தென்றல் பேசுகிறது...
பிரதமர் நரேந்திர மோதி ஐ.நா. சபை பொதுக்குழுவில் ஆற்றிய உரை அவரை ஒரு சிறந்த அரசியல் மேதையாகக் காண்பித்தது. அதற்கு முன்னர்தான் பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷரீஃப் காஷ்மீரைப்பற்றிப் புலம்பிவிட்டுப் போயிருந்த நிலையில், அதை ஒரு தெருச்சண்டையாக மாற்றாமல், "இதை நாங்கள் பேசித் தீர்க்கத் தயாராக இருக்கிறோம். முதலில் தீவிரவாதத்தின் நிழலைவிட்டு வெளியே வாருங்கள்" என்று பெருந்தன்மையாகக் கூறியதோடு, அதை ஐ.நா. சபையில் பேசவேண்டியதில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார். ஐ.நா. போன்ற பேரவை இருக்கையில் G-1, G-7 என்றெல்லாம் நாடுகள் சிறு குழுக்களாகக் கூடுவதை அவர் கண்டித்து, G-All என்று நாம் இருக்கலாமே என்று சாதுர்யமாகக் கூறினார். பாரதத்தின் வேத பாரம்பரியம் "வசுதைவ குடும்பகம்" (பூவுலகமே எங்கள் குடும்பம்) என்ற பார்வை கொண்டிருப்பதைத் தொடக்கத்திலேயே சுட்டிக்காட்டிய அவர், உலகநாடுகள் இணைந்து செயலாற்றினால்தான் தீவிரவாதம் உட்படப் பல பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்றார் உறுதியாக. மொத்தத்தில், உலகநாடுகள் பாரதத்தை மரியாதையோடு நிமிர்ந்துபார்க்க வைத்தார் என்று சொல்லலாம்.

*****


அமெரிக்காவும் இந்தியாவும் மிகப்பெரிய மக்களாட்சி நாடுகள் என்பதோடு மட்டுமல்லாமல், வேறுபல ஒன்றுபட்ட பண்புகளையும் கொண்டிருக்கிறது. ஹென்ரி டேவிட் தோரோவின் ஒத்துழையாமை தத்துவம் மகாத்மா காந்தியின் சத்தியாகிரஹத்துக்கு ஆதாரமானது. இதனைப் பின்பற்றி மார்ட்டின் லூதர் கிங் தமது அறப்போராட்டத்தை நடத்தினார். இரண்டு நாடுகளுமே வெவ்வேறு காரணங்களால் பொருளாதாரத் தேக்கநிலையில் இருந்தபின் இப்போது மீண்டும் வேலைவாய்ப்பு, நுகர்வோர் நம்பிக்கை, உற்பத்தி என்று பலவகைகளிலும் தலைநிமிரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக S&P இந்தியப் பொருளாதாரத்தைப் 'பின்னடைவு' என்ற நிலையிலிருந்து 'நிலைபெற்றது' என்று உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. "புதிய அரசின் கொள்கைகள் பொருளாதார வளர்ச்சிக்குச் சாதகமாக இருப்பதை இது காட்டுகிறது" என்று தொழில்துறைத் தலைவர்கள் சுட்டுகின்றனர். "Make in India" என்ற அறைகூவலையும் மோதி தொழிலதிபர்களிடம் வைத்திருக்கிறார். நம் இரண்டு நாடுகளும் கைகோக்க வேண்டுவது காலத்தின் கட்டாயம். இல்லையென்றால் என்ன ஆகும் என்பதை வாசகர்களின் ஊகத்துக்கே விட்டுவிடுகிறோம்.

*****


YouTube, NetFlix, Amazon, PriceLine, FaceBook போன்றவை உற்பத்தியாளருக்கும் நுகர்பவருக்கும் இடையே தடையற்ற ஆனால் பாதுகாப்பானதொரு பொதுவெளியை ஏற்படுத்தியுள்ளது. அதன் வலிமை மற்றும் வெற்றியை Alibaba.com பங்கு வெளியீட்டின்போது காணமுடிந்தது. இந்தியாவிலும் SnapDeal, FlipKart போன்றவை வெற்றி கண்டதோடு, நல்ல ஏஞ்சல் முதலீடுகளைப் பெற்றுள்ளன. இவையும் Alibabaவின் மாயவிளக்கைக் கையிலெடுக்கும் நாள் நாம் நினைப்பதைவிட அருகில் இருக்கலாம்.

*****


தேசிய அறிவியல் வாரியத்துக்கு அதிபர் ஒபாமாவால் நியமிக்கப்பட்டுள்ள பேரா. சேதுராமன் பஞ்சநதன் வியத்தகு பல்துறை ஆய்வாளர். ஆனால், "நான் செய்வதெல்லாம் கடவுளின் கைக்கருவியாகச் செய்கிறேன்" என்று செயல்முறை கர்மயோகம் பேசும் தமிழர். இந்த நேர்காணல் உங்களை மூக்கில் விரலை வைக்கச் செய்யுமென்றால் ஒரிசா பாலுவின் ஆய்வுகள் ஒரு தமிழராக உங்களைப் பெருமிதப்பட வைக்கும். ஆமைகளின் கடல்பாதையைப் பின்தொடர்ந்து சென்று, தொல்தமிழன் எப்படி உலகெங்கும் தடம் பதித்தான் என்பதை அவர் சுவைபடக் கூறுகிறார். செறிவான, நிறைவான இந்த இதழ் உங்களிடம் இருக்கையில், நாங்கள் சொல்ல என்ன இருக்கிறது!

வாசகர்களுக்கு காந்தி ஜயந்தி, தீபாவளி மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள்!

தென்றல் குழு

அக்டோபர் 2014

© TamilOnline.com