எஸ்.வி.வி.
ஆங்கிலத்தில் எழுதிப் புகழ்பெற்றுப் பின்னர் தமிழுக்கு எழுதவந்த எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் கா.சி. வேங்கடரமணி. மற்றொருவர் எஸ்.வி. விஜயராகவாச்சாரியார் எனப்படும் எஸ்.வி.வி. இவரைத் தமிழில் எழுத வைத்த பெருமைக்குரியவர் கல்கி. ரா. கிருஷ்ணமூர்த்தி. 1880ல் பிறந்த எஸ்.வி.வி. திருவண்ணாமலையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். ஆங்கிலத் தேர்ச்சிகொண்ட இவர், தனது வக்கீல் தொழில் அனுபவங்களை மையமாக வைத்து An Elephant's Creed in Court என்னும் கட்டுரையை ஹிந்துவில் எழுதினார். "கோவில் யானைக்குச் சாத்துவது வடகலை நாமமா, தென்கலை நாமமா?" என்ற வழக்கை மையமாக வைத்து நகைச்சுவை ததும்ப எழுதப்பட்ட அந்தக் கட்டுரை, அவருக்கு புகழ்சேர்த்தது. தொடர்ந்து ஹிந்துவில் எழுத வாய்ப்பு வந்தது. 1926 முதல் ஹிந்து நாளிதழில் வாரந்தோறும் பல்வேறு தலைப்புகளில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதினார். ராஜாஜி உள்ளிட்ட பிரபலங்கள் ரசிக்கும் பகுதியாக அது புகழ்பெற்றது. பின்னர் "Soap Bubbles" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாகவும் வெளியானது.

இவற்றால் ஈர்க்கப்பட்ட கல்கி, அவரைத் தமிழில் எழுதவைக்க முயற்சித்தார். இதுபற்றி அவர் தன் கட்டுரை ஒன்றில், "எஸ்.வி.வி. தமிழர்களைப் பற்றி, தமிழிலேயே எண்ணி, தமிழர்களுக்காகவே எழுதுகிறார். பாஷை ஒன்றுதான் இங்கிலீஷ். அதையும் தமிழாகச் செய்துவிடுவது மிகவும் சுலபம். சந்தர்ப்பம் கிடைக்க வேண்டியதுதான். தமிழிலும் இவ்வளவு சரளமாகவும், இன்பமாகவும் எழுதுவார் என்பது சந்தேகமில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார். கல்கி, பின் திருவண்ணாமலைக்கே சென்று எஸ்.வி.வி.யை நேரில் சந்தித்து ஆனந்த விகடனுக்கு எழுதுமாறு வேண்டிக் கொண்டார். எஸ்.வி.வி.யின் முதல் கதை 'தாக்ஷாயணியின் ஆனந்தம்', ஆனந்த விகடன், ஜூலை 1933 இதழில் வெளியானது. அதற்கு வாசகர்களிடையே நல்ல வரவேற்புக் கிடைத்தது. ராஜாஜி, டி.கே.சி. உள்ளிட்டோர் அதைப் படித்துப் பாராட்டினர். "ஆங்கிலத்தில்கூட எஸ்.வி.வி இவ்வாறு எழுதியதில்லை" என்று புகழ்ந்துரைத்தார் ராஜாஜி.

எஸ்.வி.வி.யின் எழுத்து அசட்டுத்தனமான நகைச்சுவை அல்ல. வாழ்வின் அனுபவங்களிலிருந்து முகிழ்ந்த மேன்மையான நகைச்சுவையாகும். சமூகம், குடும்பம், யதார்த்த வாழ்க்கைச் சம்பவங்கள். அனுபவங்கள் போன்றவற்றின் தொகுப்பாக அவரது கதை, கட்டுரைகள் அமைந்தன. பின்னால் நகைச்சுவை எழுத்தாளர்களாக அறியப்பட்ட தேவன், துமிலன், நாடோடி எனப் பலருக்கும் முன்னோடி, வழிகாட்டி எழுத்தாளர் எஸ்.வி.வி.தான் எனலாம். எஸ்.வி.வி. ஆங்கிலம், தமிழில் மட்டுமல்லாது சம்ஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும், ஜோதிடம், இசை, விளையாட்டு போன்றவற்றிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். வழக்குரைஞரென்பதால் சமூகத்தில் பல்வேறு தரப்பட்ட மனிதர்களையும் அவர்களது பிரச்சனைகளையும் அறிந்திருந்தார். பெண் தேடுவது, மாப்பிள்ளை பார்ப்பது, வரதட்சணை, மாமியார்-மருமகள் பிரச்சனை, தம்பதிகளின் ஊடல், சம்பளத் தட்டுப்பாடு, வேலையில்லாப் பிரச்சனை, வாடகை வீட்டுத் திண்டாட்டம் முதல் சங்கீதப் புளுகு, அருள்வாக்கு, ஜோதிடம், அமானுஷ்யம், சமூகம், குடும்பம் என்று பலவற்றை உள்ளடக்கியதாக அவரது கதைகள் இருந்தன. புன்னகை முதல் குபீர் சிரிப்பு வரை வரவழைப்பதாக அவரது எழுத்து இருந்தது. அவற்றின் யதார்த்தம் வாசகர்கள் அவற்றைத் தேடித்தேடிப் படிக்க வைத்தன. அந்தக் காலத்து வாழ்க்கை, பொருளாதார நிலை, சமூகம், மக்களிடையே நிலவிய நம்பிக்கைகள் போன்றவற்றை அறியும் சான்றாதாரமாக எஸ்.வி.வி.யின் எழுத்துக்கள் திகழ்கின்றன. சமூகப் பிரச்சனைகளை வெளிப்படையாகப் பல கதைகளில் சொல்லியிருப்பதே அவரது எழுத்தின் பலம்.

