ஆகஸ்ட் 24, 2014 அன்று 'தாயும் சேயும்' என்ற தலைப்பில் உண்மையிலேயே தாயும் மகளுமான உஷா ஸ்ரீனிவாசனும், ஊர்மிளா உடாலியும் ஆடிய பரதநாட்டிய நிகழ்ச்சி, விஷுவல் அண்ட் பெர்ஃபார்மிங் சென்டர், டீயன்சா காலேஜ், கூபெர்டினோவில் நடைபெற்றது. ஸ்ரீமதி.லாவண்யா ஆனந்த் (சென்னை), ஸ்ரீமதி. நவ்யா நடராஜன் மேனன் (சான்ட க்ளாரா) ஆகியோரின் சிஷ்யைகளான இவர்கள் ஒரு தாய்க்கும், குழந்தைக்கும் இடையிலான உறவிலுள்ள அன்யோன்னியத்தை நடனத்தில் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தினர்.
புஷ்பாஞ்சலியைத் தொடர்ந்து கமாசில் ஜதிஸ்வரமும் ஆடினர். நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் ஆகிய அம்சங்கள் அடுத்தாடிய வர்ணத்தில் துல்லியமாய் வெளிப்பட்டன. பேரா. ரகுராமன் எழுதி, திருமதி. எம்.எஸ். சுகி (கலாக்ஷேத்ரா )இசையமைத்த பாடலில் புராணக் கதைகள் இடம் பெற்றிருந்தன. பிள்ளையார், கார்த்திகேயன் ஆகியோர் பிறந்த கதை, கண்ணனைப் பிரிந்த தேவகியின் துயரம், தாய்சொல் காக்கத் தந்தையின் கோபத்துக்கு ஆளான பிள்ளையார், கானகத்தில் இடையூறுகளின் இடையில் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய சீதையின் அன்பு, குட்டிக் கண்ணனின் சிரிப்பில் தன்னிலை மறந்து அவன் குறும்புகளை மன்னிக்கும் யசோதா தாய்-சேய் உறவின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தினர் .
இரண்டாவது பகுதியில், முதல் பதமான "எதைக் கண்டு இச்சை கொண்டாய்" பாடலில், சிவன்மீது மகள் கொண்ட காதலைக் கண்டு கேள்வி கேட்கும் தாயாக, வெறுப்பு, வேதனை ஆகியவற்றை உஷா சிறப்பாக வெளிப்படுத்தினார். அடுத்து ஊர்மிளா அம்பாள் ஸ்துதிக்கு மிக அழகாக, நேர்த்தியாக ஆடினார். "மாடு மேய்க்கும் கண்ணே" பாடலுக்கு தாயும் மகளும் ஆடியது, ஒருவரைப் பார்த்தால் அடுத்தவரின் பாவத்தைத் தவற விட்டுவிடுவோமோ என்கிற அளவில் அமைந்தது. இறுதியில் சாவித்திரி ராகத் தில்லானாவோடு நிகழ்ச்சி நிறைவெய்தியது.
பதினோரு வயதே ஆன ஊர்மிளாவும், 5 வருடங்களாக நடனம் கற்கும் உஷாவும் தேர்ந்த நர்த்தகியர் போல ஆடினர் என்றால் மிகையல்ல. முரளி பார்த்தசாரதி (வாய்பாட்டு), எம்.எஸ். சுகி (மிருதங்கம்), நவ்யா நடராஜன் மேனன் (நட்டுவாங்கம்), என். வீரமணி (வயலின்) ஆகியோர் நிகழ்ச்சிக்கு சிறப்புச் சேர்த்தனர்.
தகவல்: ப்ரியா பாலா; தமிழில்: நித்யவதி சுந்தரேஷ் |