலினி இருவரும் வாய் பிளந்தனர். சூர்யாவின் துப்பறியும் திறனைப் பலமுறை நேரில் கண்டு நன்கு அறிந்ததே என்றாலும், இப்போது தாங்கள் ஒன்றும் தெரிவிக்காமலேயே, வந்த காரணத்தைக் கனகச்சிதமாக சூர்யா கணித்து விட்டதால் இருவரும் அதிர்ந்து போயினர். இருவருக்கும் வார்த்தை சரியாக வெளிவரவில்லை!

"ஆவ்... ஊம்... ஓ...." இது கிரண்!

"என்ன... எப்படி... நான் சொல்லாமலேயே...!" இது ஷாலினி.

இருவரின் தவிப்பைப் பார்த்து சூர்யா வாய்விட்டுச் சிரித்தார். "ஹேய், கிரண், ஷால்! ஸோ, நான் கணிச்சது சரிதான்னு தெரியுது... ஆனா, என்ன இது? உங்களுக்குத்தான் தெரியுமே என் வழிமுறைகள். உங்க ரெண்டு பேரைக் கவனிச்சு அதுல கிடைச்ச தடயங்களை வச்சு மட்டுந்தான் யூகிச்சேன். எப்படிக் கணிச்சிருப்பேன் நீங்களே உங்களை நல்லாப் பாத்து சொல்லுங்களேன்."

கிரண் ஷாலினி இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு மேலும் கீழும் ஆராய்ந்தனர். ஆனாலும் ஒன்றும் புரியாததால் குழப்பத்துடனும், இன்னும் விலகாத வியப்புடனும் தலையசைத்துக் கொண்டனர்.

ஷாலினி கிரணிடம், "எனக்கொண்ணும் விளங்கலை. என்னைவிடக் கிரண்தான் உங்க கேஸ் எல்லாத்துலயும் பக்கத்திலேயே இருந்து கவனிச்சிருக்கான். சில தடவை அவனே கூட உங்க யூகங்களை விளக்கினதைக் கேட்டிருக்கேன். கிரண் உனக்கெதாவது புலப்படுதா சொல்லேன்" என்றாள்.

"எனக்கும் தெரியுலை. மேலும் எனக்கிருக்கற ஆர்வத்துலயும் பரப்பரப்புலயும் என்னால சரியா கவனிக்கவும் முடியல. சூர்யா, என்னை இன்னும் ஊசிமேல வைக்காம, நீங்களே விளக்கம் சொல்லிட்டு, சீக்கிரமா கிளம்புங்க."

அவர்கள் வரக் காரணம் உயிரியல் முப்பரிமாணப் பதிப்புக்குச் சம்பந்தப்பட்டது என்பதை எவ்வாறு தான் கணித்தார் எனச் சூர்யா அளித்த விளக்கம் கிரணுக்கும் ஷாலினிக்கும் வியப்பளித்தது. அந்த விளக்கத்தையும், அதன் பிறகு ஆரம்பித்த முப்பரிமாண மெய்ப்பதிவு முடிச்சின் சிக்கல்களையும் சூர்யா எவ்வாறு அவிழ்த்தார் என்பதை வரும் பகுதிகளில் காண்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com