க.நா.சு., "எஸ்.வி.வி. ஆரம்பத்தில் ஸ்டீஃபன் லீகாக், ஜெரோம் கே. ஜெரோம் பாணியில் பல கட்டுரைகள், கதைகள், தொடர்கதைகளை எழுதினார். பின்னர் 1938, 1939க்குப் பிறகு அவர் எழுதிய கதைகளிலும், கட்டுரைகளிலும அவருக்கே இயற்கையாக உள்ள ஒரு ஹாஸ்யமும், சிந்தனைத் தெளிவும் இடம்பெற்றன. லேசான, நம்மைச் சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தும் சித்திரங்கள் அவை. அவர் எழுதி ஐம்பது வருஷங்களுக்குப் பின் இப்போது இவற்றைப் படிக்கும்போது, மனித சுபாவம், முக்கியமாக இந்திய சமூகத்தின் சுபாவம் அப்படியொன்றும் அதிகம் மாறிவிடவில்லை என்று தோன்றுகிறது" என்கிறார். "எஸ்.வி.வி. தான் நகையாடிய மனிதர்களை கார்ட்டூன்களாக்கிவிடவில்லை. நம்மைக் கிளுகிளுக்க வைப்பதற்காக எந்த சம்பவத்தையும் செயற்கையாக கற்பித்துக் கொள்ளவில்லை. அதற்கெல்லாம் அவருக்கு அவசியமிருக்கவில்லை. அவர் தன்னைச் சுற்றியுள்ள உலகை, மனிதர்களை, வாழ்க்கையை தான் கண்டவாறே எழுதினார். அவை எதுவும் அவர் முகத்தில் ஒரு கேலிப் புன்னகையைத் தரத் தவறவில்லை." என்று மதிப்பிடுகிறார் விமர்சனப் பிதாமகர் வெ.சா.

'உல்லாஸ வேளை', 'செல்லாத ரூபாய்', 'ராமமூர்த்தி', 'கோபாலன் ஐ.சி.எஸ்.', 'சம்பத்து', 'ராஜாமணி', 'புது மாட்டுப்பெண்', 'வசந்தன்', 'வாழ்க்கையே வாழ்க்கை', 'பொம்மி', 'சௌந்தரம்மாள்', 'சபாஷ் பார்வதி', 'ரமணியின் தாயார்', 'ஹாஸ்யக் கதைகள்', 'தீபாவளிக் கதைகள்' போன்றவை எஸ்.வி.வி.யின் புகழ்மிக்க படைப்புகளாகும். 'Holiday Trip', 'Alliance At A Dinner', 'Marraige' போன்றவை ஆங்கிலப் படைப்புகள். கதை என்று குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லாமல் நகைச்சுவை ததும்ப எழுதப்பட்ட வாழ்க்கைச் சித்திர நூல் 'உல்லாஸ வேளை'. தந்தை, மகனுக்கிடையேயான பாசப் போராட்டத்தை, மையமாக வைத்து எழுதப்பட்டது 'ராஜாமணி'. 'ராமமூர்த்தி' குடும்ப உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டது. 'சம்பத்து' எஸ்.வி.வி.யின் படைப்புகளில் குறிப்பிடத் தகுந்தது. சராசரி ஆண்மனதின் எண்ணவோட்டங்களை சம்பத் என்னும் கதாபாத்திரத்தின் மூலம் படம்பிடித்துக் காட்டுகிறார் எஸ்.வி.வி. ஜனகம், நண்பனின் காதலி லலிதா, பக்கத்து வீட்டு ஐயங்கார் பெண் சம்பகா, லலிதாவின் தோழி சாரு எனப் பலதரப்பட்ட பெண் பாத்திரங்களைப் படைத்து சம்பத்துவின் எண்ணங்களை அவர்களோடு மோதவிட்டு இந்நூலில் வேடிக்கை பார்க்கிறார் எஸ்.வி.வி.

வாழ்வின் இறுதிக்காலம்வரை ஹிந்து, ஆனந்த விகடன் இதழ்களுக்காகவே எழுதினார் எஸ்.வி.வி. வெகுஜன வாசகர்களிடையே வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்ட எழுத்தாளர்களில் இவருக்கு மிகமுக்கிய இடமுண்டு. 1952ல் எஸ்.வி.வி. மறைந்தார். நூற்றாண்டு புகழ்மிக்க அல்லயன்ஸ் நிறுவனம் இவரது ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளது.

அரவிந்த்

© TamilOnline.com