ஒரிசா பாலு
"ஆமை புகுந்த இடம் உருப்படாது" என்பதை மாற்றி, ஆமை செல்லும் வழியெல்லாம் பழந்தமிழர் சென்று உலகெங்கும் தமது அடையாளங்களை விட்டு வந்துள்ளனர் என்று சான்றுகளோடு நிறுவுகிறார் ஒரிசா பாலு என்கிற பாலசுப்பிரமணி. கடல்சார் ஆய்வாளர், தமிழார்வலர், பொறியியலாளர், திட்ட வரைவாளர், வரலாற்றாய்வாளர் என்று இவரைப் பலபட வர்ணிக்க முடியும். மாற்றுயிரி எரிபொருள் மற்றும் மரபுசாரா மருந்தியல் ஆய்வுகள் சார்ந்த நிறுவனம் ஒன்றன் இயக்குநரான பாலு, இந்தியாவெங்கும் பயணித்துத் தமிழனின் தொல்வரலாறு குறித்து ஆய்வு மேற்கொண்டவர். கல்லூரிகள், பல்கலைக்கழங்கள், கருத்தரங்குகள் மூலம் தனது ஆய்வில் அறிந்தவற்றைப் பகிர்ந்துவரும் இவர், தொலைக்காட்சி மூலமாகவும் கருத்துப் பரவல் செய்கிறார். மின்வலையின் பல வழிகளையும் இதற்குப் பயன்படுத்துகிறார். 'கடலார்' என்ற இதழின் ஆலோசகர். தென்காசி பராசக்தி கல்லூரியில் சிறப்புரையாற்றிவிட்டு அன்றுதான் சென்னை திரும்பியிருந்த அவரைத் தென்றலுக்காகச் சந்தித்ததிலிருந்து....

கே: கடல்சார் ஆய்வில் உங்களுக்கு ஈடுபாடு வந்தது எப்படி?
ப: அப்பா சுதந்திரப் போராட்ட வீரர். இரண்டாம் உலகப்போரில் பங்கேற்று, பின்னர் காந்திய வழிக்கு வந்தவர். அதனால் எனக்கு வரலாற்றின்மீது ஆர்வம். தமிழ் இலக்கியம், பண்பாடு, கலாசாரத்தின் மீதான ஆர்வங்களும் காலப்போக்கில் அதிகரித்தன. பள்ளியில் படிக்கும்போதே நண்பர்களுடன் சேர்ந்து கையெழுத்து இதழ் நடத்தியிருக்கிறேன். AMIE முடித்து எஞ்சினியராக இருந்த பின், ஒரு கொரியக் கம்பெனியின் திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். அப்போது இந்தியா முழுதும் சுற்றும் வாய்ப்பு வந்தது. பலதரப்பட்ட மக்களை, குறிப்பாக ஆங்காங்கே வசிக்கும் தமிழர்களை, சந்தித்தேன். அதன்மூலம் தமிழர்கள், அவர்தம் வரலாறு, தொன்மம் பற்றிப் பல தகவல்கள் தெரியவந்தன. அந்நிலையில் ஒரிசாவில் நிரந்தரப் பணி அமைந்தது. அதுதான் எனது ஆராய்ச்சிகளின் தொடக்கமானது.



கே: ஒரிசாவில் நீங்கள் செய்தது என்ன?
ப: ஒரிசாவில் தென்னிந்திய சங்கம் ஒன்று இருந்தது. அது தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னடர்களின் கூட்டமைப்பு. தமிழர்க்கென்று தனிச் சங்கம் இல்லை. அங்கிருந்த நண்பர்கள் இணைந்து புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கினோம். அதன் ஆரம்பகால உறுப்பினர்களில் நானும் ஒருவன். ஒருமுறை தமிழ்ச் சங்க வெளியீடு ஒன்றில் சுந்தர்ராஜன் ஐ.ஏ.எஸ். எழுதிய அந்தக் கட்டுரையில் கலிங்கத்துக்கும் தென்னிந்தியாவுக்கும் இருந்த தொடர்பு குறித்து எழுதியிருந்தார். இதைப்பற்றி யாராவது ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல விவரங்கள் தெரியவரும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஏன் இந்தத் தொடர்பை நாமே ஆராயக்கூடாது என்று எண்ணினேன். ஏற்கனவே எனது களப்பணி காரணமாக ஒரிசா முழுவதும் சுற்றித் திரிந்த அனுபவம் இருந்தது. அதனால் பல செய்திகளை நான் அறிந்திருந்தேன். குறிப்பாக, ஒரிசாவின் பிராம்ணி ஆற்றங்கரையில் சுமார் 35-40 அடி நீளமுள்ள அனந்தசயனப் பெருமாளின் சிற்பத்தைக் கண்டதைச் சொல்லலாம். ஒரே கல்லால் ஆனது அது. அதேபோல் மற்றொரு சிற்பத்தை நான் வேறோரிடத்தில் பார்த்திருந்தேன். இதைப்பற்றி விசாரித்தபோது இதை நாங்கள் (ஒரிய மக்கள்) செய்யவில்லை. தென்னிந்தியாவிலிருந்து வந்திருந்தவர்கள் முன்காலத்தில்செய்தது என்று சொன்னார்கள். அதை விரிவாக ஆராய்ந்தபோது அறிந்த வரலாற்றுப் பின்னணி என்னை வியக்க வைத்தது.

