அரங்கேற்றம்: ஹர்ஷா ஐயர்
ஜூன் 28, 2014 அன்று, நிருத்யசங்கல்பா நாட்டியப்பள்ளி மாணவி செல்வி. ஹர்ஷா ஐயரின் பரதநாட்டிய அரங்கேற்றம் ராஸ்வெல் கல்சுரல் ஆர்ட்ஸ் சென்டரில் நடைபெற்றது. "வல்லப நாயக" என்ற கணேசர் வணக்கத்துடன் தொடங்கிய நிகழ்வு அலாரிப்புடன் தொடங்கியது. "சமுத்ர வசனே தேவி" என்ற சுலோகத்துக்கு, குரு சவிதா விஸ்வநாதனின் நட்டுவாங்கத்துக்கேற்றபடி, அருமையாக முத்திரைகள் பிடித்தார் ஹர்ஷா. ஜதிக்கும் தாளத்திற்கும் மட்டுமே ஆடவேண்டிய ஜதிஸ்வரத்தில் பாதவேலை அற்புதம்.

அடுத்து வந்தது, நாட்டியத்தின் அபிநயத்தை உள்ளடக்கிய சப்தம். "ஆயர் சேயர் அறிந்திடாமலும்" என்ற கிருஷ்ணனைப் பற்றிய பாடலில் "சுருண்டிருந்த குழல்கள் அசைந்திட, மருண்ட மானினம் மேய மறந்திட" மாயவன் குழலூதிய அழகை விதவிதமான நடன அமைப்புகளால் கண்ணனையும் கோபியரையும் கண்முன்னே நிறுத்தினார். பின்னர் வந்த வர்ணத்தில், திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராஜப் பெருமான் தன்னைப் புறக்கணித்ததால் ஏமாற்றமடைந்து, காக்க மறந்ததால் கோபமுற்று, மாறன் அம்புகளால் துன்புற்று, ஏங்கி, சிவன்மேல் கோபக் கணைகளைத் தொடுத்த ஹர்ஷாவை, அடுத்துவந்த பதம் சாந்தப்படுத்தியது. நாயகனைப் பிரிந்த சோகத்தைத் தோழியிடம் கூறிச் சமாதானம் அடையும், "தையலே உன்னை நினைந்துருகி" என்கிற பாடலுக்கு, மைலாப்பூர் கெளரி அம்மாளின் நடன அமைப்பு அருமை.
ராஜராஜேஸ்வரி அம்பாளைப் போற்றும் "அம்பா சாம்பவி சந்திர மெளலி ரபலா" என்ற பாடலில், காளி, ஹைமாவதி, பார்வதி என்று அம்மனின் அவதாரங்களையும் அழகையும் வர்ணித்தபோது மெய்மறந்தோம். அடுத்து வந்த தில்லானாவில், மெய்யடவு, கோர்வை, அனுபல்லவி, சாகித்யம், சரணம் என்று களைப்பின்றித் துள்ளலுடன் ஆடி, ஷீஜித் கிருஷ்ணாவின் மிருதங்கத்துடன் போட்டியிட்டாள் ஹர்ஷா. ஜோதிஸ்மதி ஷீஜித்தின் இனிய குரலுக்கு, ஹேமா பாலசுப்ரமணியனின் புல்லாங்குழல் இசையுடன் பிரசாத் மந்த்ரரத்னத்தின் வயலின் இசை உயிரூட்ட, "லோகா சமஸ்தா சுகினோ பவந்து" எனும் மங்களத்துடன் நிகழ்வு நிறைவுற்றது.

17 வருடங்களாக நாட்டியப் பயிற்சி அளித்துவரும் சவிதா, சென்னை கலாக்ஷேத்ரா நாட்டியப் பள்ளியில் பட்டம் பெற்றவர். பல நாடுகளில் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். நிறையப் பயிலரங்கங்களும், ஆதரவற்ற மாணவர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார்.

நான்கு வயதுமுதல் பாட்டும் பரதமும் பயின்றுவரும் ஹர்ஷா, நிருத்யசங்கல்பாவின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதோடு, சிறுவருக்கான ஆசிரியராகவும் உள்ளார். தன் பள்ளியில் பல சங்கங்களில் உறுப்பினராகவும், சேவா அமைப்பின் தலைவராகவும் இருக்கும் ஹர்ஷா, ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடங்கப் போகிறார்.

ஜெயா மாறன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com