கேரட் பர்ஃபி
இந்திய உணவுப் பொருட்களை அமெரிக்கர்களுக்கும், அமெரிக்காவில் வாழும் குழந்தைகளுக்கும் பிடித்த வண்ணம் செய்வது ஒரு தனிக்கலை. கேரட்டை அல்வாவாகச் சாப்பிடப் பிடிக்காதவர்களுக்கு இந்த ஊரில் செய்யும் பிரௌனி அல்லது லெமன் சதுரம் போல் செய்து கொடுக்கலாம். இதைப் பார்ட்டிகளுக்கு எடுத்துக் கொண்டு போவது சுலபம்.

தேவையான பொருட்கள்
கேரட் துருவல் - 1 கிண்ணம்
கோயா (கோவா) - 3/4 கிண்ணம்
சர்க்கரை - 1 1/2 கிண்ணம்
நெய் - 3/4 கிண்ணம்
பால் - 1/2 கிண்ணம்

செய்முறை
துருவிய கேரட்டைப் பாலுடன் சேர்த்து வேகவிடவும். அதில் கோவா, சர்க்கரை, நெய் கலந்து கிளறவும். கலவை கொதித்து, நன்றாகச் சேர்ந்து சுருள வரும்பொழுது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். நெய் தடவிய தட்டில் உடனடியாக கொட்டி ஆறவிடவும். ஆறியதும் வில்லைகளாகச் செய்து கொள்ளவும். எல்லோரும் சுவைக்கும் கேரட் பர்ஃபி ரெடி!

கமலா இராமசுவாமி,
கனெக்டிகட்

© TamilOnline.com