கே: என்ன அது?
ப: அந்தச் சிலை செதுக்கப்பட்ட காலத்தில் ஒரிசாவில் தமிழர் ஆட்சி நடந்திருக்கிறது. அரசியின் பெயர் திரிபுவன மகாதேவி. அவரது தந்தை பெயர் ராஜபந்தர் தேவரையர். முதலாம் நந்திவர்மனின் ஆட்சிக்காலத்தில் கொங்குநாட்டில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னன், தன் மகளை ஒரிய மன்னனுக்கு மணமுடித்திருக்கிறான் என்பதுதான் நான் அறியவந்த செய்தி. அந்தக் காலகட்டத்தில் பல்லவ நாட்டுச் சிற்பி ஒரிசாவுக்குச் சென்று அதைச் செதுக்கியிருக்கிறார். இன்றைக்கும் ஒரிசாவின் பல பகுதிகளில் கலிங்கப்பட்டினம், வணிகப் பட்டினம், மாணிக்கப்பட்டினம், தாமரா, பாலூர் எனப் பல தமிழ்ப் பெயர்கள் உள்ளன.



இந்தியாவின் மிகப் பழமையான கல்வெட்டு அங்கே உள்ளது. அசோகனுக்கும் முன்பு ஆட்சி செய்த கலிங்க மன்னன் காரவேலன் பற்றிய கல்வெட்டு. பொது சகாப்தத்துக்கு முந்தைய காலக் கல்வெட்டாகக் கருதப்படும் இதில் தமிழ் பற்றி நான்கு செய்திகள் கிடைக்கின்றன. முதல் செய்தி ஆவா என்ற மன்னனை வெற்றிகொண்டு அவன் பகுதிகளைக் கழுதையால் உழுத செய்தி. எதிரி நாட்டை வென்று கழுதையால் உழும் மரபு தமிழருக்குரியது. அத்திரி, ஆவா என்ற பழங்குடிகள் இன்றும் இருக்கிறார்கள். 'ஆவா' என்பதற்குக் குடிகளின் தலைவன் என்று பொருள். அடுத்த செய்தி 1300 ஆண்டுகள் ஒற்றுமையாக இருந்த த்ரமிள ஸங்கமாத்யத்தை (த்ரமிள தேசம் எனப்படும் தமிழ் தேசத்தை) தனது நாட்டுக்கு ஆபத்து என்பதால் முறியடித்தது. அடுத்த செய்தி பாண்டியர்கள் காரவேலனுக்கு அளித்த பரிசில்களைப் பற்றியும் நந்தர்கள் காலத்தில் பழுதாகிப் போன கால்வாய்களைச் சரி செய்தது பற்றியும் சொல்கிறது. நந்தர் காலம் அசோகனுக்கு முந்தையது.

அசோகனுடன் போரிட்டவன் காரவேலனாகக்கூட இருக்கலாம். கந்தா என்னும் தமிழ்ப் பழங்குடியைச் சேர்ந்தவன் காரவேலன். அவன் சேதி வம்சத்துத் தமிழ் மன்னனாக இருக்கக்கூடும். தமிழ்நாட்டில் மலையமான் போன்றவர்கள் அவ்வம்சத்தைச் சார்ந்தவர்கள். அந்தக் காலத்தில் அவன் டிம்ட்ரஸ் என்ற மன்னனை விரட்டிய செய்தியும் கல்வெட்டில் காணக் கிடைக்கிறது. இந்த ஆய்வுகள் எனது கடல்சார் ஆய்வுகளுக்கு அடிப்படை ஆயின. ஒரிசா நண்பர்கள், தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்த பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். போன்றவர்கள் என்னை உற்சாகப்படுத்தினர். பாலகிருஷ்ணன் இடப்பெயர் பரவலை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அதாவது எப்படி தமிழ்ப் பெயர்கள் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது என்பதைப் பற்றிய ஆய்வு. அது எனக்குத் தூண்டுகோலாக இருந்தது.

கலிங்கத்துக்கும் தமிழகத்துக்கும் உள்ள தொடர்பை, கள ஆய்வு, கல்வெட்டு, நாட்டார் வழக்கியல், தக்ஷிணபாதம் என்று சொல்லப்படும் கன்னியாகுமரி தொடங்கி இமயம் வரையிலான பெருவழிகள் போன்றவற்றின் அடிப்படையில் ஆய்ந்தபோது பல செய்திகள் தெரியவந்தன. பழங்குடிகள் மூலமும், அங்குள்ள அரச குடும்பத்தினர், ஜமீந்தார் போன்றோரை ஒருங்கிணைத்தும் இந்த ஆய்வுகளைச் செய்தேன். அப்போது வந்தது ஒரு திருப்புமுனை.

