ஆஹா, எத்தனை வாய்ப்புக்கள்!
அன்புள்ள சிநேகிதியே

வாழ்க்கை எனக்குமட்டும் ஏன் கசப்பாக இருக்கிறது என்று தெரியவில்லை. சிறிய வயதிலிருந்து கஷ்டங்களைத்தான் அதிகம் பார்த்திருக்கிறேன். நான் கல்லூரியில் படிக்க ஆரம்பித்த சில மாதங்களில் அப்பா திடீரென்று ஹார்ட் அட்டாக்கில் போய்விட்டார். பிசினஸ் செய்து கொண்டிருந்ததால் ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை. அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்பதுபோன்ற இக்கட்டான நிலைமை. என்னுடைய அக்காவுக்கு திருமணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதை அப்படியே விட்டு, அவள் வேலைக்குப் போனாள். என் அம்மாவையும் சேர்த்து ஐந்து பேர் குடும்பத்தில். அந்த ஒரு சம்பளத்தில் ஓட்டிக் கொண்டிருந்தோம். சில சமயம் எங்கள் குடும்பத்தை நினைத்தால் பாலசந்தர் படம் பார்ப்பதுபோல இருக்கும். நான் என் படிப்பை முடித்ததும் மேலே படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தது. எனக்குப் பெரிய சயன்டிஸ்ட் ஆக வேண்டும் என்று அப்படி ஒரு ஆசை. அந்தச் சமயத்தில் என் அக்கா வேலையை விடவேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. அதுவேறு தனிக்கதை. அது ஒரு சோகம். வேறு வழியில்லாமல் என் மேல்படிப்பைத் தள்ளிவைத்து, கிடைத்த சாதாரண வேலையை ஏற்றுக்கொண்டேன். தம்பி, தங்கைகளைப் படிக்க வைத்து, அக்காவின் உடம்பையும், மனநிலையையும் தேற்றி மீண்டு வருவதற்குள் என் இளவயதுக் காலம் முடிந்துவிட்டது. நிறையச் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் கம்ப்யூட்டர் கோர்சஸ் படித்து, சயன்டிஸ்ட் ஆகும் ஆசையைக் கைவிட்டுவிட்டு இங்கே வேலை தேடிக்கொண்டு வந்தேன். ஐந்து வருடம் தனியாகக் காலத்தைப் போக்கிவிட்டு, என் கணவரை இங்கே சந்தித்தேன்.

அவரும் என்னைப்போலவே வாழ்க்கையில் அடிபட்டவர். அந்த ஒரு பொருத்தம் எங்களை இணைத்தது. ஒரு பெண் பிறந்தாள். இப்போது 11 வயது ஆகப்போகிறது. எங்கள் இருவருக்குமே வயது 50ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதிகம் சேர்த்துவைக்க முடியவில்லை. ஒரு வீடுகூட வாங்கவில்லை. அவருடைய குடும்பத்திற்கு அவர் பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறார். என் அம்மாவிற்கு வயதாகி நிறைய மெடிகல் காம்ப்ளிகேஷன்ஸ். அக்காவிற்கு மனநிலை ஏறி இறங்கிய நிலையில் இருக்கிறது. தம்பி கல்யாணம் செய்துகொண்டு, மொழிதெரியாத ஊரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவ்வப்போது அம்மா வீட்டுக்குத் தலைகாட்டல். தங்கை காதல் திருமணம். நான் முதலில் எதிர்த்தேன் என்று வீட்டிற்கு வருவதில்லை. நாங்கள் இருவரும் சம்பாதிப்பதை டிராவலில்தான் செலவு செய்து கொண்டிருக்கிறோம். ஒரு வெகேஷன் என்று இல்லை. வயதுகடந்த காலத்தில் பிறந்த என் பெண்ணின் எதிர்காலத்தை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கிறது. 6 மாதத்திற்கு முன்பு என் வேலை போய்விட்டது. இன்னும் கிடைக்கவில்லை. நம்பிக்கை குறைந்து வருகிறது. யாருடனும் பழகப் பிடிக்கவில்லை. உறவுகளின் அர்த்தம் எதுவும் புரியவில்லை. என்னை உற்சாகப்படுத்த ஏதாவது சொல்லுங்கள். "Be Positive" என்கிற மந்திரத்தை மட்டும் ஓதாதீர்கள். Why is life not fair?