கே: என்ன திருப்புமுனை?
ப: நான் ஒலாங்கீன் என்றொரு இடத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு சந்தானகோபாலன் ஐ.ஏ.எஸ். அவர்கள் கலெக்டராக இருந்தார். அவர் என்னிடம், "நீங்கள் பழங்குடிகள் பலரைச் சந்தித்து, அவர்களுக்கும் தமிழர்களுக்குமான தொடர்பைக் கண்டறிந்திருக்கிறீர்கள். கலிங்கத்துப்பரணியில் குறிப்பிடப்படும் குலோத்துங்கனை எதிர்த்துப் போரிட்ட அனந்தவர்மன் சோழகங்கன் தமிழ் மன்னன் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள். தெலுங்குச் சோழர்கள் ஒரிசாவை ஆண்டது, ராமானுஜருக்கும் ஒரிசாவுக்கும் உள்ள தொடர்பு பற்றியெல்லாம் ஆராய்ந்திருக்கிறீர்கள். ஒரிசாவில் வாழும் தமிழ்சார்ந்த முதலி போன்ற சமூகங்கள் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள். நீங்கள் ஏன் தமிழின் தொன்மை பற்றி, லெமூரியாபற்றி ஆய்வு செய்யக்கூடாது?" என்று கேட்டார். "எனக்கு அந்தத் தகுதி இருப்பதாக நான் நினைக்கவில்லை" என்றேன். அதற்கு அவர், "இல்லை. இவ்வளவு ஆய்வுகள் நிகழ்த்தியிருப்பதே உங்களுக்கு அடிப்படைத் தகுதி. நீங்கள் செய்யவேண்டும்" என்றார்.

கன்னியாகுமரி கடலில் பல பகுதிகள் நீருள் மூழ்கி இருப்பதையும் அவர் கணினி சேடலைட் வரைபடம் மூலம் காண்பித்தார். நான் அப்போது வெளிநாட்டுக் கருவிகளைப் பழுதுபார்க்கும் பணியில் இருந்தேன். ஆமைகளின் இடப்பெயர்வு பற்றி அறிய அவற்றின் முதுகில் பொருத்தப்படும் கருவிகள் பழுதானால் அவற்றைச் சரிசெய்து கொடுக்கும் பணி என்னது. ஆமைகள் எங்கிருந்து, எப்படி, ஏன் கடற்கரைக்கு வருகின்றன, எப்படிப் போகின்றன என்பவற்றை நான் ஆராய அது உந்துதலாயிற்று. அதன்மூலம் நான் கண்டறிந்த உண்மைகள், லெமூரியா பற்றிய ஆய்வுக்கு மிகவும் உதவின.

கே: ஆமைகள் உங்கள் ஆய்வுக்கு உதவின என்றால் வியப்பாக உள்ளதே, எப்படி?
ப: ஆம். ஆமைகள் பல ஆயிரம் மைல் பயணம் செய்யக்கூடியவை. ஆமை முட்டையிட்ட இடத்தில்தான் அதன் சந்ததியும் முட்டையிட வரும். இது இன்று நேற்றல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிகழும் உண்மை. RFID எனப்படும் செயற்கைக்கோள் உதவியுடன் ஆராய்ந்தபோது ஆமைகள் குறுகிய காலத்தில் பல்லாயிரக் கணக்கான மைல்கள் கடந்து வந்திருப்பதை அறியமுடிந்தது. ஒரு நாளைக்கு 85 கி.மி. தூரமே நீந்திக் கடக்க முடிந்த ஆமைகள், பல்லாயிரம் மைல்களைச் சிலநாட்களில் கடந்து வருவது எப்படி சாத்தியம் என்று ஆராய்ந்த போதுதான் கடல்நீரோட்டம் பற்றி அறிந்தேன். Ocean currents எனப்படும் இவற்றில் அவை மிதந்தபடி விரைந்து ஆயிரக்கணக்கான மைல் பயணிக்கும் விஷயம் தெரியவந்தது. அவற்றின் பாதை பர்மா, மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, மெக்சிகோ எனப் பல நாடுகளின் கடற்கரை வழி பயணப்பட்டது தெரியவந்தது.

அவ்வழிகள் அனைத்திலும் துறைமுகங்கள் இருந்ததுடன் அவற்றில் பலவும் தமிழர்களின் பெயர்களுடனோ அல்லது தமிழ் கலாசாரத்துடனோ தொடர்பு கொண்டவையாக இருந்தன. பர்மாவின் தமிழா, மலேசியாவின் சபா சந்தகன், ஆஸ்திரேலியாவின் குமரா, கூழன், சோழவன், பசிஃபிக் பகுதியின் குமரி, நான்மாடல், மெக்சிகோவின் சோழா, தமிழி என்று எல்லா இடத்திலும் தமிழ்ப் பெயர்கள்! ஆமை செல்லும் இவ்வழியேதான் தொல்தமிழன் உலகெங்கும் பரவியிருக்க வேண்டும். ஆமை சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்கள் மட்டுமல்லாது சில பகுதிகளில் பழங்குடியினரின் மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியனவும் தமிழோடு தொடர்புள்ளதாக இன்றளவும் இருந்து வருகின்றது. ஆக, நிலவழிப் பயணங்கள் ஒருபுறம் இருக்க, உலகளாவிய தொடர்புக்குக் கடல்வழியையே ஆதிதமிழன் பயன்படுத்தியிருக்கிறான் என்பதற்கு இவை சான்றுகள்.