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதியே:

எதிர்பார்ப்புகள் இருந்து ஏமாற்றமாக வந்துகொண்டே இருந்ததால் கசப்பு உணர்ச்சி ஏற்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. "Be Positive என்று எழுதாதீர்கள்" என்று சொல்லியிருக்கிறீர்கள். பொதுவாக, நான் அப்படிச் சொல்லுவதில்லை. "தைரியமாக இருங்கள். பொறுமையாக இருங்கள்" என்று நாம் நம்முடைய அன்பை, அனுதாபத்தைக் காட்டச் சொல்லுகிறோம். ஆனால், 'எப்படி' என்று யதார்த்தமாகச் சொல்லத் தெரிவதில்லை. வாழ்க்கையிலிருந்து கசப்பை எப்படிக் குறைத்துக்கொள்வது என்பது விளங்கினால் நம்மால் கொஞ்சம் ரசிக்க முடியும். இருட்டு விலகினால் வெளிச்சம் என்பதுபோல், கசப்பைக் குறைத்தாலே இனிப்பின் சுவை தெரிய ஆரம்பிக்கும். நான் கீழே எழுதியிருப்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

* சயன்டிஸ்ட் ஆக முடியவில்லை. ஆனால், ஃப்ரொபஷனல் ஆக வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
* சிறுவயதில் இருந்த, மறுநாள் சாப்பிடும் வசதிக்கு கவலைப்பட்ட நிலைமை இப்போது இல்லை.
* இளவயதைக் கடந்தாலும் இனிய மணவாழ்க்கை கிடைத்திருக்கிறது.
* இளவயதைக் கடந்தாலும் ஒரு நல்ல குழந்தைக்குத் தாயாக இருக்கிறீர்கள்.
* இந்தியாவுக்கு அடிக்கடிச் சென்று குடும்பத்தினரைப் பாதுகாக்கும் வசதியும், வாய்ப்பும், நேரமும் கிடைத்திருக்கிறது.
* ஒருவருக்கு வேலை போனாலும் இன்னொருவருக்கு அதில் பிரச்சனை இல்லை.
* சொந்த வீடு இல்லையென்றாலும் வசிக்க இடம் இருக்கிறது.
* பணம் அதிகம் செலவழியாமல் காரில் செல்லும் தூரத்தில் எத்தனையோ அருமையான இடங்கள், வாய்ப்புகள் இங்கே இருக்கின்றன.
* வாலன்டியர் சேவை செய்யக் கோவில்களும், சூப் கிச்சன்களும் நிறைய வாய்ப்புக் கொடுக்கின்றன.
* ஒவ்வோர் இடத்திலும் சத்சங்கங்கள் வார இறுதியில் நடக்கின்றன. ஏதேனும் ஒன்றில் தொடர்ந்து பங்கேற்றால்கூட, மனக்கசப்பும் மனப்பளுவும் எவ்வளவோ குறையும்.
* நம் வீடு எத்தனை சதுர அடி என்று பார்க்காமல், வைத்திருக்கும் கார்களைப் பார்க்காமல், நமக்காகத் தோழமை கொள்ளும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் நம் வெறுமையை விலக்கிவிடும். பழக ஆரம்பித்து விடுங்கள்.

கடைசியாக ஒன்று சொல்கிறேன். உங்கள் கணவரும் நீங்களும் ஒரு அருமையான டீம். இரண்டு பேருமே குடும்பத்தை நன்றாக கவனித்துக்கொண்டு வருகிறீர்கள். உங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இருப்பதாக நீங்கள் எழுதவில்லை. ஒரு சிறிய, சிங்காரக் கூட்டில் நீங்கள் மூன்று பேரும் ஆனந்தமாக இருக்கிறீர்கள்.

வேலை விரைவில் கிடைக்கும். அதுவரை உங்களுக்கு அழகான
வாய்ப்பு. உங்கள் பெண்ணுடன் அதிக நேரம்; சமையலின் சுவை; சுடச்சுடக் கணவருக்கு உபசரிப்பு; உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்குக்கு அதிக நேரம் - ஆஹா, எத்தனை வாய்ப்புக்கள்!

Life is not fair for anybody. எல்லோருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் அடிவாங்கிக் கொண்டுதான் இருப்போம். வாழ்க்கை நம்மை எப்படி பாதிக்கிறது என்று சோர்வடையாமல், வாழ்க்கையை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதில்தான் உற்சாகமும் உந்துதலும் இருக்கிறது.

Cheers!

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com