கே: நாகரிகமடைந்த முதல் மனிதன் தோன்றியது தமிழகத்தில்தான் என்பது உங்கள் கருத்து. எப்படி அதை அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?
ப: தாவரங்களையும், விலங்குகளையும், பறவைகளையும் முழுமையாகப் புரிந்து கொண்டவன் தமிழன். நாரை வழி கடல் வழியையும், யானை வழி நிலவழியையும் அவன் கண்டறிந்திருக்கிறான். விலங்குகள் உண்ணும் தாவரங்களை வைத்து அவன் நிலவியலைப் புரிந்து கொண்டிருக்கிறான். வெப்ப மண்டல உணவுப் பொருட்களைக் குளிர் பிரதேசங்களில் வாழ்பவர்கள் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். மருந்தே உணவு; உணவே மருந்து என்பதைத் தமிழன் பின்பற்றியிருக்கின்றான்.

இந்தியாவின் தொல் கற்கால ஆய்வுத் தந்தை என அழைக்கப்படும் ராபர்ட் ப்ரூஸ் ஃபுட் (Robert Bruce Foote), கற்கால மனிதன் வாழ்ந்த இடம் தென்னிந்தியா என்று தீர்மானமாகச் சொல்லியிருக்கிறார். 21 வருடமாகத் தமிழகத்தில் ஆய்வு செய்துவரும் சாந்தி கபூர் தன் ஆய்வில் 17 லட்சம் வருடம் முன்பு இங்கே மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று பதிவு செய்திருக்கிறார். நானும் இந்த ஆய்வை மேலே தொடரும்போது ஆஸ்திரேலியா, தென்னமெரிக்கா என்று உலகின் பல இடங்களிலும் நம் மக்களின் தாக்கம் இருப்பதும், அவை பழங்குடிகள் வழியாகப் போயிருப்பதும் தெரியவந்தது. அதற்குக் கடல் ஆதாரமாக இருந்திருக்கிறது.

முதல் நாகரிகம் அடைந்த மனிதன் தமிழன்தான். உலகம் முழுக்க இருக்கும் உழவுத்தொழில் முறைகளை ஆராய்ந்து பார்த்தால் அதில் தமிழர்களின் தாக்கம் தெரிகிறது. அதுபோல உணவு முறைகளில், நெசவுத் தொழிலில், கப்பல் கட்டும் தொழிலில் தமிழர்களின் தாக்கம் நிறைய உள்ளது. இந்தியாவில் 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கப்பல்கள் இருந்திருக்கின்றன. ஆனால் டச்சுக்காரர்கள், ஃப்ரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தபோது அவர்களிடம் 450 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட கப்பல்கள்தாம் இருந்தன. நீராவிக்கப்பல் வருவதற்கு இவை தடையாக இருக்கவே 'கள்ளத்தோணி' என்று பெயர்சூட்டி அவற்றை நசுக்கிவிட்டனர். இந்த ஆய்வுகள் மூலம் உலகில் முதல் கடலோடிகள் தமிழர்கள், முதல் மொழி தமிழ், முதல் இனம் தமிழினம் எனத் தெரிந்து கொள்ளலாம்.

கே: சரி, உங்களது லெமூரியா பற்றிய ஆய்வுகளை விளக்குங்கள்...
ப: 1989ல் ஒரிசாவிற்குச் சென்ற நான் 2009ல் தமிழகத்திற்கு வந்தேன். 2007ல் நான் டில்லி சென்றிருந்தபோது பேரா. நாச்சிமுத்து, வடக்குவாசல் பென்னேஸ்வரன் போன்றோர் எனது ஆய்வுகளைப் பற்றிக் கேள்விப்பட்டு ஊக்குவித்தனர். தமிழ்நாடு தொல்லியல் துறையின் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேச ஆலோசனை கூறினர். கோவையில் அந்த நிகழ்வில் நான் பேசினேன். அதன்மூலம் கன்னியாகுமரியில் இருக்கும் செந்தி. நடராஜன் உள்ளிட்டோரின் நட்பு எனக்குக் கிடைத்தது. அவர்மூலம் கன்னியாகுமரி கள ஆய்வுக்குச் சென்றேன்.

புவியியல் அடிப்படையில் ஓரிடத்தை ஆய்வது எனது ஆய்வுநெறி. முதல்கட்ட ஆய்வாக கடலில் மூழ்கிய நிலப்பகுதிகளை ஆய்ந்தோம். இதற்காக, சேடலைட் தொழில்நுட்பம், அடிப்படைத் தொழில்நுட்பம் மற்றும் மீனவர்களுடைய அனுபவ அறிவைப் பயன்படுத்திக் கொண்டோம். லட்சத்தீவுகளில் இருந்து மடகாஸ்கர் தீவுகள் வரையிலும், எங்கெங்கே கடலில் ஆழங்குறைந்த பகுதிகள், மலைகளின் எச்சங்கள் இருக்கின்றன என்பதையும், அங்கிருக்கும் மீன்வளம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டோம். கடலுக்குள் சென்று பார்த்ததில் மூழ்கியிருந்த 'ஆடுமேய்ச்சான் பாறை'யைக் கண்டுபிடிக்க முடிந்தது. தொடர்ந்து ஆய்ந்து உலகத்திலேயே மீன்கள் அதிகமாக இனப்பெருக்கம் செய்யக்கூடிய 11560 ச.கி.மீ. பகுதி கடலுள் மூழ்கியிருப்பதைக் கண்டறிந்தோம். மணப்பாடு முதல் விளிஞ்சமலை வரை உள்ள 130 கி.மீ. நீளப்பகுதியில் 300 மீ. ஆழம் உள்ள மண்ணுக்குள் புதையுண்ட சுமார் ஏழு இடங்களைக் கண்டுபிடித்திருக்கிறோம். தேங்காப்பட்டினம், ராஜாக்கமங்கலம், மணக்குடி, விவேகானந்தர் பாறை, ஆயிரங்கால் குடிமுகம், ஆடுமேய்ச்சான் பாறை போன்ற இடங்களில் இவை உள்ளன. இதுதவிர 53 கி.மீ. முதல் 75 கி.மீ. வரை கடலுக்குள் புதையுண்ட இடிபாடுகளையும், கோயில்கள், மண்டபங்கள் போன்றவற்றின் பகுதிகளையும் கண்டுபிடித்துள்ளோம். அதாவது 22 கி.மீ. அகலம், 44 கி.மீ. நீளம் உள்ள 1000 ச.அடி பரப்பளவுள்ள தீவு கடலுள் மூழ்கியிருக்கிறது. அந்தத் தீவை பழங்காலத்தில் 'மரிக்கினா' என்று கூறியுள்ளனர். சிலப்பதிகாரத்தில் வரும் "பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள" என்ற குறிப்புக்கு இது பொருத்தமாக இருக்கிறது. இது துறைமுகமாக இருந்திருக்கிறது. இதுவே குமரிக்கோடாக இருந்திருக்கலாம். இதுதவிர லட்சத்தீவு உள்ளிட்ட கடல்பகுதிகளில் ஒரு பெரிய மலைத்தொடரே நீருள் மூழ்கி இருப்பது தெரிய வந்தது. இந்த மலைத்தொடரின் உச்சிகளே தீவாக இருக்கிறது.

இப்படி மடகாஸ்கர் வரை பல பகுதிகள் கடலுள் மூழ்கியுள்ளன. இன்றைய இலங்கையும் முன்னர் நம் பகுதியோடு இணைந்திருந்ததுதான். மடகாஸ்கரில் ஒரு எரிகல் விழுந்ததால் ஏற்பட்ட பாதிப்பால் நிலம் துண்டாகிக் கடலில் மூழ்கி, தற்போது பிரிந்துள்ளது. அதுதான் இன்றைய 'பாக் ஜலசந்தி'. வால்மீகி குறிப்பிடும் 'லங்காபுரி' என்பது வேறொன்றாக இருக்கலாம். அவர் உஜ்ஜயினிக்கு 23 பாகை நேர்கீழே 0 பாகையில் உள்ளதாக லங்காபுரியைக் குறிப்பிடுகிறார். 'லங்கா' என்றால் 'கடல்சூழ்ந்த' என்பது பொருள். அநேகமாக அது மாலத்தீவுக்குக் கீழே உள்ள 'சாயால்டி மில்ரா' என்பதாக இருக்கலாம். அது 40000 ச.அடி நீருள் மூழ்கியுள்ளது. 'நிரக்‌ஷ லங்கா' என்று வால்மீகி இதைக் குறிப்பிடுகிறார்.

கடலுள் மூழ்கியவை மட்டுமின்றி, கடலையொட்டிய நிலப்பகுதிகளும் நமது தொன்மைக்குச் சான்றாகின்றன. தமிழகத்தின் பாறை ஓவியங்கள், கல்வெட்டுக்கள், செப்புப் பட்டயங்கள், குகைகள், ஆற்றுவழி நாகரிகங்கள் மூலமும் நமது தொன்மைபற்றி விரிவாக அறியலாம். இன்றைக்கும் அவை காணக் கிடைக்கின்றன. கடல் பயணத்தின் மூலமே பழங்கால மனிதன் நமது கலாசாரத்தைப் பரப்பியிருக்கிறான். எப்படி யானைகளுக்கு வலசை செல்லும் பாதை இருக்கிறதோ அப்படியே ஆமைகளுக்கும் இருக்கிறது. அதன் வழியே ஆதிதமிழன் பயணம் மேற்கொண்டு தன் நாகரிகத்தைப் பரப்பியிருக்கிறான்.

கீழை உலகையும் மேற்கு உலகையும் இணைத்தது தமிழகம்தான். சீனர்களுக்கு நேரடியாக கிரேக்கர்களைத் தெரியாது. ஆனால் இருவரையும் தமிழனுக்குத் தெரியும். இப்படிப் பல நாட்டினருக்கு வியாபார ரீதியாக இணைப்புப் பாலமாக இருந்தவன் தமிழன்.
புதுச்சேரியின் அரிக்கமேட்டில் ஆராய்ந்தபோது இந்த உண்மை மேலும் வலுப்பட்டது.


கே: அதுபற்றிச் சொல்லுங்கள்...
ப: அரிக்கமேடு கடலுக்குள், 16 கி.மீ. தொலைவில், 40 மீட்டர் ஆழத்தில், 2. கி.மீ. நீளமுள்ள ஒரு மிகப்பெரிய மதில் சுவரைப் பார்த்தோம். அதை முதலில் ஜியாலஜிகல் ஃபவுண்டேஷன் என்று நினைத்தனர். ஆனால் அதை மேலும் ஆய்ந்தபோது, அது சங்ககாலத்துக்கும் முற்பட்டது என்பது தெரிய வந்தது. செம்பராங்கல் பாறைகளால் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. மேற்கு நாகரிகத்தின் தாக்கம் முழுக்க அரிக்கமேட்டில் இருக்கிறது. அரிக்கமேட்டிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் நிரம்பை என்ற இடத்தில் முழுக்கக் கீழை நாகரிகத்தின் தாக்கம் இருக்கிறது. ஆக, தமிழர்கள் கிழக்கிற்கும் மேற்கிற்கும் பாலமாக இருந்திருக்கிறார்கள். பின்னால் பௌத்த, சமண ஆதிக்கங்கள், இஸ்லாமிய, கிறித்துவ மதங்கள், படையெடுப்புகளின் தாக்கத்தினால் மொழிவாரியாக, பண்பாடு ரீதியாக வாழ்ந்த மக்களின் வாழ்வியல் மாறி, மதம் சார்ந்த மக்களாக மாறியிருக்கிறார்கள். திணை சார்ந்து, அதற்குரிய தொழில் சார்ந்துதான் அந்தக் காலத்தில் தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றனரே அன்றி சாதி சார்ந்து அல்ல. ஆனால், பின்னால் வேற்று மதங்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த காலத்தில் அது மாறி, சாதிப் பாகுபாடாக வளர்ந்து விட்டது.

இன்று புவி வெப்பமாதல், கடல் நீர்மட்டம் உயர்வது, சுனாமி பற்றியெல்லாம் பேசுகிறார்கள். அவற்றுக்கு அடிப்படை பூமியின் சுழற்சி, அதன் அச்சு மாறுதல், பனி உருகுதல், கடல்மட்டம் உயருதல், அதனால் நிலம் வேறுபடுதல் போன்றன ஏற்படுகின்றன. இந்த நிகழ்வுகளுக்கு ஆதாரமாக நாம் பல தரவுகளைச் சொல்லலாம். "எயிற்பட்டினம்" என்று சொல்லப்படும் பாண்டிச்சேரியில் கடலுள் மூழ்கியிருக்கும் மதில் சுவரையே இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அதில் கீழே படிக்கட்டுகள் உள்ளன. தங்கும் அறைகள் உள்ளன. மேலே கலங்கரை விளக்கம் இருந்ததன் அடையாளங்கள் உள்ளன. இரண்டு சுவர்களுக்கிடையே மண் கொட்டி வைத்திருந்த சுவடு தெரிகிறது. இரண்டு ஆறுகள் கடலில் கலக்கும் இடத்தில் இந்த மதில் சுவர் கட்டியிருப்பதற்கான அடையாளம் தெளிவாகத் தெரிகிறது.

பாண்டிச்சேரி அரிக்கமேடும், நிரம்பை அருகில் இருக்கும் தென்பெண்ணை ஆறும் ஒரு சாய்வான கோணத்தில் கடலில் கலக்க, அவற்றுக்கிடையே இந்தச் சுவர் எழுப்பப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. சிறுபாணாற்றுப்படை குறிப்பிடும் எயிற்பட்டினத்துடன் இந்த அடையாளம் வெகுவாகப் பொருந்துகிறது. அந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அத்தனை விவரங்களும் இதில் இருக்கின்றன. இதைக் கண்டபிறகு பழைய பிரிட்டிஷ் ஆவணங்களை அலசினோம். அப்போது ஜியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த தண்டபாணி, சென்னை கோவளத்திலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் வரிசையாக ஆங்காங்கே பவழப் பாறைகள் இருப்பதைச் சுட்டிக் காட்டினார். மேலும் ஆங்கிலேயர்கள் யாரும் கடலுள் குதித்து ஆய்வுகளைச் செய்யவில்லை; ஒலி அடிப்படையிலேயே ஆய்வுகளை மேற்கொண்டார்கள் என்று சொன்னார். ஆய்வுகளைத் தொடர்ந்தபோது, ஆறுகள் கடலுக்குள் வந்து கலக்கும் இடங்களில் ஆறு மதில் சுவர்கள் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. அதாவது, கடல் நிலத்துக்குள்ளே புகுந்திருக்கிறது. ஆக, எயிற்பட்டினம் கடலுக்குள் இருப்பது உண்மை. பூமி சுழற்சியில் அச்சு மாறும்போது நிலம் கடலுக்குள் செல்வதும், கடல் நிலத்திலிருந்து விலகிச் செல்வதும் நிகழ்வதுண்டு.

சங்க இலக்கியம் 2300 ஆண்டுகளுக்கு முந்தையது என்று நாம் நம்பி வருகிறோம். இதில் 16 கி.மீ. கடலுக்குள் தள்ளி, அதுவும் 40 மீட்டர் ஆழத்தில் எப்படி வரும் என்ற குழப்பம் எல்லோருக்கும் வந்தது. அதாவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மூழ்கி இருந்தால்தான் இது சாத்தியம் என்ற கருத்து இருந்தது. ஏனென்றால் பூம்புகாரில் 5 கி.மீ. தொலைவில் 23 மீ. ஆழத்தில் கடலுக்குள் மூழ்கி உள்ள இடத்தை, அதாவது சக்கரவாளக் கோட்டம் என்றழைக்கப்படும் U வடிவ இடத்தின் பழமைக்கு கிரஹாம் ஆட்காக் கணித்துச் சொன்ன வருடம் 11500 ஆண்டுகள். 5 கி.மீ.க்கு இவ்வளவு வருடம் என்றால் 16 கி.மீ, அதுவும் 40 மீட்டர் ஆழத்தில் உள்ள இடத்தை என்னவென்று கணிப்பது? அந்த ஆய்வு நடந்து கொண்டிருக்கின்றது.

கே: சுனாமியினால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு உண்டா?
ப: பூமியின் சுழற்சியும் அச்சு மாறுதலும்தான் சுனாமி, கடல் கோள், நிலம் விடுபடலுக்கான காரணம். தமிழர்களுக்கு சுனாமி புதிதல்ல. முதல் சங்க காலத்திற்கு முன்னமேயே நாம் கடலில் நிலத்தை இழந்திருக்கிறோம். மானாமதுரைவரை அந்தக் காலத்தில் சுனாமி வந்திருக்கிறது. இதற்காக, கடல் சீற்றத்தின்போது ஆறுகள் வழியே கடல்நீரை வெளியேற்றும் திறன் நம்மிடம் இருந்தது. ஆனால், மனிதன் ஆறுகளைத் தனக்கெனப் பயன்படுத்தத் தொடங்கியதும், கடலில் சேரும் நீரோட்டங்கள் பல நின்று போயின. அதனால் கடல் உள்ளே வர ஆரம்பித்தது.

இந்தத் தொழில்நுட்பத்தை முற்காலத் தமிழர்கள் மிகத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தனர். அவர்களுடைய சூழலியல் சிந்தனை மிகவும் மேம்பட்டிருந்தது. கடல் நீரினால் ஊர் அழிந்து போகாமல் இருக்க ஆற்றின் பக்கம் பல தீவுகள் கட்டி, கடலலையை உள்ளே வரவழைத்து பின் வெளியே போக வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு தொழில்நுட்பத்தில் மேம்பட்டவர்களாக இருந்தனர். இதைத்தான் "அலையாத்திக் கரை" என்று சொல்வர். அதன்வழியே பாய்மரக்கப்பலைக் கொண்டு வந்து பொருட்களை இறக்கி, பின் அலையின் வேகம் குறைந்த மற்றொரு வழியில் கப்பலைத் திருப்பி விட்டிருக்கின்றனர். இயற்கையை இயற்கையாலேதான் கட்டுப்படுத்த முடியும் என்பதை முன்னோடித் தமிழன் உணர்ந்து பின்பற்றியிருக்கிறான்.

உலகிலேயே இரண்டாவது மிகநீண்ட கடற்கரை நம்முடையது. 53 இடங்களில் ஆறுகள் கடலில் கலக்கின்றன. ஆனால் நாமோ ஆறுகளைத் தூர் வாராமல் வண்டல் படிய விட்டுவிட்டோம். அவை பயனற்றுப் போனதால் கடல்நீர் ஊருக்குள் புகுந்து சேதப்படுத்துகிறது.

கே: உங்கள் ஆய்வுகள் எல்லாமே தனிநபர் ஆய்வுகள்தாம். இதற்கு ஆதரவு எப்படி இருக்கிறது?
ப: ஆம். முழுக்கத் தனிப்பட்ட ஆர்வம் மற்றும் தேடலின் விளைவுதான் என் ஆராய்ச்சி. இதைக் கடல்துறை, நிலவியல், வானியல், மானிடவியல், வரலாற்றியல், இலக்கியம் எனப் பல துறைகளாகப் பிரித்துப் பணியாற்றி வருகிறேன். கடல்துறையை எடுத்துக் கொண்டாலே, கப்பல், கனிமவளம், மீன்கள் என்று பல உட்துறைகளாக விரியும். எனது ஆராய்ச்சிகு நல்ல வரவேற்பு இருக்கிறது.

கே: உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?
ப: குறளை எப்படி இன்று வாழ்வியல் நெறிகளுக்குப் பயன்படுத்துகிறோமோ அப்படித் தமிழனின் அறிவியல் சிந்தனைகளை, கோட்பாடுகளை, தொழில்நுட்பங்களை, மரபுசார்ந்த அறிவியலை வாழ்வியலுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது என் நோக்கம். அதற்காகத்தான் கடல்சார் ஆய்வுகளை நெறிப்படுத்த 'ஒருங்கிணைந்த கடல் பண்பாட்டு ஆய்வு நடுவம்' என்ற அமைப்பை நிறுவியிருக்கிறேன். இதன்மூலம் பல பிரிவுகளையும் ஒருங்கிணைத்து ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்வது என் எதிர்காலத் திட்டங்களுள் ஒன்று. கடல்சார் மேலாண்மையை உலகளாவிய நிலையில் கொண்டு செல்லும் எண்ணமும் உள்ளது. உலகளாவிய தமிழர்களை ஒருங்கிணைத்து இந்த ஆய்வுகளை விரிவாக்க வேண்டும்.

"தமிழ்ச் சங்கங்கள் தரும் பலமும் ஊக்கமுமே எனது ஆய்வுகளுக்கு ஆதாரம். இந்தியாவெங்கும் பல தமிழ்ச் சங்கங்களுக்குச் சென்று தமிழின் தொன்மையை விளக்கி உரையாற்றி வருகிறேன்" என்று கூறும் ஒரிசா பாலு, தமிழ்ச் சமூகம் உழைப்பாளி சமூகமாகவே நின்றுவிடாமல் தொழில்முனைவோர் சமூகமாக மாறினால் மட்டுமே முன்னேறும் என்கிறார். உண்மைதான் என்று மனதுக்குள் ஆமோதித்தபடி நாம் விடைபெறுகிறோம்.

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்

*****


எங்கும் தமிழ்
ஹீப்ரு மொழியுடன் நமக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. அதுபோல துருக்கி, மெக்சிகோவின் இன்கா நாகரிகம் எனப் பலவற்றுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இன்றைக்கு உலகத்தில் பேசப்படும் மொழிகளில் 14வது மொழியாக தமிழ் உள்ளது. இதே தமிழ் 2000 வருடத்துக்கு முன்பு உலகின் ஆறு மொழிகளுள் ஒன்றாக இருந்திருக்கிறது. இன்றைக்கு உலகத்தின் தொன்மையான மக்கள் பேசிய மொழி எது என்பது பற்றிய ஆய்வில் தமிழும் இடம்பெற்றுள்ளது. திராவிட மொழிகளில் மூத்தமொழி, தனிமொழி தமிழ்தான். இந்தோ ஐரோப்பிய மொழிகளில் 461 மொழிகளில் தமிழின் தாக்கம் உள்ளது. கந்தா, குயி, குவி, சவரா, குளிந்தா, குடியா, கிசான், ஓரான், குறுக் போன்றோர் இந்தியாவின் ஆதி பழங்குடியினர். இன்றும் இவர்களது வழக்குச் சொற்களில் தமிழ்ச் சொற்கள் உள்ளன. நம் சொற்கள் உலகின் பல இடங்களிலும் பயன்பாட்டில் உள்ளன. இரும்பு நாகரிகம் முதன்முதலில் தோன்றியதாகச் சொல்லப்படும் துருக்கியில் அதியமான், கரையாளர், கோமுகன், குமரி என்ற பெயர்கள் இருக்கின்றன. பல பழங்குடி மக்கள் பேசுகின்ற மொழிகளில், 80 விழுக்காடு தமிழ்ச் சொற்கள் கலந்து உள்ளன. 'கோண்டுவானா' என்பது, 'கந்தா' என்கின்ற தமிழ்ப் பெயர்தான். அதேபோல, ஒரிசா மாநிலத்தின் கடற்கரையோரத்து மீனவர்களைக் குறிக்கும் 'நெளலியா' என்பது, தமிழகத்தின் 'நுளையர்' என்பதன் திரிபுப் பெயர்தான். எனது ஆமைகள் பற்றிய ஆய்வுகளில் உலக அளவில் 17500 தமிழ் ஊர்களின் பெயர்களை நான் கண்டிருக்கிறேன்.

- ஒரிசா பாலு

*****


ஆமை போன பாதை
பர்மாவில் வடகிழக்குப் பருவக்காற்றுக் காலத்தில் பௌர்ணமி அன்று 'தமிழா காஞ்சி' என்ற ஐராவதி நதிக்கரையில் ஆமைகள் கடலுள் செல்லும் நேரத்தில் தேக்கு மரங்களை அடையாளமிட்டுக் கடலில் போட்டுவிடுவார்கள். அவை 3000 கி.மீ. மிதந்து நாகப்பட்டினம் துவங்கி தனுஷ்கோடி வரை வந்து சேர்ந்துவிடும். மரம் அனுப்பியது பற்றிய தகவலைப் புறாக்கள் மூலம் ஓலைச்சுவடியில் கட்டி அனுப்புவார்கள். கட்டாக், ராஜமுந்திரி போன்ற இடங்களில் வந்திறங்கும் அந்தப் புறாக்களிடமிருந்து தகவலைப் பெற்று, வேறு புறாக்கள் மூலம் தமிழகத்திற்கு அனுப்புவர். அவை உரியவர்களுக்குச் சென்று சேர, பின் அந்த மரங்களை யானை மீதேற்றிக் கொண்டுவந்து சேர்ப்பர். கடல்நீரோட்டம் அங்கிருந்து இங்கு வருகிறது. இதனைப் புரிந்துகொண்ட தொல்தமிழன் இவற்றோடு உலகம் முழுவதும் சென்றிருக்கிறான். மெக்சிகோவிலும் தமிழகத்திலும் இருக்கும் இடங்களில்தான் ஆமைகள் உலகிலேயே அதிகமாக முட்டை இடுகின்றன. இவையிரண்டும் ஒரே நேர்கோட்டில் இருக்கின்றன. ஆக இந்த ஆமைகளின் வழித்தடத்திலேதான் பழங்கால மனிதன் பயணப்பட்டிருக்கிறான். மிதப்பு, முகவை, கட்டுமரம் மூலம் பயணித்து, மொழியை, கலாசாரத்தை அவன் கொண்டு சென்றிருக்கிறான்.

- ஒரிசா பாலு

*****


மேலுமறிய:
விக்கிபீடியாவில்: en.wikipedia.org/wiki/Orissa_Balu
முகநூல்: www.facebook.com/orissa.balu
வலைப்பூ: balubpos.blogspot.in

© TamilOnline.com